குதியரநூடிர் சடிகுபடி நுட்பங்கள்: தமிழ்நாட்டில் ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. இதன் உமி நீக்கிய அரிசி மிகவும் சத்தானது. சுவையானது. இதன் அரிசியைச் சமைத்து உணவாக உண்ணலாம். அரைத்து மாவாக்கி ரொட்டி தயாரிக்கலாம். வளமற்ற நிலம் கொண்ட உழவர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் இத்தாவரத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இது மாட்டுத் தீவனமாகவும் தானியமாகவும் மக்காச் சோளத்துடன் கலந்து பயிரிடப்படுகிறது.
பருவம்: மானாவாரி - குதிரைவாலி ஒரு அதிசயப்பயிராகும். வறட்சி, மண் உவர்ப்பு தாங்கி வளரக்கூடிய இப்பயிர் நீர் தேங்கிய நிலத்திலும் வளரும். இறவையாக சித்திரை, ஆடி, மார்கழிப் பட்டங்களிலும் மானாவாரியில் ஆடி, புரட்டாசிப் பட்டங்களிலும் பயிரிடப்படுகிறது. அனைத்து வகையான நிலங்களிலும் பயிரிடுவதற்கு ஏற்றது. ஆனாலும் செம்மண் இருமண் கலந்த நிலங்கள் மிகவும் உயர்ந்ததாகும்.
விதையளவு: விதை விதைக்க விதைப்பானை பயன் படுத்துவதன் மூலம் பயிர்களின் எண்ணிக்கை நன்கு பராமரிக்கப்படுவதால் அதிக விளைச்சலைப் பெறலாம். விதைப்பான் கொண்டு விதைப்பதற்கு ஏக்கருக்கு 10 கிலோ விதை தேவைப்படும். வரிசைக்கு வரிசை 22 செ.மீ. இடைவெளியும் செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளியும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
ரகங்கள்: கே.1. வயது 85 நாட்கள். மகசூல் 1000 கிலோ/எக்டர். கே2 - 90 நாட்கள். மகசூல் 1250 கிலோ. கோ-1 வயது : 110 நாட்கள். மகசூல் 1500 கிலோ. கோ(கே.வி)2 - 95 நாட்கள். மகசூல் 2114 கிலோ/எக்டர்.
ஒரு எக்டர் நிலத்தில் 5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது இட்டு உழவேண்டும். ஒரு ஏக்கருக்கு முறையே 40:20:20 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்களை உரமாக அளிக்க வேண்டும். விதைக்கும்போதே அடியுரமாக மணி, சாம்பல் சத்துக்களை முழுவதுமாக இடவேண்டும். தழைச்சத்தை மட்டும் பாதி அளவு இட்டு, மீதமுள்ளதை சரி பாதியாகப் பிரித்து மேலுரமாக இருமுறை விதைத்த 25-30, 40-45ஆவது நாட்களில் இடவேண்டும். பருவமழை சரியாக இல்லாத காலங்களில் மீதமுள்ள தழைச்சத்து 50 சதவீதத்தையும் ஒரே முறையில் மண்ணின் ஈரத்தன்மைக்கேற்ப மேலுரமாக இடவேண்டும்.
களை நிர்வாகம்: வரிசை விதைப்பு செய்திருந்தால் 2-3 முறை இடை உழவும் ஒருமுறை கைக்களையும் எடுக்க வேண்டும். கை விதைப்பு முறையில் 2 முறை கைக்களை எடுக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்: இறவையில் விதைத்த நாளும் விதைத்த 3ம் நாளும் தண்ணீர் கட்டவேண்டும். பின் தேவைக்கேற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் காட்ட வேண்டும். மானாவாரி நிலங்களில் பண்ணைக் குட்டைகளில் தேங்கி இருக்கும் நீரைத் தெளிப்பான் கொண்டு பூக்கும், பால் பிடிக்கும் நிலங்களில் தெளிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு: சரியான பருவத்தில் விதைக்கும் பொழுது எந்த வகை பூச்சி, பூஞ்சாணமும் அதிகமாக இந்தப் பயிரைத் தாக்குவதில்லை.
அறுவடை, சேமிப்பு: கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும். பின் கதிர்களைக் களத்தில் காயவைத்து அடித்து தானியத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். பின் இவற்றை நன்றாக காயவைத்து சுத்தம் செய்து காற்று புகாமல் சேகரித்து வைக்க வேண்டும். தானியங்களைப் பிரித்தபின் உள்ள தட்டையையும் நன்கு உலர்த்தி சேமித்து வைத்தால் வருடம் முழுவதும் கால்நடைகளுக்குத் தீவனமாகத் தரலாம்.
சந்தை நிலவரம்: ஒரு கிலோ குதிரைவாலி இருபது முதல் இருபத்தைந்து ரூபாய் வரை விற்கப்படுகிறது. குதிரைவாலி, பிற குறு தானியங்களில் உள்ள உணவுச்சத்துக்கள், அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளதால் எதிர்காலத்தில் இவற்றின் தேவை அதிகரிக்கும். ஒரு ஏக்கருக்கு 800 கிலோ தானிய விளைச்சல் கிடைத்தால் மொத்த லாபமாக ரூ.16,000 கிடைக்கும். ஏக்கருக்கு ரூபாய் 5000 செலவு என்ற போதும் நிகர லாபமாக ரூ.11,000 பெற முடியும். (தகவல்: முனைவர் அ.நிர்மல்குமார், முனைவர் பெ.வீரபத்திரன், செல்வி சு.ரேவதி, சிறு தானியத்துறை, த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422-245 0507).
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

