/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சிதறாத லாபம் தரும் சிப்பிக்காளான்
/
சிதறாத லாபம் தரும் சிப்பிக்காளான்
PUBLISHED ON : பிப் 12, 2025

மொட்டு காளானை ஒரு வாரம் வரை சேமிக்கலாம் என்றாலும் ஓரிரு நாட்களே தாங்கும் சிப்பி காளானுக்கான வரவேற்பு மக்களிடம் அதிகரித்துள்ளது. அதனால் மதுரை, கரூர், கோவையில் சிப்பிக்காளான் பண்ணை அமைத்து பராமரிப்பதோடு விவசாயிகளுக்கும் தொழில்நுட்பத்தை கற்றுத் தருகிறேன் என்கிறார் மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பி.டெக் பயோ டெக்னாலஜி பட்டதாரி முனீஸ்வரன். லாபம் தரும் தொழில்நுட்பம் குறித்து அவர் விவரிக்கிறார்...
பி.டெக் முடித்த பின் தமிழ்நாடு காகித தொழிற்சாலை நிறுவனத்தில் (டி.என்.பி.எல்.) ஆய்வக உதவியாளராக வேலை பார்த்தேன். அதன் பின் மதுரை காமராஜ் பல்கலையில் பயிற்றுநராக சேர்ந்தேன். தொழில்நுட்ப பட்டதாரி என்பதால் கரூரில் நண்பருடன் சேர்ந்து பகுதி நேரமாக சிப்பிக்காளான் வளர்ப்பு தொழிலை துவங்கினேன். அதன்பின் மதுரை வடபழஞ்சியில் தனியாக பண்ணை அமைத்து இப்போது நிறுவனமாக மாற்றியுள்ளேன்.
மலைப்பகுதிகளில் மொட்டு காளான் எனப்படும் பட்டன் மஸ்ரூம் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. ஆனால் (ஆய்ஸ்டர்) சிப்பிக்காளானின் சுவையும் வாசனையும் நன்றாக இருக்கும். எனவே சிப்பிக்காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகள், தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன்.
பண்ணை அமைப்பது, பராமரிப்பதில் தொடங்கி அறுவடை எடுக்கும் வரை தொடர்ந்து கண்காணித்து ஆலோசனை வழங்குகிறேன். அறுவடைக்கு பின் அவர்களே சந்தைப்படுத்தலாம். அல்லது எங்களிடமே கொடுத்து விற்பனை செய்யலாம்.
இதன் மூலம் சிப்பிக்காளான் வளர்ப்போர் அதிகரித்துள்ளனர். மதுரை, கரூரை அடுத்து கோவையிலும் சிப்பிக்காளான் பண்ணை அமைத்துள்ளேன். பண்ணை அமைப்பதற்கு குறைந்தது 200 சதுரஅடி, வைக்கோலை சுத்தப்படுத்தி பாலித்தீன் பையில் அடைப்பதற்கான இடத்திற்கு 150 சதுர அடி தேவைப்படும். சிப்பிக்காளான் படுக்கை தயாரித்து கூரை அமைப்பது, காளான் படுக்கைக்கான தாய் வித்து, பண்ணையில் இன்ஸ்டலேஷன் வரை அனைத்திற்கும் சேர்த்து ரூ.3 முதல் ரூ.3.5 லட்சம் செலவாகும். இது ஒருமுறை செலவு. அறுவடை முழுவதும் முடிந்தபின் படுக்கையை மீண்டும் தயாரிப்பதற்கு செலவிட வேண்டும்.
200 சதுர அடி இடத்திற்குள் 500 காளான் படுக்கைகளை தொங்கவிடலாம். ஒரே நாளில் 500 படுக்கைகளையும் தயாரிக்க முடியாது. ஒரு வாரத்திற்குள் எத்தனை படுக்கைகள் தயாரிக்கிறோம் என்பதை பொறுத்து சுழற்சி முறையில் தினமும் 5 கிலோ முதல் 10 கிலோ வரை காளான் அறுவடை செய்யலாம். காளான் படுக்கை உருவாக்கியதில் இருந்து தட்பவெப்பத்திற்கு ஏற்ப 18 முதல் 22 நாட்களில் முதல் அறுவடைக்கு காளான் தயாராகும். அதன் பின் ஒருவாரம் கழித்தும், மூன்றாவது வாரத்தில் 3வது முறை அறுவடை செய்யலாம். படுக்கையில் உள்ள தாய் வித்து காலியாகும் வரை பைகளுக்கு ஏற்ப 45 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை அறுவடை செய்யலாம்.
இடத்திற்கேற்ப காளான் ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது. இதன் ஆயுள் மிகவும் குறைவு என்பதால் உடனடியாக விற்க வேண்டும். பயோடெக்னாலஜி படித்துள்ளதால் காளானில் இருந்து சீரம், கேப்ஸ்யூல் தயாரிக்கும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளேன். விவசாயிகளுக்கு ஊறுகாய், சூப், காளான் பொடி தயாரிக்கும் தொழில்நுட்பம் கற்றுத் தருகிறேன். 10 கிலோ காளானில் இருந்து ஒரு கிலோ காளான் பொடி தயாரிக்கலாம். மதிப்பு கூட்டும் போது விலையும் இருமடங்காக விற்கலாம்.
வைக்கோலை முறையாக சுத்திகரிக்காவிட்டால் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. ஒன்றில் தொற்று உருவானால் எல்லா படுக்கைகளிலும் பூஞ்சை தொற்று ஏற்படும். காளான் பண்ணைக்குள் எல்லோரும் உள்ளே செல்லக்கூடாது. கை, கால்களை சுத்தப்படுத்திய பின் ஒருவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பறவைகள் உள்ளே சென்றால் அவற்றின் எச்சம் மூலம் பூஞ்சை தொற்று பரவும். வாசனை திரவியங்கள் பூசியோ, பூ வைத்தோ செல்லக்கூடாது. காளானே பூஞ்சை என்பதால் வேறு பூஞ்சை தொற்றுக்கு அனுமதிக்கக்கூடாது.
முதல் முறை அறுவடையின் போது உடனடியாக லாபம் கிடைக்காது. தொடர்ந்து சுழற்சி முறையில் படுக்கைகள் அமைக்க வேண்டும். மூன்று மாதங்களில் முறையாக கற்றுக் கொண்டால் அதன் பின் தொடர்ச்சியாக லாபம் ஈட்டலாம் என்றார். இவரிடம் பேச: 96061 91210.
- எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை