
சோளம் சாகுபடி நுட்பங்கள்
ரகங்கள்: 'கோ.எஸ்.28':- வயது 100-105 நாட்கள். இறவையில் எக்டருக்கு 4568 கிலோ தானிய விளைச்சல், 126 டன் தட்டை விளைச்சல், குருத்து ஈ, கதிர் பூசண நோய் தாக்குதலை தாங்க வல்லது. திருநெல்வேலி, கடலூர், கோவை, தேனி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, சேலம் மற்றும் சோளம் பயிரிடும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றது.
கோ.(எஸ்) 30: வயது 105-110 நாட்கள். தானியம், தீவனத்திற்கேற்ற ரகம். மானாவாரியில் எக்டருக்கு தானிய விளைச்சல் 2780 கிலோ, உலர்தட்டு விளைச்சல் 6220 கிலோ, இறவையில் 3360 கிலோ தானிய விளைச்சல், 9500 கிலோ உலர்தட்டு விளைச்சல், குருத்து ஈ, தண்டு துளைப்பானுக்கு மிதமான எதிர்ப்பு, அடிச்சாம்பல் நோய்க்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது. மானாவாரி, இறவையில் தமிழகமெங்கும் சாகுபடி செய்ய ஏற்ற ரகம்.
'டி.என்.ஏ.யு. சோள ஒட்டு கோ.5: குறைந்த வயது, தானியம் மற்றும் தீவனத்திற்கேற்ற ஒட்டு ரகம். சாயாத தன்மை, மானாவாரியில் எக்டருக்கு 2800 கிலோ தானியம், 7600 கிலோ உலர் தட்டு விளைச்சல்; இறவையில் 4400 கிலோ தானியம், 10,500 கிலோ உலர் தட்டு விளைச்சல் கொடுக்கக்கூடியது. குருத்து ஈ, கதிர் பூசண நோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது.
பருவம்: சோளம் மானாவாரிப் பயிராக ஜூன் - ஜூலை (ஆடிப்பட்டம்) மற்றும் செப்டம்பர்-அக்டோபர் (புரட்டாசிப்பட்டம்) மாதங்களிலும் இறவையில் ஜனவரி - பிப்ரவரி (தைப்பட்டம்), மார்ச்-ஏப்ரல் (சித்திரைப்பட்டம்) மாதங்களிலும் பயிர்செய்யப்படுகிறது. ஜூன் - ஜூலை பருவத்தில் கோயம்புத்தூர், பெரியார், சேலம், திருச்சி, தென்ஆற்காடு, வட ஆற்காடு ஆகிய மாவட்டங்களிலும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பயிரிடப்படுகிறது.
பொதுவாக சோளம் அகலப்பாத்தி முறையில் பயிரிடப்படுகிறது. 2 மீ x 2 மீ அளவு பாத்திகளில் வரிசைக்கு வரிசை 45 செ.மீ. இடைவெளியும் செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளியும் கொடுக்க வேண்டும். குச்சிகளின் உதவியால் 3 செ.மீ. ஆழத்திற்கு கோடு போட்டு விதைகளை விதைக்க வேண்டும். இறவை சாகுபடிக்கு எக்டருக்கு 10 கிலோ (4கிலோ / ஏக்கர்) விதை போதுமானது.
விதை கடினப்படுத்துதல்: ஒரு எக்டருக்குத் தேவையான விதையை 2 சதம் பொட்டாசியம் டை நைட்ரஜன் பாஸ்பேட் என்ற ரசாயனத்தில் 6 மணி நேரம் ஊறவைத்து பிறகு 5 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண் டும். இவ்வாறு செய்வதால் தானிய விளைச்சல் அதிகரிக்கிறது.
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் கார்பன்டாசிம் (அ) திரம் கலக்க வேண்டும். குருத்து ஈயைக் கட்டுப்படுத்த குளோர்பைரிபாஸ் 20ஈசி (அ) பாசலோன் 35 இசி (அ) மானோகுரோட்டோபாஸ் 36 டபிள்யூ எஸ்சி மருந்தை ஒரு கிலோவிற்கு 4 மிலி என்ற அளவில் கலக்க வேண்டும். வளரும் பயிர்களுக்கு இயற்கை ஊட்டச்சத்து கிடைக்க ஒரு எக்டருக்குத் தேவையான விதையை 600 கிராம் (3 பாக்கெட்) அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்தோடு கலந்து விதைக்க வேண்டும்.
விதை விதைத்தவுடன் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 3ம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு நிலத்தின் தன்மைக்கேற்ப 8-10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாசனம் செய்வது அவசியம்.
மானாவாரிப் பயிருக்கு அடியுரமாக ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம், 40 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து இடவேண்டும். விதைத்த 30ம் நாள் பயிர் கலைத்து ஒரு களையும், 45ம் நாள் மற்றொரு களையும் எடுக்க வேண்டும்.
உர அளவு (எக்டருக்கு):
அடியுரம்:
தொழு உரம் 25 டன்
அசோஸ்பைரில்லம் 2 கிலோ
தழைச்சத்து 50 கிலோ
மணிச்சத்து 50 கிலோ
சாம்பல்சத்து 25 கிலோ.
மேலுரம்: 30வது நாள்
தழைச்சத்து 50 கிலோ.
சோளப்பயிரோடு ஊடுபயிராக தட்டைப்பயறு (அ) உளுந்து பயிரிடுவதால் 60 நாட்கள் வரை வயலில் களை இல்லாமல் இருக்கச் செய்யலாம். சோளம் தனியாகப் பயிரிடும்போது அட்ரசின் என்ற களைக்கொல்லி (500 கிராம்/எக்டர்); சோளத்தோடு ஊடுபயிராக உளுந்து பயிரிடும்போது அலகுளோர் என்ற களைக்கொல்லி மருந்தையும் பயன்படுத்தலாம். சோகையோடு ஊடுபயிர் சாகுபடி செய்யும்போது அட்ரசின் பயன்படுத்தலாம். (தகவல்: முனைவர் பா.செல்வி, வெ.வீரபத்திரன், சிறுதானியங்கள் துறை, த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003, போன்: 0422-245 0507).
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

