PUBLISHED ON : டிச 28, 2022

நெற்பயிர் சாகுபடியில் நாற்றங்கால் பராமரிப்பு முக்கியமானது. நாற்று ஆரோக்கியமாக இருந்தால் தான் பயிரின் வளர்ச்சி சீராக இருக்கும். நாற்று வளர்ச்சி குறைவாக இருப்பின் நோய் எதிர்ப்புதிறன் குறைந்து பல்வேறு நோய்கள் உருவாகும்.
ஒரு எக்டேர் நடவிற்கு 20 சென்ட் பரப்புள்ள நாற்றங்கால், தண்ணீர் வசதியுடன் தேவை. நீண்டகால ரகம் எனில் 30 கிலோ, மத்திய கால ரகம் எனில் 40 கிலோ, குறுகியகால ரகம் என்றால் 60 கிலோ தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு ஒருலிட்டர் தண்ணீர் என்ற வீதத்தில் கார்பன்டசிம் அல்லது டிரைசைக்லோஜோல் கரைசல் 2 மில்லி கலந்து 10 மணிநேரம் ஊற வைத்து வடிகட்ட வேண்டும்.
இவ்வாறு செய்வதால் நாற்றுகளின் இளம்வயதில் பாதிக்கக்கூடிய தோகை எரிப்பு நோயிலிருந்து 40 நாட்கள் வரை பாதுகாப்பு கிடைக்கும். ஊறவைத்த விதையை உடனே விதைக்க வேண்டுமெனில் நனைந்த சாக்கில் கட்டி மூடி 24மணி நேரம் இருட்டில் வைத்து முளைவிட்ட பின் விதைக்கலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரில் சூடோமோனஸ் புளுரசன்ஸ் 10 கிராம் கலந்து ஒருகிலோ விதையை 10 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிய பின்னர் முளைவந்தபின் விதைக்கலாம். 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா அல்லது 3 பாக்கெட் அசோபாஸ் ஆகிய நுண்ணுயிர் உரங்களுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து விதைகளை விதைப்புக்கு முன் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
உயிர் உரத்தில் நனைத்த விதைகளை எடுத்த பின் அந்த கரைசலை வீணாக்காமல் நாற்றங்காலில் விடலாம்.
முளை கட்டிய விதையை பாத்தியில் பரவலாக துாவி 1 - 2 செ.மீ., அளவு தண்ணீர் விட வேண்டும். விதைத்த 18 முதல் 24 மணி நேரத்திற்குள் தண்ணீரை வடித்து விதையை முளைக்கவிட வேண்டும். குண்டுகுழிகளில் கூட தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பாத்திஅமைப்பும், நீர் நிர்வாகமும் அமைக்கப்படவேண்டும். விதைத்த மூன்றுமுதல் ஐந்துநாட்கள் வரை நீர் கட்டுவது, தண்ணீர் தேங்கி நிற்காதவாறு அமைத்தல் வேண்டும். 5வது நாளிலிருந்து சிறிது சிறிதாக நாற்றின் வளர்ச்சியைப் பொறுத்து அதிகபட்சமாக ஒரு அங்குல ஆழம் வரை நீர் கட்டலாம்.
20 சென்டிற்கு ஒரு டன் தொழுஉரம் தேவை. கடைசிஉழவின் போது 20 சென்ட் நாற்றங்காலிற்கு 40 கிலோ டி.ஏ.பி., உரமோ அல்லது 16 கிலோ யூரியாவும் 120 கிலோ சூப்பர் பாஸ்பேட் கலந்தோ இடவேண்டும். குறைவானமண்சத்துள்ள நாற்றங்கால்களுக்கு மட்டும் அடியுரமாக டி.ஏ.பி., இடலாம்.
மண் சத்துக்கள் குறைவாக உள்ள நாற்றங்காலுக்கு, 25 நாட்களுக்குபின் ரசாயன உரங்களை இட்ட 10 நாட்களுக்குள் நடவு செய்ய வேண்டும். மிக அதிகமான களிமண் பூமிகளில் நாற்றுக்கள் எடுக்கும் தருணத்தில் வேர்கள் அழுகும் நிலை ஏற்பட்டால் விதைத்த 10 ம் நாள் ஒரு சென்டிற்கு 4 கிலோ ஜிப்சம் மற்றும் 1 கிலோ டி.ஏ.பி., கலந்து இட வேண்டும்.
-அருண்ராஜ், மகேஸ்வரன்தொழில்நுட்ப வல்லுநர்கள்,
வேளாண் அறிவியல் மையம்,
தேனி90423 87853

