PUBLISHED ON : ஜூலை 10, 2013

குரும்பை கொட்டுதல்: தென்னையில் பாரம்பரிய குணம், மண்ணில் அதிக உவர், களர், முறையற்ற நீர் மேலாண்மை, மண்ணின் சத்து பற்றாக்குறை, பூச்சி நோய் தாக்குதல் ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது.
தென்னை வேர்களுக்கு கிடைக்க வேண்டிய நுண்ணூட்டம், வேரூட்டம், வேர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் நீர் மேலாண்மை வடிகால் வசதியை சீராக இருக்கச் செய்வதாலும் குரும்பை உதிர்வதைக் கட்டுப்படுத்தலாம்.
மண் பரிசோதனை செய்ய வசதி இல்லாத இடங்களில் பசுந்தாள் உரங்களான யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஷ் 2 கிலோ, 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் இடவேண்டும்.
நாப்தலின் அசிடிக் அமிலத்தை (பிளானோபிக்ஸ்) பாளைகள் வெடித்து ஒரு மாதம் கழித்து அரை மிலி அளவை ஒரு லிட்டர் சுத்தமான நீரில் கலந்து பாளைகளில் தெளிப்பதன் மூலம் இக்குறைபாட்டினைத் தவிர்க்கலாம்.
முறைப்படி உரங்களை இடுவதுடன் 2 கிலோ அதிக பொட்டாஷ் உரமும் 200 கிராம் வெண்காரமும் (போரான்) தொடர்ந்து
3 வருடங்களுக்கு இடுவதால் ஒல்லிக்காய்களை கணிசமாகக் குறைக்கலாம்.
மஞ்சள் நிறம் ஓலைகளின் நுனியில் துவங்கி நாளடைவில் இலை முழுவதும் பச்சை நிறம் இல்லாது காணப்படும் நிலையில் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இடுவதுடன் கூடுதலாக மரத்திற்கு 500 கிராம் மக்னீசியம் சல்பேட் இடுதல் வேண்டும்.
தென்னையில் முறையான நீர்மேலாண்மை பூச்சி, நோய் கட்டுப்பாடுகளைச் செய்து அதிக விளைச்சல் பெறலாம்.
குதிரைவாலி: தற்போதைய வறட்சி சூழலில் சிறுதானியப்பயிர் குதிரைவாலியை அனைத்து வகையான மண்ணிலும் சாகுபடி செய்யலாம். வயது 90-100 நாட்கள். ஆடி 18ம் நாளுக்குப் பிறகு விதைத்தால், ஆவணி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய மூன்று மாதங்களில் அவ்வப்போது கிடைக்கும் மழையில் பயிர் வளர்ந்துவிடும். நிலத்தை 5 முறையாவது உழவுசெய்து கொண்டால் களைகள் வளராது. ஒரு ஏக்கர் விதைக்க 5 கிலோ விதை தேவைப்படும். விதையை வயலில் தூவி விதைக்க வேண்டும். சால் பயிராக துவரை, மொச்சை, தட்டைப்பயறு, கல்லுப்பயறு ஆகியவற்றை விதைக்கலாம்.
பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. விதைத்த பிறகு ஏக்கருக்கு 45ம் நாள் 100 கிலோ மண்புழு உரம் தூவிவிட வேண்டும். அறுவடையின் போது தட்டையை நிலத்திலேயே விட்டுவிட்டு கதிரை மட்டும் அறுத்து எடுத்து வெயிலில் காயவைத்து டிராக்டர் மூலம் நசுக்கி எடுத்து தூற்றிக் கொள்ளலாம்.
ஏக்கருக்கு சராசரியாக 8 குவிண்டால் தானிய மகசூல் கிடைக்கும். தொடர்புக்கு: அனுபவ விவசாயி மதுரை எழுமலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி சடையாண்டி, 94434 60833.
வறட்சியைத் தாங்கும் தென்னை: தேசிய தென்னைக்கான ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் வறட்சியைத் தாங்கி வளரும் தென்னை ரகத்தைக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தற்போது அதில் வெற்றி கண்டுள்ளார்கள். கர்நாடக மாநிலம் தும்கூர் மற்றும் தமிழகத்தில் சிவகங்கைமாவட்டம், குன்றக்குடி ஆதீனத்திற்கு உட்பட்ட தென்னந்தோப்பு ஆகிய இடங்களிலிருந்து தென்னை மரங்களில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ரகத்தை கண்டறிந்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் இந்த இரண்டு மரங்களின் மகரந்தங்களை இணைத்து, வறட்சியைத் தாங்கி வளரும் புதிய ரகத்தை உருவாக்கியுள்ளனர்.
தேசிய தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் இணைந்து வெளியிட்டுள்ள அந்த புதிய ரக தென்னங்கன்றுகள், குன்றக்குடி ஆதீன மடத்தில் தற்போது விற்பனையில் உள்ளன.
நடவு செய்த 7ம் ஆண்டிலிருந்து பலனைக் கொடுக்கக்கூடிய இந்த நெட்டை ரக தென்னை 100 ஆண்டுகளுக்கு மேலாக பலன் கொடுக்கக்கூடியது. 100 ரூபாய்க்கு மேல் விலையுள்ள இந்த ரகக் கன்றுகள் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உற்பத்திச் செலவான ரூ.30க்கே விற்பனை செய்யப்படுகிறது என்கிறார், ஆதீனத்தைச் சேர்ந்த ராஜா. தொடர்புக்கு: ராஜா, 94425 31581, 99522 77350.
ரெட்லேடி பப்பாளி: புதிய பயிர்களை விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டி வரும் விவசாயி பாலதண்டாயுதபாணி, கோயம் புத்தூர் சின்னக்குயிலி கிராமத்தைச் சேர்ந்தவர். இப்போது 3 வருடமாக பழத்துக்காக பப்பாளி சாகுபடி செய்கிறார். ஒரு ஏக்கர் ரெட் லேடி பப்பாளி சாகுபடி செய்ய செலவு ரூ.59,500. மகசூல் வருமானம் ரூ.4,20,000. நிகர லாபம் ரூ.3,60,500. நடவு செய்த 8ம் மாதம் அறுவடை. தொடர்ந்து 14 மாதங்கள் மகசூல் கொடுக்கும். தொடர்புக்கு: பாலதண்டாயுதபாணி, 98946 99975.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

