
மங்கல மஞ்சள்: தூய மஞ்சள் விதைகளிலிருந்து பெறப்பட்ட மஞ்சள் நாற்றுக்களைக் கொண்டு விதைமூலம் இனப்பெருக்கம் செய்யும் உற்பத்தியைக் கையாண்டு கண்டுபிடிக்கப்பட்ட இருவேறு புதிய மஞ்சள் ரகங்களில் 'பிரதிபா' என்ற மஞ்சள் ரகம் தனித்தன்மை வாய்ந்தது. 'பிரபா' என்ற மற்ற மஞ்சள் ரகம் பிரதிபாவின் இரட்டைப் பிறவியாகக் கொள்ளப் படுகிறது.
பிரபாவும், பிரதிபாவும் தாய்மஞ்சள் செடியிலிருந்து மேற்கொண்டு விதைத் தெரிவு முதல் முளைப்புத்திறன், பெருக்கம் ஆகிய ஒவ்வொரு நிலையிலும் மிகுந்த நுணுக்கமான பல்லாண்டு கால கடின உழைப்பிற்குப் பிறகு கோழிக்கோட்டில் உள்ள இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தால் புதிய மேம்படுத்தப் பட்ட நாற்று பரம்பரையாக தேர்வு செய்யப்பட்டது. இவற்றுள் தனது பிறவியில் நெகிழ்வுத் தன்மையால் 'பிரபா' மாற்றத்தை ஏற்றுக்கொண்டு எல்லா சூழலிலும் தன்மைஉடையதாக, வேளாண் பெருமக்களுக்கு ஏற்ற ரகமாக இருந்து வருகிறது. இது கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நன்கு விளைகிறது. தற்பொழுது தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மற்ற மாநிலங்களிலும் பரவுகிறது. (தகவல்: க.கனகதிலீபன், கள அதிகாரி, ஸ்பைசஸ் போர்டு, மயிலாடும்பாறை).
வாழை மருத்துவம்: சராசரி ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்குத் தேவையான பொட்டாசியத்தின் அளவு 1875 மில்லிகிராம் முதல் 5635 மில்லிகிராம் என கணக்கிடப் பட்டுள்ளது. இதை இயற்கையாகப் பெற தினமும் ஒரு சில வாழைப் பழங்களை (குறிப்பாக நேந்திரன் வாழை) சாப்பிடுவதன் மூலம் தேவையான அளவு பொட்டாசியம் கிடைத்துவிடும். இதனால் உயர் ரத்த அழுத்தம் (ஹைப்பர் டென்ஷன்) கட்டுப்படுத்தப் படுகிறது. அதாவது உயர் ரத்த அழுத்தத்தின் போது வெளியேறும் பொட்டாசியம் பற்றாக்குறையை வாழைக் கனிகளில் உள்ள பொட்டாசியம் செறிவு ஈடு செய்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
இரண்டு வாழைப்பழத்தையும் பாதி பப்பாளி பழத்தையும் துண்டுகளாக்கி அதன்மேல் சிறிது உப்பைத் தூவி, எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றி ஊறவைத்து நாள்தோறும் காலை, மாலை இரண்டு வேளை உண்டுவர மலச்சிக்கல் விலகும்.
வாழைக்கனிகளில் பல்வேறு வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் பொது குணங்களும் சிறப்பியல்புகளும் உண்டு. குறிப்பாக செவ்வாழை விளையாட்டு வீரர்களுக்கும், நெய் பூவன் குழந்தைகளுக்கானது என்றும், மருத்துவ குணங்களுக்கு சிறந்தது பூவன் என்றும் கருதப்படுகிறது.
வாழை இலையில் சுடச்சுட உணவைப்பரிமாறி சாப்பிடுவதால் அதிலுள்ள பச்சையம் உணவுடன் சேர்ந்து ரத்தத்தில் கலந்து உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. தோல் நோய்களையும் குணப்படுத்துகிறது.
வாழைத்தண்டை இடித்துச் சாறெடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் சிறுநீரகக் கல், சிறுநீர்ப்பாதையில் கிருமித்தொற்று ஆகியவை மறையும். (தகவல்: ரெ.அனிதா, சரஸ்வதி, வேளாண் அறிவியல் மையம், கரூர்-621 313. போன்: 04323-290 666)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

