/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
தோட்டக்கலைப் பயிர்களில் அங்கக வேளாண்மை
/
தோட்டக்கலைப் பயிர்களில் அங்கக வேளாண்மை
PUBLISHED ON : ஆக 14, 2013

தமிழக அரசு மூலம் அங்கக வேளாண்மைக்கு ஊக்குவித்திடும் முயற்சியாக 'அங்கக சான்றளிப்பு' உதவிகளும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் தொழில்நுட்ப உதவிகளும் நிறைய உள்ளன.
அங்கக சான்றளிப்பு ஒரு அவசிய தேவையாகும். இதற்கு ஆர்கானிக் ப்ராசசர் என்றும் ஆர்கானிக் ட்ரேடர் எனவும் இருவேறு விதமாக அபீடா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் சான்று வழங்கப்பட்டு வருகின்றது. அங்கக வேளாண்மை மூலம் விளைபொருள் உற்பத்தி செய்பவருக்கும் அங்கக விளைபொருளை பதனிடுவோருக்கும் 'ஆர்கானிக் ப்ராசசர்' என்ற சான்று தரப்படும். அங்கக விளைபொருட்கள் விற்பனை செய்வோருக்கு 'ஆர்கானிக் ட்ரேடர்' என்ற சான்று தரப்படுகிறது. இதன்மூலம் அங்கக வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ளோர் இந்த அரசு சலுகை மூலமாக அங்ககச்சான்று பெற தனிநபராகவோ, குழுவாகவோ, பெருவணிக நிறுவனங்களாகவோ பதிவு செய்துகொள்ளலாம். கால்நடை பராமரிப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் வனப்பொருட்கள் சேகரிப்பு செய்வோரும் இதில் பதிவு செய்து கொள்ளலாம்.
அங்கக இடுபொருட்களை வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். அங்கக சான்றளிப்பு மே 2007 முதல் மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல்திட்டத்தின்படியும் அபீடா நிறுவன வழிகாட்டுதல் மூலமும் தமிழ்நாட்டில் செய்யப்படுகிறது.
ஆண்டுப்பயிர்களுக்கும் பல்லாண்டுப் பயிர்களுக்கும் அங்கக சான்றளிப்பு தருவதற்கு கன்வெர்சன் பிரியட் எனப்படும் மாறும் காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு பயிர்களுக்கு சான்று பதிவு செய்த நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளும் பல்லாண்டு பயிர்களுக்கு சான்று பதிவிற்கு பிறகு மூன்று ஆண்டுகளும் மாறும் காலம் என்று நிர்ணயித்து சுற்றுச்சூழல் மற்றும் முந்தின நிலப் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு அனுசரிக்கப்படுகிறது. ஏற்கனவே அங்கக முறையில் தொடர்ந்து சாகுபடி செய்பவர்களாக இருந்தாலும் குறைந்தது 12 மாதங்கள் மாறும் காலமாக கடைபிடித்து அதற்குப் பிறகுதான் சான்று வழங்கப்படும். ஆனால் தொடர்ந்து அங்கக சாகுபடிசெய்தமைக்கு உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட வேண்டும்.
அங்கக வேளாண் சாகுபடியின் வருடாந்திர பயிர் சுழற்சியில் பயறுவகை பயிர்களும் சேர்க்கப்பட வேண்டும். இதனால் மண்வளம் மேம்படுத்தப்படுகிறது. அங்கக சான்று பெற திட்டமிட்ட பகுதியில் இயற்கை உரம், தாவர பூச்சிக்கொல்லிகள் பண்ணைக்கு வெளியில் இருந்து வாங்கி உபயோகப்படுத்தும் நிலை வந்தால் அதற்கு இந்த துறையின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.
மேலும் மண் அரிமானத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பகுதியில் தொழிற்சாலைகள், கழிவுநீர் ஓடைகள், அதிக உரம், பூச்சி மருந்து பயன்படுத்தும் பண்ணைகளின் அருகில் அங்கக சான்றுப் பண்ணைகள் இருக்கக்கூடாது. கால்நடைகள் பண்ணையிலேயே பராமரிக்கப்பட வேண்டும். கால்நடைகளுக்கு தீவனமாக தினமும் கூடியவரையில் பண்ணையில் விளைந்தவற்றையே பயன்படுத்த வேண்டும். வெளியில் இருந்து தீவனம் பெறப்படின் மாசு இல்லாத இடங்களில் விளைந்ததாக இருத்தல் வேண்டும்.
அங்கக சான்று பண்ணையில் கீழ்கண்ட 7 ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும். அவை தினசரி பணி பதிவேடு, இடுபொருள் பதிவேடு, உற்பத்தி பதிவேடு, விற்பனை பதிவேடு, பயிர் உற்பத்தி பதிவேடு, ஆண்டு பயிர்த்திட்டம் மற்றும் பரிசோதனைகள் பற்றிய விபரங்கள் ஆய்வின்போது காண்பிக்கப்பட வேண்டும். அங்கக சான்றளிப்பிற்கு விண்ணப்ப படிவம், பண்ணையின் பொது விபர குறிப்பு, பண்ணை வரைபடம், மண் மற்றும் பாசனநீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர் திட்டம், துறையுடனான ஒப்பந்தம் ஆகியன மூன்று நகல்களில் உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணங்களுக்கு வங்கி வரைவு டைரக்டர் ஆப் ஆர்கானிக் சர்ட்டிபிகேஷன், கோயம்புத்தூர் என்ற பெயருக்கு எடுக்கப்பட வேண்டும்.
தோட்டக்கலைப்பயிர்கள் குழுவாக உற்பத்தி செய்திட விவசாயிகள் திட்டமிடலாம். தனித்தனியாக விற்பனை செய்திட முயற்சி செய்யும்போது நல்ல விலை கிடைக்காத நிலை வருகிறது. இயற்கை விவசாய முறைகளை சான்று தருவதற்கு உள்ளூர் அல்லது உள்நாட்டு தரங்களுக்கு பதிவுக் கட்டணமாக சிறு, குறு விவசாயிகள் ரூ.500/-ம், பெரிய விவசாயிகள் ரூ.1000/-ம் செலுத்த வேண்டும். இதே பகுதிகளில் குழுவாக பதிவு செய்தால் ரூ.5000/- கட்டி நல்ல பலன்களை ஒருங்கிணைத்து பெறலாம். ஆண்டு புதுப்பித்தல் கட்டணமாக ரூ.25- கட்டி பயன்பெறலாம்.
தனிநபர் மற்றும் குழுவாக வாய்ப்புச் சான்றிதழ் பெற உள்நாட்டு தரத்திற்கு ரூ.1000/- மற்றும் வெளிநாட்டு தரத்திற்கு ரூ.1500/- கட்ட வேண்டும். அங்கக சான்று பெற ஆய்வு மற்றும் சான்று கட்டணம் ரூ.1000/- நாள் ஒன்றுக்கு தரப்பட வேண்டும். பயண நேர கட்டணமாக ரூ.200/-ம் உள்ளபடியான பயண செலவு கட்டணம் செலுத்த வேண்டும். வணிக நடவடிக்கை சான்று ரூ.500/- செலுத்தி பெறலாம். மண் மாதிரிகள், பாசன நீர் மாதிரிகள், இலை மாதிரிகள் மற்றும் உற்பத்தி பொருட்களின் மாதிரிகள் பரிசோதனை கட்டணம் உள்ளபடியான செலவும் கட்டப்பட வேண்டும்.
அங்கக வேளாண்மைக்கு மாறி சாகுபடி செய்தால் நல்ல விளைபொருள் பெற்று நல்ல விலைபெற இன்றே திட்டமிடுவீர். மேலும் ஆலோசனைக்கு: 98420 07125ல் தொடர்பு கொள்வீர்.
-பீ.இளங்கோவன், கோயம்புத்தூர்-641 041.

