PUBLISHED ON : டிச 25, 2024

பசுமை புரட்சியின் காரணமாக மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த வயதுடைய நெல் ரகங்கள், ரசாயன உரங்கள், பூச்சி, களைக்கொல்லி பயன்படுத்தப்பட்டதால் மண் மற்றும் நீர் மாசுபட்டதோடு மக்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சுற்றுப்புறத்தை வளமாக்கவும் மனித ஆரோக்கியத்திற்கும் அங்கக வேளாண்மை முறையில் நெல் சாகுபடி செய்வது அவசியம்.
அங்கக வேளாண்மையின் பயன்கள்
பாரம்பரிய மற்றும் மருத்துவ குணம் நிறைந்த ரகங்களான கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, துாயமல்லி, சீரக சம்பா, கிச்சடி சம்பா ரகங்களை அங்கக முறையில் சாகுபடி செய்தால் உடலுக்கு நல்லது. அங்கக முறையில் நெல் சாகுபடி மேற்கொள்ள அசோஸ்பைரில்லம், அசிடோபாக்டர், நைட்ரோபாக்டர், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனஸ் போன்ற நுண்ணுயிரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இவை வளிமண்டலத்தில் இருக்கும் தழைச்சத்தை கிரகித்து வழங்கவும், வளர்ச்சி ஊக்கியாகவும், துத்தநாகம், மணிச்சத்து, இரும்புச்சத்து, பிற சத்துகளை வேரின் மூலம் பயிருக்கு கிடைக்கும்படி செய்கின்றன. மேலும் பூச்சி, நோய் பாதிப்பிலிருந்து பயிர்களை காக்கின்றன. நெல்லைத் தாக்கும் பூச்சிகளை கவர்ச்சிப் பொறி பயன்படுத்தி அழிக்கலாம். ஆமணக்கு, செண்டுமல்லி பயிர்களை வரப்போரங்களில் வளர்த்தால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் ரசாயன பூச்சிக்கொல்லிகளின் மூலம் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்தமுடியும்.
நெல் அறுவடை செய்த பின் (நெல் தரிசு) உளுந்து சாகுபடி செய்வதால் அடுத்தபோக நெல் சாகுபடிக்கு ஏற்ற சத்துகள் மண்ணிற்கு கிடைக்கிறது. தரிசாக கிடக்கும் நிலத்தில் உளுந்து அறுவடை மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும். அங்கக முறையில் நெல் சாகுபடி மேற்கொள்ளும் போது சுற்றுப்புறமும் மனித ஆரோக்கியமும் காக்கப்படுவதால் விவசாயிகள் அங்கக வேளாண்மைக்கு மாற வேண்டும். விதைப்பதற்கு முன்பாக அரசு விதைப் பரிசோதனை மையங்களில் கொடுத்து அதன் ஈரத்தன்மை, முளைப்புத்தன்மையை பரிசோதிக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் அரசு விதைப் பரிசோதனை மையம் உள்ளது. மாதிரி கட்டணம் ரூ.80 செலுத்த வேண்டும்.
மகாலட்சுமி, விதைப்பரிசோதனை அலுவலர்
சாய்லட்சுமி சரண்யா, வேளாண்மை அலுவலர்
விதைப்பரிசோதனை நிலையம், விருதுநகர்