/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்… விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்
/
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்… விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்… விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்… விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்
PUBLISHED ON : செப் 11, 2024

விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்பதற்காக உருவாக்கப்பட்டதே ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள். மதுரை மாவட்டம் திருமங்கலம் விற்பனைக்கூடம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மதுரை விற்பனைக் குழுவின் கீழ் 1971 முதல் செயல்படுகிறது.
தென் தமிழக விவசாயிகள், வியாபாரிகளுக்கு பாலமாக திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் விளங்குகிறது. இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை குறைத்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெருவியாபாரிக்கும், நுகர்வோருக்கும் சரியான விலையில் விளைபொருட்கள் சென்றடைவதை விற்பனைக் கூடம் உறுதி செய்கிறது.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசால் இ - நாம் எனப்படும் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் 2023 மார்ச்சில் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்ட விவசாயிகளும் தேசிய அளவில் விளைபொருட்களை சந்தைப்படுத்தி வெளிப்படை தன்மையுடன் தரகு, கமிஷன் இன்றி நாடு முழுவதும் உள்ள வியாபாரிகளுக்கு விற்கின்றனர். இதுவரை 2161 விவசாயிகளின் 5512 டன் அளவுள்ள 69 வகையான விளைபொருட்கள் ரூ.18.82 கோடி மதிப்புக்கு விற்கப்பட்டுள்ளது என்கிறார் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வெங்கடேஷ்.
அவர் கூறியதாவது:
விவசாயிகள், வியாபாரிகள், சுமைதுாக்கும் தொழிலாளர்கள், போக்குவரத்து வாகன ஓட்டிகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு விற்பனைக்கூடம் உதவுகிறது. மேலும் அறுவடை காலங்களில் தேவைக்கு ஏற்ப விடுமுறை நாட்களிலும், இரவிலும் கூட இம்மையம் செயல்படுகிறது.
விவசாயிகளுக்கு தங்களின் பொருட்களை சரியான எடையுடன் விற்பது மட்டுமின்றி இடைத்தரகு, மறைமுக கமிஷனின்றி 48 மணி நேரத்தில் வங்கியில் பணம் வரவு வைக்கப்படுகிறது. விலைவீழ்ச்சி காலங்களில் பொருட்களை இருப்பு வைக்கலாம், விருப்பத்தின் பேரில் விளைபொருட்களை அடமானம் வைத்து கடன் பெறலாம். மேலும் அறுவடையின் போது அல்லது விலை வீழ்ச்சி காலங்களில் பொருட்களை மதிப்பு கூட்டி லாபகரமான முறையில் விற்பதை ஊக்குவிக்கிறது. உதாரணமாக மதுரை பேரையூர் விவசாயியின் அம்பை 16 இட்லி அரிசிக்கான நெல் அரிசியாக மாற்றி சில்லறை விலைக்கு விற்று தரப்பட்டது. திருநெல்வேலி, வேலுார், தனிச்சியம் விவசாயிகளின் துாயமல்லி, கருப்புகவுனி, ரத்தசாலி நெல்மணிகளை மதிப்பு கூட்டி பாரம்பரிய அரிசி விற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட விவசாயிகளின் நெல் மூடைகளை நேரடியாக மதுரை மாவட்ட அரிசி ஆலைகளுக்கு நியாயமான விலைக்கு விற்க உதவுகிறோம். விவசாயிகளின் விளைபொருட்களை அவர்களது இடத்தில் இருந்து வாகனத்தில் எடுத்து வர ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்கும் வகையில் 14 வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் பகிரப்படுகிறது. இதேபோல் கர்நாடக மாநில விவசாயிகளுக்கு தேவைப்பட்ட இருங்குசோளம் இங்கிருந்து அனுப்பப்பட்டது.
உதாரணமாக சில்லறை விலையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் எண்ணெய், மாவு வகைகள், நெய், தேன் மற்றும் மதிப்புகூட்டப்பட்ட சிறுதானியங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் மாநிலம் முழுவதும் விற்று தருவது வேறெங்கும் செய்யாத நடைமுறை. பாரம்பரிய நெல், அரிசி, தானியம், கொப்பரை, சூரியகாந்தி, எண்ணெய் வித்துகள், கரு மஞ்சள், கஸ்துாரி மஞ்கள், ஆவாரம் பூ, வசம்பு, சிறு, குறு தானியம், அனைத்தையும் விற்றுக்கொடுக்கும் ஒரே விற்பனைக்கூடம் இதுதான்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மொத்தமாக விவசாயிகளிடம் விளைபொருளை கொள்முதல் செய்யவும் உதவுகிறோம். தமிழகத்தில் எந்த ஒரு கிராமத்தில் உள்ள விவசாயியும் இங்கே தொடர்பு கொண்டு பொருட்களை விற்று பயன் அடையலாம் என்றார். இவரிடம் பேச: 90251 52075.
- எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை

