/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
விதை நெல் விளைச்சலில் லாபம் அமோகம்
/
விதை நெல் விளைச்சலில் லாபம் அமோகம்
PUBLISHED ON : செப் 24, 2014

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் க.சதீஷ்குமார். டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியர். பேரூராட்சி கவுன்சிலராக உள்ள இவர், படிப்பிற்கேற்ற வேலை தேடி அலையாமல், வறட்சி மிக்க சிவகங்கை மாவட்டத்தில்,நெல் சாகுபடியை சவாலாக ஏற்று அதிக லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளார்.
உணவு தேவையில் அரிசி முக்கிய பங்கு வகிப்பதால் இதில் வெற்றி காண வேண்டும் என்ற லட்சியம் உண்டு என்கிறார். இவருக்கு புதுக்கண்மாய் பாசனத்தில் இரண்டு ஆழ்குழாய் கிணறுகளில் 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்கிறது. இறவை பாசனத்தில் 5 ஏக்கர் நிலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக திருந்திய நெல் சாகுபடி செய்து வருகிறார்.
அவர் தெரிவித்ததாவது: கோடையில் ஏ.டி.டி.,39,45 ரகம்,மழை காலத்தில் பி.பி.டி.5204 ரகம் கர்நாடகா பொன்னி நெல், ஆண்டிற்கு இருபோகம் சாகுபடி செய்கிறேன். விவசாய காலம் 9 மாதம் தவிர 3 மாதம் நிலத்தை உலர வைத்து, தொழுஉரங்கள் போட்டு நிலத்தை பதப்படுத்துவேன். நாற்றங்காலில் விதைத்து
20 நாள் வந்தவுடன் நாற்று எடுத்து 9 செ.மீ., இடை வெளியில் நடவு செய்து, மெழுகு பதமாக காய்ந்தவுடன் தண்ணீர் பாய்ச்சுதல்,15 நாளில் கருவி மூலம் களை எடுத்தல், உரநிர்வாகம், அனைத்தும் வேளாண்மை துறையினர் வழிகாட்டுதல்படி, நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறேன். உழவு, களை எடுப்பு, அறுவடை, கதிர் அடிப்பு இயந்திரங்கள் என்னிடம் சொந்தமாக உள்ளது.
விதை,நடவு கூலி வகையில் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவாகிறது. பழைய முறையில் சாகுபடி செய்யும் போது ஏக்கருக்கு 2 ஆயிரம் கிலோ 25 மூடைநெல் கிடைக்கும். திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்வதால் ஏக்கருக்கு 74 கிலோ கொண்ட 35 மூடை (2600 )கிலோ நெல் மகசூல் கிடைக்கிறது. அறுவடை செய்த நெல்லை பிளான்டில் சுத்தம் செய்து 13 சதவீத ஈரப்பதத்தில் காய வைத்து பதர்நீக்கி மறுஉற்பத்தி செய்யும் விதையாக மாற்றுவேன். வேளாண்மை துறையினர் ஒரு கிலோ விதை நெல்லை ரூ.23 க்கு வாங்கிக் கொள்கின்றனர்.
மீதமுள்ள நெல்லை வெளிமார்க்கெட்டில் விற்கிறேன். ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வீதம் 5 ஏக்கருக்கு ஒருபோகத்திற்கு ரூ 3 லட்சம் கிடைக்கிறது. விதை,நடவு கூலி,உரம், 5 ஏக்கருக்கு ரூ 75 ஆயிரம் செலவுபோக ஒரு ஏக்கருக்கு ரூ 45 ஆயிரம் வீதம் 5 ஏக்கருக்கு ரூ 2.லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் லாபம் கிடைக்கிறது. ஏக்கருக்கு 60 கட்டுவீதம் 600 கட்டு வைக்கோல் கிடைக்கிறது. ஒரு கட்டின் விலை ரூ 150.பசு, காளை மாடுகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. 3 பசுக்கள் தினமும் 25 லிட்டர் பால் தருகிறது.
வீட்டுதேவைகள் போக மீதி பால், மதிப்புக்கூட்டப்பட்டு நெய் விற்பனை செய்வோம்.இதில் மாதம் ரூ.10 ஆயிரம் கிடைக்கிறது. சாணம், உரத்திற்குப் பயன்படுகிறது. எந்தப் பயிரையும் முழு ஈடுபாட்டுடன் செய்தால் வறண்ட மாவட்டத்திலும் சாதிக்கலாம், நிலமும்,நீரும் இருந்தால் நல்ல வருமானம் பெறலாம், என்கிறார். இவருடன் பேச: 99656 02908
அழகப்பன், சிங்கம்புணரி.

