PUBLISHED ON : நவ 13, 2024

பயிர் வகைகளில் உலகளவில் கோதுமை மற்றும் நெற்பயிருக்கு அடுத்ததாக மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் உணவாக பயன்படுவதால் மக்காச் சோளத்திற்கு முக்கிய இடம் வழங்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் 4.26 லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்படுவதன் மூலம் 29.89 லட்சம் டன்கள் உற்பத்தியாகிறது. குறைந்த செலவில் அதிக விளைச்சல் பெற்று வருமானத்தை அதிகரிக்கும் பயிராகவும் உள்ளது. பெரம்பலுார், விழுப்புரம், சேலம், திருப்பூர், துாத்துக்குடி, திண்டுக்கல், கடலுார், அரியலுார் மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
புரட்டாசி பட்டத்தில் மானாவாரி பயிராக மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. கோ.எச் (எம்) 6, 8, 11 வீரிய ஒட்டு ரகங்களை தென் மாவட்டங்களில் சாகுபடி செய்யலாம்.
நிலம் தயாரிக்கும் முறை
நிலத்தை டிராக்டர் மூலம் சட்டி கலப்பையால் ஒரு முறை உழுது ஒரு ஏக்கருக்கு 5 டன் மட்கிய தொழுஉரம் அல்லது மட்கிய தென்னை நார்க்கழிவுடன் தலா 800 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை கலந்து ஒரே சீராக பரப்ப வேண்டும். அதன் பின் கொக்கி கலப்பை கொண்டு இரு முறை உழவேண்டும். பார்களில் விதைப்பு செய்தால் மழைநீரை சேமிக்கலாம் என்பதால் 45 செ.மீ. இடைவெளியில் சரிவுக்கு குறுக்காக பார்களை அமைக்க வேண்டும். பார்கள் அமைக்காவிட்டால் 40 சதுர மீட்டர் பகுதி பாத்திகள் அமைத்தும் விதைப்பு செய்யலாம்.
விதைப்பிற்கு தரமான விதைகளை தேர்வு செய்வது அவசியம். ரக விதைகள் என்றால் ஏக்கருக்கு 8 கிலோ, வீரிய ஒட்டு ரகம் என்றால் 6 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் இடையே 20 செ.மீ. இடைவெளியும், பாருக்கு பார் 45 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 10 - 11 செடிகள் இருக்க வேண்டும்.
வேண்டும் விதை நேர்த்தி
தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் இமிடாகுளோபிரிட் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை மூலம் அடிச்சாம்பல் பூஞ்சாண நோயை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் அல்லது மெட்லாக்சைல் அல்லது திரம் மருந்து கலந்து விதைக்க வேண்டும். மறுநாள் தலா 240 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து விதைகளை கலந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்கலாம். அசோஸ்பைரில்லம் கலப்பதால் காற்றிலுள்ள தழைச்சத்து மண்ணில் நிலைப்படுத்தப்பட்டு பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது.
குழிக்கு எத்தனை விதைகள்
விதைப்பு பாரில் அடியுரம் இடப்பட்ட வரிசையில் 4 செ.மீ. ஆழத்தில் குழிக்கு ஒன்று அல்லது இரண்டு விதையை துாவி மண்ணால் மூட வேண்டும். மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி, சாம்பல் சத்துக்களை இட வேண்டும். இல்லாவிட்டால் ஏக்கருக்கு தழைச்சத்தாக 17 கிலோ, மணிச்சத்தாக 50 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை விதைப்பதற்கு முன் அடியுரமாக இட வேண்டும். ஆண் பூக்கள் வெளிவரும் போது மேலுரமாக ஏக்கருக்கு 17 கிலோ யூரியா இட வேண்டும்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள மக்காச்சோள மேக்சிம் திரவத்தை ஏக்கருக்கு 3 கிலோ வீதம் 200 லிட்டர் தண்ணீரில் ஒட்டும் திரவம் கலந்து பூக்கும் அல்லது கதிர் பிடிக்கும் போது தெளிக்க வேண்டும். இதனால் செடிகள் வளர்ச்சியை தாங்கி வளர்வதுடன் 20 சதவீத மகசூல் அதிகரிக்கும்.
களை நிர்வாகம்
விதைத்த 3 முதல் 5ம் நாள் களை முளைக்கும் முன்பாக அட்ரசின் 200 கிராம் வீதம் நேப்செக் அல்லது ராக்கர் தெளிப்பானில் தட்டையான விசிறி நுண்குழாய் பொருத்தி ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். குழியில் இரண்டு விதைகள் முளைத்திருந்தால் 12 முதல் 15வது நாளில் வீரியமாக வளர்ந்த ஒரு செடியை மட்டும் வைத்துக் கொண்டு மற்றதை அகற்ற வேண்டும். முளைக்காமல் உள்ள இடத்தில் ஏற்கனவே ஊறவைத்த விதைகளை இட்டு நிரப்ப வேண்டும். விதைத்த 30 முதல் 35ம் நாளில் களைவெட்டி மண் அணைத்து பார்களை சரிசெய்ய வேண்டும். இதனால் செடிகள் சாயாமல் இருக்கும். கையால் களை எடுக்க முடியாத பட்சத்தில் 20 - 25 ம் நாளில் ஏக்கருக்கு 2, 4 - டி களைக்கொல்லியை 0.4 கிலோ வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
ஊடுபயிருக்கு வாய்ப்பு
மானாவாரி மக்காசோளத்தில் தட்டைபயறு, உளுந்து, துவரை பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். ஊடுபயிர் சாகுபடி செய்யும் போது மண்ணில் போதுமான ஈரப்பதம் இருக்கும் போது களை முளைக்கும் முன் பென்டிமெத்தலின் ஏக்கருக்கு 300 கிராம் வீதம் விதைத்த 3 முதல் 5ம் நாள் பயன்படுத்தலாம்.
பயிர் பாதுகாப்பு அவசியம்
படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கை இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 10 மில்லி வீதம் தையாக்சிம் பூச்சிக்கொல்லி அல்லது பிவேரியா பேசியானா எதிர் உயிரி கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு 10 வரிசை மக்காச்சோளப் பயிருக்கும் இடையே 75 செ.மீ. நடைபாதை விட வேண்டும். வரப்பு பயிராக 3 வரிசையில் சோளப்பயிர் விதைத்தால் படைப்புழுவின் தாய் அந்துபூச்சிகளை கவரலாம்.
எக்டேருக்கு ஒரு சூரியஒளி விளக்குப்பொறி மற்றும் விதைத்த 10 முதல் 15ம் நாளில் இனக்கவர்ச்சி பொறி அமைக்கலாம். விதைத்த 15 முதல் 20ம் நாளில் அசாடிராக்டின் 20 மில்லி அல்லது தையோடைகார்ப் 20 கிராம் அல்லது எமாமெக்டின் பென்சோயேட் 4 கிராம் வீதம் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 40 முதல் 45ம் நாளில் மெட்டாரைசிம் அனிசோபிலே 80 கிராம் அல்லது ஸ்பின்னெட்ரம் 5 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 60 --65ம் நாளில் புளுபென்டமைடு 4 மில்லி அல்லது குளோரன் டிரையனிலி புரோலி 4 மில்லி வீதம் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
மக்காச்சோள கதிரை மூடியுள்ள மேலுறையின் பச்சை நிறம் காய்ந்து வெளிறிய மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக மாறினால் கதிர்கள் அறுவடைக்கு தயார். கதிரடித்த பின் விதைகளின் ஈரப்பதம் 12 சதவீதம் வரும் வரை காயவிட வேண்டும். அனைத்து சாகுபடி முறைகளையும் கடைபிடித்தால் ஏக்கருக்கு 20 முதல் 24 குவிண்டால் விளைச்சல் தரும்.
- பேராசிரியர்கள்
சோலைமலை
சுப்புலட்சுமி
ஆர்த்தி ராணி
பாக்கியத்து சாலிகா
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி,
77086 03190.