PUBLISHED ON : ஜூலை 10, 2024
நல்ல வேலை, கை நிறைய சம்பளம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என நினைக்கும் இன்றைய சூழலில் தனக்கு கிடைத்த நேரத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவதை சேவையாக செய்கிறார் சிவகாசி பூவநாதபுரத்தைச் சேர்ந்த தினேஷ் குமார்.
சென்னையில் தனியார் நிறுவன அதிகாரியாக இருந்தாலும் விவசாயம் சார்ந்த விஷயங்களை சமூக வலைதளத்தில் (நவீனஉழவன்) எழுதி வரும் தினேஷ்குமார், விவசாயிகள் எதை செய்யக்கூடாது என்பதற்கான டிப்ஸ் தருகிறார்.
ஒரு பகுதியில் நெல் நடவு செய்தால் எல்லோரும் நெல் நடவு செய்யக்கூடாது. மற்றொரு பகுதியில் அந்த காலநிலையில் விளையும் மற்றொரு பயிரை நடவு செய்வதால் விளைச்சல், விலை இரண்டுமே கிடைக்கும். புதிய நிலத்தில் கட்டாயம் மண் பரிசோதனை செய்ய வேண்டும். நிலத்தில் உள்ள சத்துகளை அறிந்து விவசாயம் செய்தால் விளைச்சலை பெற முடியும்.
வியட்நாம், தாய்லாந்து நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் டிராகன் பழங்களின் விலையும், நம் நாட்டில் உற்பத்தி செய்யும் டிராகன் பழங்களின் விலையும் கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளது. இதை நம் நாட்டில் உற்பத்தி செய்து பராமரிக்க அதிக செலவாவது தான் காரணம். இதன் உற்பத்தியை அதிகப்படுத்தினால் விலை குறையும். மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.
மகோகனி, தேக்கு, செம்மரம், சந்தனமரம் போன்ற மரப்பயிர்கள் நடவு செய்ய நினைப்பவர்கள் முதலில் மண் பரிசோதனை செய்தால் நான்கு ஆண்டுகள் கழித்து வரும் நஷ்டத்தை முன்னதாக சரி செய்ய முடியும். மரம் நடவு செய்து 11 அடி வளர்ந்த பின் போதிய வளர்ச்சியின்மை, மரம் சாய்தல் பிரச்னைகளை முன்கூட்டியே மண் பரிசோதனை மூலம் சரிசெய்ய முடியும். மரப்பயிர்கள் நடவு செய்தவர்கள் துவக்கத்தில் ஊடுபயிராக தக்காளி, கத்தரி, வெண்டை நடவு செய்கின்றனர். மரங்கள் வைத்து நான்கு ஆண்டுகளானதும் மிளகு பயிரிடுகின்றனர்.
சந்தனம், செம்மரம் நடுவதற்கும் அதன் பின் ஆண்டுதோறும் அரசுக்கு கணக்கு காட்ட வேண்டும். அரசு அனுமதியோடு தான் வெட்டி விற்பனை செய்ய முடியும். பலரும் 15 ஆண்டுகள் ஆகியும் வெட்டுவதற்கு அனுமதி கிடைக்காமல் சிரமப்படுவதால் இதன் சாதக, பாதகங்களை ஆராய வேண்டும்.
கால்நடை வளர்ப்பு தொழில் செய்ய விரும்புபவர்கள் துவக்கத்திலேயே வேலைக்கு ஆட்களை நியமித்தால் லாபம் நிற்காது. குடும்பத்தினர் தொழிலில் ஈடுபடு வேண்டும். கால்நடைகளை அடைத்து வைத்து தீனி கொடுப்பதை விட மேய்ச்சலுக்கு அனுப்பினால் தீவனச்செலவு குறையும். ஒரு ஏக்கரில் விவசாயம் செய்பவர் தன்னுடைய நிலத்தில் மழை நீர் நன்றாக தேங்கக்கூடிய பகுதியில் ஒரு சென்ட் அளவு பண்ணை குட்டை அமைக்க வேண்டும். இதில் தேங்கும் மழைநீரை தேவையான போது பயன்படுத்தலாம். பண்ணை குட்டை அமைக்க அரசு மானியம் தருகிறது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் கூடுதல் லாபம் பெற முடியும் என்றார்.

