PUBLISHED ON : பிப் 11, 2026

சமவெளியில் மிளகு வளர்ப்போர் சங்கம் அமைத்து, தான் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கு கற்றுத்தருவது குறித்து ராமசாமி விவரித்தார்.
மூன்றாண்டுகளுக்கு முன் 125 விவசாயிகளுக்கு சமவெளியில் மிளகு வளர்ப்பது குறித்து ஒரு நாள் பயிற்சி அளித்தோம். சமவெளியில் மிளகு வளர்ப்பதற்கு மைக்ரோ கிளைமேட், தண்ணீர்ப்பாசனம், மூடாக்கு அவசியம் தேவை.
அதாவது மிளகுக்கொடி வளர்வதற்கு 60 சதவீதம் நிழல் கண்டிப்பாக தேவை. அதுதான் மைக்ரோ கிளைமேட். தென்னை, பாக்கு, சீமை அகத்தி (கிளைரிசிடியா) மரங்களின் மேல் மிளகுக்கொடிகளை படர விடலாம். மிளகுக்கொடி வளர்ப்பதற்கு முன்பாக மரங்கள் வளர்ப்பது முக்கியம்.
ஆறுமாதத்தில் மரங்களில் இலைகள் உற்பத்தியாகி நிழல் உருவாகும். நிழல் உருவான பின் கொடி மிளகு ஒன்று, செடி மிளகு என மாற்றி மாற்றி நடவு செய்யலாம். கொடி மிளகு காய்ப்புக்கு வருவதற்கு ஒன்றரை முதல் இரண்டாண்டுகள் ஆகும்.
தொடர்ந்து 40 ஆண்டுகள் காய்க்கும். செடி மிளகு வைத்த ஆறாவது மாதத்திலேயே சரம் விட்டு காய்க்க ஆரம்பிக்கும். அதிகபட்சமாக பத்தாண்டுகள் வரை காய்க்கலாம்.
தண்ணீர் நன்றாக இருந்தாலும் நிலம் களிமண்ணாக இருந்தால் திப்பிலிச் செடியில் ஒட்டு கட்டி வளர்க்கலாம். திப்பிலியின் வேர் நேராக பரவலாக ஊடுருவிச்செல்லும். மிளகின் வேர்கள் மேலோட்டமாக தான் இருக்கும், ஆணிவேரோ, சல்லிவேரோ கிடையாது. அரையடி ஆழம் வரை தான் பரவும். எனவே வேருக்கு காற்றோட்டம் தேவை. மூடாக்கு அவசியம் பராமரிக்க வேண்டும்.
நடவு எப்போது
மார்ச் முதல் ஜூலை வரையான வெயில் காலத்தில் நடவு வேண்டாம். செடிக்கோ, கொடிக்கோ வெப்பத்தைத் தாங்கும் திறன் இருக்காது. ஒருநாள் விட்டு ஒருநாள் இடைவெளியில் செடிக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும். பெரிய செடிகளாக இருந்தால் 4 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும்.
வெயில் காலத்தில் தட்பவெப்ப நிலையைக் குறைப்பதற்காக 10 நாட்களுக்கு ஒருமுறை ஸ்ப்ரிங்க்ளர் மூலம் மழைத்துாவான் பயன்படுத்தி நிலத்தை இதமான தட்பவெப்பநிலையில் பராமரிக்க வேண்டும்.
நோய்த்தாக்குதல் குறைவு
மிளகுச்செடியில் நோய்த்தாக்குதல் குறைவு. போதுமான தண்ணீர், மாங்கனீஸ், பாஸ்பரஸ் நுண்ணுாட்டச் சத்துக்கள் தந்தால் செடியில் பிரச்னை வராது. இரண்டாமாண்டில் கொடிமிளகு அறுவடையில் அரைகிலோ காய்ந்த மிளகு, அடுத்தடுத்து ஒரு கிலோ என ஆண்டுகள் கூட கூட மரம் வளர்ந்து அதன் மூலம் மிளகுக்கொடி படர்ந்து விளைச்சல் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
நர்சரியில் உற்பத்தி
ஏற்காடு அல்லது கொல்லிமலையில் பத்தாண்டுக்கு மேல் வயதுடைய மிளகுக்கொடியை வாங்கி நர்சரி பண்ணையாளர்களிடம் கொடுத்து தரமான நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்கிறோம். இதை நாங்களே உற்பத்தி செய்ய வேண்டுமெனில் ஆள்செலவுடன் தொழில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் தேவைப்படுவர்.
நர்சரியில் குச்சி நட்டு 5 முதல் 6 இலைகளுடன் கன்று உருவாவதற்கு 60 முதல் 90 நாட்களாகும். ஒரு கொடி மிளகு கன்று ரூ.30 வரை விற்கின்றனர். அந்த கன்றை எடுத்து தோட்டம் அல்லது வீட்டில் நிழலில் வைத்து அந்த இடத்துக் குரிய தண்ணீர், சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப செடியை முதலில் கடினப்படுத்த வேண்டும்.
உரம் கொடுக்கவேண்டும்
செடி நடும் போது இரண்டடி நீள, அகலம், ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். 2 கூடை தொழுஉரம், ஒரு கிலோ ராக் பாஸ்பேட், வேப்பம் புண்ணாக்கு, வேரழுகல் நோயைத் தடுக்க டிரைகோடெர்மா விரிடி, மண்புழு உரம் கலந்து குழியில் நிரப்பினால் குழி மேட்டுப்பாத்தியாகி விடும்.
பதியன் செய்துள்ள செடியின் பாலிதீன் பையை எடுத்து விட்டு தாய் மண் உடையாமல் குழிக்குள் நட வேண்டும். சுற்றிலும் இலை, தழைகளால் இரண்டடி அகலத்திற்கு மூட வேண்டும். இந்த மூடாக்கு தான் தட்பவெப்பநிலையை பாதுகாக்கும். முதல்நாள் தண்ணீர் தெளித்தபின், அடுத்த நாள் உயிர்த்தண்ணீராக ஐந்து லிட்டர் தண்ணீர் தரவேண்டும். செடியின் இடது, வலது பக்கத்தில் அரையடி இடைவெளி விட்டு சொட்டுநீர்ப்பாசனம் அமைக்கலாம்.
ஏழு ஏக்கரில் 3000 கொடி மிளகுக் கன்றுகள், செடி மிளகுகள் வளர்கின்றன. ஏற்கனவே உள்ள வேப்பம் மரம், மாமரம், ஆயிரம் மகாகனி, மலைவேம்பு, சீமை அகத்தி மரங்களில் மிளகுக்கொடிகள் வளர்கின்றன. கல் துாணில் கூட மிளகுக்கொடி ஏற்றலாம். நிழல் தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு ஏக்கர் தென்னை மூலம் ரூ.2 லட்சம் வருமானம் வருகிறது என்றால் மிளகுக்கொடி வைத்தால் கூடுதலாக ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.
டிம்பர் மரங்கள் அதிகநாள் இருந்தால் மிளகுக்கொடி விளைச்சல் மூலம் விலையும் அதிகமாகத் தான் போகும். மரங்களின் வயது அதிகமானால் விலையும் கூடுதலாக கிடைக்கும்.
எங்களிடம் பயிற்சி பெற்ற 400 விவசாயிகள் பாக்குத் தோப்பிலும் மிளகுக் கொடி, காப்பி வளர்க்கின்றனர் என்றார் ராமசாமி.
இவரிடம் பேச: 90253 41911.
-எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை

