நவீன தொழில்நுட்பம் நெற்பயிரைத் தாக்கும் வேர்முடிச்சு நூற்புழு
நவீன தொழில்நுட்பம் நெற்பயிரைத் தாக்கும் வேர்முடிச்சு நூற்புழு
PUBLISHED ON : ஜூலை 07, 2010
நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள்: நாற்றுக்கள் அதிக அளவில் மடிந்து நாற்றங்கால் எரியூட்டப்பட்ட தோற்றத்துடன் காணப்படும். நாற்றுகளின் வளர்ச்சி குறைந்து மஞ்சள் நிறத்துடன் காணப்படும். நூற்புழு தாக்குதலின் அறிகுறிகளாக பயிரின் இளம் பருவத்திலேயே தாக்கினால் பயிரின் வளர்ச்சி தடைபடுகிறது. இலைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறமாகவோ அல்லது மஞ்சள் நிறமாகவோ காணப்படும். இலைகள் ஓரங்களிலிருந்து உள்நோக்கி காய்ந்து வருவதைக் காணலாம். சல்லி வேர்கள் அனைத்தும் தாக்கப்பட்டு வட்டவடிவமான அல்லது நீள் வடிவமான கொப்புளங்களை வெளிப்படுத்துகின்றன. இக்கொப்புளங்கள் சிறுநீரக வடிவத்தில் வேர்களின் நுனியில் காணப்படும். கொப்புளங்களை நுண்ணோக்கி கொண்டு பார்த்தால் நூற்புழுக்கள் நகர்வதைக் காணலாம். மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் செடியைப் பிடுங்கி பார்த்து வேர் கொப்புளங்கள் இருப்பின் இந்நூற்புழு தாக்குதலை உறுதி செய்யலாம். நெற் பயிரினை நூற்புழுக்கள் மிகக் குறைந்த அளவே தாக்குவதாக கண்டறியப் பட்டுள்ளது. பொதுவாக குறைந்த நீர்ப்பாசன வசதியுடைய மணற்பாங்கான பகுதிகளில் விளைவிக்கப்படும் நெற்பயிரை இந்த நூற்புழுக்கள் அதிகம் தாக்குகின்றன.
இதுவரை இந்தியாவில் அசாம், மேற்கு வங்காளம், குஜராத், ஒரிசா, கர்நாடகா மற்றும் திரிபுரா மாநிலங்களில் வேர்முடிச்சு நூற்புழுவின் தாக்குதல் கண்டறியப் பட்டுள்ளது. தமிழகத்தின் எப்பகுதியிலும் நெல்லில் வேர்முடிச்சு நூற்புழு தாக்குதல் கண்டறியப்படவில்லை. தற்போது தஞ்சை மாவட்டத்தில் முதன்முறையாக பட்டுக்கோட்டை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இந்த நூற்புழுவின் தாக்குதல் நெல்லில் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளது.
நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்: வேர்முடிச்சு நூற்புழு தாக்கிய வயலில் கார்போ பியூரான் (பியூரடான்) குருணை மருந்தை எக்டருக்கு 33 கிலோவிற்கு குறையாமல் மணலுடன் கலந்து இடவேண்டும். சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற பாக்டீரிய எதிர் உயிர்க்கொல்லியை எக்டருக்கு 2.5 கிலோ வீதம் 50 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடுவதால் நூற்புழுவின் தாக்குதலை குறைக்கலாம். நிலத்தில் தொழு உரம், மக்கிய எரு போன்ற அங்கக பொருட்களை அதிக அளவில் கலப்பதால் நூற்புழுக்களின் எண்ணிக்கை குறைகிறது. களைகள் கட்டுப்பாடு அவசியம். நூற்புழு தாக்காத நாற்றுக்களை தேர்வு செய்து நடவேண்டும். பயிர் சுழற்சி முறையாக பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பை, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி ஆகியவற்றை பயிரிட வேண்டும். வேப்பம்புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ என்ற அளவில் இடவேண்டும். நூற்புழு தாக்காத நெல் ரகங்களான சி.ஆர்.1009, ஐ.ஆர்.20, டி.கே.எம்.8, டி.கே.எம்.9, எம்.டி.யு.1, எம்.டி.யு.2 ஆகியவற்றைப் பயிர் செய்ய தேர்ந்தெடுக்கலாம். (தகவல்: ப.லதா, ப.சாந்தி, சி.நடராஜன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பட்டுக்கோட்டை-614 602).
