/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அடுத்த வீட்டில் முட்டையிடும் கோழி
/
அடுத்த வீட்டில் முட்டையிடும் கோழி
PUBLISHED ON : ஜூன் 19, 2019

கிராமங்களில் குடும்பச் செலவை ஈடுகட்டும் வகையில் பல்வேறு கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். குறிப்பாக கிராம பெண்கள் கோழி வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டுவர். கோழி வளர்க்க குறைந்த முதலீடு, இடப் பிரச்னை இல்லை. குறைந்த பராமரிப்பு, எளிதாக விற்று காசாக்குதல் போன்ற யுக்திகளால் கோழி வளர்ப்பு மிக லாபம் தரும் தொழிலாக இருக்கிறது.
வெட்டப்படும் இறக்கை
கோழி வளர்ப்பிலும் சில இடையூறுகள் உள்ளன. நாம் வளர்க்கும் கோழிகள் சில சமயம் பக்கத்து வீடுகளுக்கு பறந்து சென்று தொந்தரவு கொடுக்கும். இதனால் அண்டை வீட்டார் முகம் சுளிக்கலாம். சில நேரங்ளில் மனக்கசப்பு ஏற்பட்டு மோதல் கூட உருவாகும். அது போதாது என்று சில கோழிகள் பக்கத்து வீடுகளுக்கு சென்று முட்டையிட்டு வரும். இதனால் கோழி முட்டை இட்ட வீட்டுக்காரர்களுக்கு குஷி. ஆனால் கோழி வளர்ப்பவர்களுக்கு இழப்பு நேரிடும். கோழிகள் பறந்து சென்று பக்கத்து வீடுகளுக்குள் புகுந்து விடும். அப்படி பறக்காமல் இருக்க கோழியின் ஒரு இறக்கை முடியை வெட்டி விட வேண்டும். இடது அல்லது வலது புறம் எதாவது ஒரு இறகின் நுனியை மட்டும் வெட்ட வேண்டும். இரு புறங்களிலும் வெட்டினால் கோழிகள் பறக்கத்தான் செய்யும். வெட்டும் போது ரத்தக்கசிவு ஏற்படாதபடி நுனிப்பகுதியை மட்டும் வெட்டினால் போதும்.
குப்பைக்குள் மறைதல்
பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு மிகக்குறைந்த அளவே தீவனம் கொடுப்பர். நகர்பபுறங்களில் கோழி வளர்ப்பவர்களின் நிலைமையும் இதுதான். பெருமளவு தீவனத்தை வெளியில் சென்று மேய்ந்து தான் ஈடுகட்டுகின்றன. கோழிகளுக்கு அவை வேண்டுமளவுக்கு தாராளமாக தீவனம் தரும்போது தான் அதை சாப்பிட்டு விட்டு வளர்க்கப்படும் இடங்களில் உலவும். அடுத்த வீடுகளுக்கு சென்று சிரமம் தராது.
கோழிகள் மகிழ்ச்சியாக குப்பைக்குள் தலைமை விட்டு சில சமயங்களில் ஒளிந்து கொள்ளும். அப்படி செய்தால் அவை போதுமான தீவனத்தை வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டன என அர்த்தம். இறக்கையின் நுனியை வெட்டுவதும், வயிறு புடைக்க தீவனத்தை கொடுப்பதுமே கோழிகள் அண்டை வீடுகளுக்கு செல்வதை தவிர்க்கும் வழி முறைகளாகும். தொடர்புக்கு 94864 69044.
- டாக்டர். வி.ராஜேந்திரன்,
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை.

