/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மாடு சினைப்பிடிக்காததற்கான காரணங்கள்
/
மாடு சினைப்பிடிக்காததற்கான காரணங்கள்
PUBLISHED ON : ஆக 29, 2018

பால் பண்ணை தொழிலில் அதிக வருமானம் பெற பால் உற்பத்தி மட்டும் கைகொடுக்காது. ஆண்டு தோறும் நாம் வளர்க்கும் கறவை மாடுகள் ஒரு கன்றை ஈன வேண்டும். குறித்த காலத்தில் மாடுகள் சினைப்பிடிக்காமல் இருந்தால், அவை வற்றுக்கறவையாக பல நாட்களுக்கு தொடரும்.
பராமரிப்பில் உள்ள குறைபாடு
கறவைமாடு மற்றும் கிடேரி சினைத் தருணத்துக்கு வந்திருக்கும் நேரத்தில் காலதாமதமாக கருவூட்டல் செய்தால் மாடு சினைப்பிடிக்காது. சினைத்தருணம் பசுக்களுக்கு 18 மணி, கிடேரிகளுக்கு 15 மணி, எருமைகளுக்கு 16 மணி நேரம் தேவை. மாடுகள் காலையில் சினைத் தருணத்துக்கு வந்தால் மாலையிலும், மாலையில் சினைப்பருவத்துக்கு வந்தால் மறுநாள் காலையிலும் சினை ஊசி போட வேண்டும்.
இதில் மாற்றம் இருந்தால் சினைப்பிடிப்பது சிரமம். சினை ஊசி போட்ட பின் மாடுகளை அடிப்பதும், மிரட்டுவதும், நீண்ட துாரம் நடத்தி செல்வதும் கூடாது. இவ்வாறு செய்வதால் பயம் உண்டாகி அட்ரினல் எனும் நிண நீர் சுரக்கும். இது கருவுறுத்தலுக்கு அவசியமான 'ஆக்சிடோசின்' ஹார்மோனை செயல் இழக்கச் செய்யும்.
தீவனத்தால் மலட்டுத்தன்மை
புரதம் மற்றும் தாது உப்புக்கள் மாடுகளின் தேவைக்கு குறைவாகவோ அல்லது அறவே இல்லாத தீவனமாகக் கொடுப்பது கருத்தரிப்பை பாதிக்கும். பூஞ்சைக்காளான் பாதித்த தீவனங்களும் கருவூட்டலை பாதிக்கும்.
கருவூட்டல் காலத்தில் அதன் தேவைக்கு அதிகமாக தீவனம் கொடுத்தால் கருத்தரிப்பு விகிதம் கூட வாய்ப்பிருக்கிறது. சிலர் சுயமாகவும், அதிகளவு பாலைக் கறப்பதற்கும் ஆக்சிடோசின் ஊசி மருந்தை கறவை மாடுகளுக்கு செலுத்துவார்கள். இதனால் மாடு சினைப்பிடிக்கும் திறனை இழக்கின்றன. இது சட்டப்படி குற்றம்.
மாடு சினைப்பிடிக்கவில்லை என்றால் எத்தனை நாளைக்கு ஒரு சினைத்தருணத்துக்கு வருகிறது, என்று கவனிக்க வேண்டும். 21 நாட்களுக்குள் சினைத் தருண அறிகுறிகள் தெரிந்தால் சினைப்பிடிக்கவில்லை என்றும், 25 - 30 நாட்களுக்குள் சினைத்தருண அறிகுறிகள் தெரிந்தால் சினைப்பிடித்து கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்றும் கணித்து கொள்ளலாம். தொடர்புக்கு 94864 69044.
- டாக்டர் வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை.

