
விவசாயிகளின் வீட்டிலும், வயலிலும், சேமிப்பு கிடங்குகளிலும் எலிகளின் தொல்லை அதிகம். விவசாயி பயிரிடும் தானியங்களை சேதப்படுத்தி இழப்பீட்டை ஏற்படுத்துவதில் எலிகள் மோசமானவை. ஆறு எலிகள் சேர்ந்து ஒரு மனிதன் உண்ணும் உணவை உண்டு அழிப்பதுடன் 20 மடங்கு உணவை வீணாக்குகின்றன. எலிகளால், பயிர்களின் விளைச்சல் பாதிப்பு சுமார் 25 சதவிகிதமும், உணவு தானியங்களை சேமித்து வைக்கும்போது 30 சதவிகிதம் இழப்பும் ஏற்படுகிறது. விவசாயிகளின் உழைப்பை சேதப்படுத்தி சேதம் விளைவிக்கின்ற எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
எளிய முறைகள்: பயிர் சாகுபடியின் தொடக்கத்திலும் எலிகளின் இனப்பெருக்க காலமான ஜனவரி முதல் மார்ச் வரையிலும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் எலிகளை அழிக்க சிறந்த காலமாகும். இந்த காலகட்டத்தில் வயல்களில் வரப்பு வளைகளை வெட்டி எலிகளை குட்டிகளுடன் சேர்த்து அழிப்பது மிகச் சிறந்த முறையாகும். அகலம் குறுகிய வரப்புகளை அமைத்தும், அவ்வப்போது வரப்புகளை
சீரமைத்தும் எலிகள் வரப்புகளில் வளை தோண்டுவதை தடுக்கலாம்.
எலிகளை எளிதாக கவரும் வகையில் இருக்கும் வைகோல் போரை வயலுக்கு அருகாமையில் அமைத்தல் கூடாது. வைக்கால் போர், எளிதில் மறைந்து கொள்ள தகுந்த இடமாக அமைந்து, எலிகள் பெருக உதவுகிறது. எலிகளை உண்ணும் பறவைகள், ஆந்தைகள் அமரும் வகையில் வயல்களில் தென்னை மட்டையின் அடிப்பகுதியை தலைகீழாக நட்டு வைக்க வேண்டும். கிட்டிகள் அல்லது மூங்கில் கிட்டிகள் எலிகளை எளிதாக பிடிக்க நல்ல உத்தியாக பயன்படுத்தப்படு கிறது. விஷ உணவு வைத்தும் எலிகளை அழிக்கலாம்.
- பே.இந்திராகாந்தி,
வேளாண் துணை இயக்குனர்,
நீர் மேலாண்மை பயிற்சி நிலையம்,
விநாயகபுரம், மதுரை