/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
இயற்கை வழி விதைநேர்த்தி நுட்பங்கள்
/
இயற்கை வழி விதைநேர்த்தி நுட்பங்கள்
PUBLISHED ON : டிச 04, 2024

ரசாயன இடுபொருட்களை தவிர்த்து மட்கிய வேளாண் கழிவுகள், தொழு உரம், பசுந்தாள் உரம், இயற்கையில் கிடைக்கக்கூடிய தாவர பொருட்கள், இயற்கை உயிரிகளை கொண்டு பயிர் மேலாண்மை செய்வதே அங்கக வேளாண்மை.
விதையை தேர்வு செய்தல்
விவசாயத்தில் விதை தேர்வு முக்கிய பங்கு வகிக்கிறது. சாகுபடிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விதைகள் சீரான அளவு, வயதுடன் நச்சுயிரி தாக்குதல் இன்றி முளைப்புத்திறன் அதிகமாக இருக்க வேண்டும்.
நெல்லில் விதை பிரித்தல்
நெல் விதைகளை தண்ணீரில் ஊறவைக்கும் போது மிதக்கும் பொக்கு விதைகளை நீக்கி விட்டு மூழ்கியிருக்கும் விதைகளை பயன்படுத்த வேண்டும். உப்பு கரைசல் முறையில் பிளாஸ்டிக் வாளியில் 10 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு மூடையை வைக்க வேண்டும். மூடை மூழ்கி மீண்டும் மேற்பரப்பை அடையும் வரை ஒன்றரை கிலோ அளவு உப்பை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். மிதக்கும் உயிரற்ற விதைகளை நீக்கவேண்டும். தரமான விதைகளை 2 அல்லது 3 முறை உப்பு கரைசல் நீங்கும் வரை கழுவ வேண்டும். இல்லாவிட்டால் விதையின் முளைப்புத் திறன் பாதிக்கப்படும்.
நெல்லில் விதை நேர்த்தி
நெல் விதைகளை சாக்கு அல்லது துணிப்பையில் கட்டி தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதை வெளியே எடுத்து ஈர சாக்குப்பையால் மூட வேண்டும். மறுபடியும் 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின்னர் அந்த விதைகளை நாற்றங்காலில் விதைப்பதன் மூலம் அவற்றின் முளைப்புத்திறன் அதிகரிக்கிறது.
மாட்டு கோமிய முறை
10 முதல் 15 கிலோ நெல் விதைகளை தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அரைகிலோ மாட்டுச்சாணம், 2 லிட்டர் கோமியத்தை 5 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். இந்த சாண கரைசல் தண்ணீரில் விதைகளை 5 முதல் 6 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்த வேண்டும்.
உயிர் உர விதைநேர்த்தி
உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், அசிட்டோ பேக்டரை ஏக்கருக்கு 1.25 கிலோ எடுத்து அரிசி கஞ்சியில் கலக்க வேண்டும். சுத்தமான தரையில் முளைகட்டிய விதைகளை பரப்பி அதன் மேல் உயிர் உர கூழ்மத்தை சேர்த்து கலக்க வேண்டும். விதைப்பதற்கு முன் விதைகளை நிழலில் 30 நிமிடம் உலர்த்தி பின் விதைக்க வேண்டும். விதைகளை சூரிய ஒளியில் அரைமணி நேரம் உலரவைத்து விதைத்தால் முளைப்புத்திறன், நாற்றுகளின் வீரியம் அதிகரிக்கும்.
தானியப்பயிர் விதைநேர்த்தி
ஒரு எக்டேருக்கு தேவையான மக்காச்சோள விதைகளை 600 கிராம் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்துடன் கலந்து விதைக்க வேண்டும். அல்லது 4 சதவீத சூடோமோனஸ் கரைசலில் 8 மணி நேரம் ஊறவைத்த பின் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
கம்பில் விதைநேர்த்தி
தேன்ஒழுகல் நோய் பாதிக்கப்பட்ட விதைகளில் பூஞ்சை நீக்க வேண்டும். ஒரு கிலோ உப்பை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து விதைகளை துாவ வேண்டும். தேன் ஒழுகல் நோய், பூஞ்சை இழை முடிச்சுகளால் பாதிக்கப்பட்ட விதைகளை நீக்கி நல்ல விதைகளை 3 முறை தண்ணீரில் அலச வேண்டும். 600 கிராம் அசோஸ்பைரில்லம், 600 கிராம் பாஸ்போ பாக்டீரியா அல்லது 1200 கிராம் அசோபாஸ் கொண்டு விதைகளை விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
சோளம் மற்றும் ராகி விதைகளை நாற்றாங்காலில் விதைப்பதற்கு முன் எக்டேருக்கு தேவையான விதைகளை 600 கிராம் அசோஸ்பைரில்லம், 600 கிராம் பாஸ்போ பாக்டீரியா அல்லது 1200 கிராம் அசோபாஸ் கொண்டு விதைகளை விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
பயறு வகைகளில் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். தமிழ்நாடு வேளாண் பல்கலை உருவாக்கியுள்ள ரைசோபியம் சி.ஆர்.யு. -7 உயிர் உரத்தை எக்டேருக்கு 600 கிராம் எடுத்து அதனுடன் கஞ்சி கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
விதைநேர்த்தி செய்யாவிட்டால் எக்டேருக்கு 2 கிலோ (10 பாக்கெட்) ரைசோபியம் உடன் 25 கிலோ தொழுஉரம், 25 கிலோ மணல் கலந்து விதைப்பதற்கு முன்னால் வயலில் இட வேண்டும்.
செல்வி ரமேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர்
வேணுதேவன், விதை அறிவியல் துறை உதவி பேராசிரியர்
வேளாண் அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை விருதுநகர், அலைபேசி: 81481 93645