/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
முள் விளையும் பூமியில்... புல் வளர்க்கும் விவசாயி...
/
முள் விளையும் பூமியில்... புல் வளர்க்கும் விவசாயி...
முள் விளையும் பூமியில்... புல் வளர்க்கும் விவசாயி...
முள் விளையும் பூமியில்... புல் வளர்க்கும் விவசாயி...
PUBLISHED ON : மே 11, 2016

ராமநாதபுரம் மாவட்டம், முள்செடிகள் வளரும் பகுதியாக வறட்சி பூமியாக உள்ளது. இங்கு கருவேல மரங்களை வளர்ப்பதே பிரதான தொழிலாக உள்ளது. வறட்சி பூமியில் விவசாயி ஒருவர், 'மிட்சிகன் கிராஸ்' என்ற அலங்கார புல் வளர்த்து சாதனை படைத்து வருகிறார்.
ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஒன்றியம் நயினா மரைக்கான் கிராமத்தை சேர்ந்தவர் ஏ.ஆனந்தன்,65. இவர் தனது ஏழு ஏக்கர் விவசாய நிலத்தில், 'மிட்சிகன் கிராஸ்' என்ற அலங்கார புல் வளர்த்து வருவாய் ஈட்டி வருகிறார். பூங்காக்களில் தரையில் பசுமை கம்பளி போர்த்தியது போன்ற புல்தரை அமைப்பது இவரது கைவண்ணம்.
சென்னையில் நர்சரி நடத்தி வரும் இவரது சகோதரர்தான் இதற்கான முதலீடுகளை செய்துள்ளதாக கூறும் விவசாயி ஆனந்தன், தனது தொழில் ரகசியம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.
ஆனந்தன் கூறியதாவது: நிலத்தில் புல்வளர்த்து, ஒரு சதுர அடி ரூ.15க்கு விற்பனை செய்கிறோம். ஒரு சதுர அடி புல் வளர்க்க நடவு கூலி மட்டும் ரூ.2. தண்ணீர் பாய்ச்ச, களை பறிக்க என சதுர அடிக்கு ரூ.6 வரை செலவாகிறது. இந்த புல்வளர்ப்பு பணியில் 2 ஆண்கள், 17 பெண்கள் என, 19 பேர் வேலை செய்கின்றனர்.
சென்னை, தஞ்சாவூர், கோவை பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் புல் வாங்கி செல்கின்றனர். சென்னையில் உள்ள நர்சரிக்கு மட்டும் வாரம் ஒரு லோடு புல் எங்கள் வாகனத்திலேயே அனுப்பி வருகிறோம்.
சென்னையில் புல் தரை அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பொதுவாக கார்டன், பூங்கா அமைக்கும் போது புல்தரையும் அமைக்கின்றனர். அந்த வகைக்காக மட்டுமே முன்பு அதிகளவு வாங்கினர்.
இப்போது, அந்த நிலை மாறி வீடுகளில் புல்தரை அமைப்பதும், மாடிகளில் புல்தரை அமைப்பதும் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலின் வெப்பத்தில் இருந்து பாதுகாக்க இந்த புல்தரை அவர்களுக்கு உதவும் என்பதால் வீடுகளில் அதிகளவு வாங்குகின்றனர்.
மாடித் தோட்டங்களில் புல்தரை அமைப்பதால் வீட்டிற்கு குளிர்ச்சி கிடைப்பதுடன், மாடி புல்தரையில் காலார நடப்பது தனி சுகம் தரும். ஒரு புல்தரை அமைக்க குறைந்தது 6 முதல் 8 மாதங்கள் ஆகிறது. அப்போதுதான் நன்றாக வளர்ந்த புல்தரை நமக்கு கிடைக்கும். இப்பகுதியின் அருகே கடற்கரை இருந்தாலும் புல்தரை வளர்ப்பதில் பாதிப்பு இல்லை. இங்கு ஓரளவு தண்ணீர் நன்றாகவே உள்ளது.
முள் வளரும் பூமியில் இப்படி புல்தரையை வளர்ப்பதில் பெருமையாக உள்ளது. இதன் மூலம் நல்ல லாபமும் கிடைக்கிறது என்றார். தொடர்புக்கு 97866 50895.
- எஸ். பழனிச்சாமி, ராமநாதபுரம்.