
தமிழ்நாட்டில் மலைப்பகுதி வேளாண்மை மேம்பட சில உத்திகள்: இராசயன உரங்கள் பயன்படுத்தப்பட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இயற்கை முறைகளைக் கையாண்டு அதற்கான சிறப்பு சான்றிதழ்களை வைத்து காய்கனிகளை வினியோகம் செய்துஅதிக இலாபம் பெறலாம். உயிரியல் பூச்சிக்கொல்லி உயிர் உரங்கள், பஞ்சகாவியா, தசகாவியா ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், வேர் உட்பூசணம் போன்றவற்றை எக்டருக்கு 12.5 கிலோ அளவில் பயன்படுத்தலாம். மலைப் பகுதிகளுக்கு ஏற்ற பசுந்தாள் உரங்களான லூபின் பக்கோதுமை ஆகியவற்றை பயிரிட்டு மண்ணுடன் கலந்து மண் வளத்தைப் பெருக்கலாம். காய்ந்த வேளாண்மைக் கழிவுகள், பச்சை களைகளைக் கொண்டு இயற்கை உரங்கள் மண்புழு உரங்களை உழவர்கள் அதிக அளவில் தங்கள் தோட்டங்களிலேயே தயார் செய்து மண்வளத்தைப் பெருக்கலாம்.
கலப்புமுறை வேளாண்மையான ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை ஒருங்கிணைத்து மலைப்பகுதிகளில் செய்யும் பொழுது மண்வளம் அதிகரிப்பதால் அதிக வருமானம் ஈட்டலாம். மலைப்பகுதிகளில் மேற்கொள்ளும் வேளாண்மைப் பயிர்களை அதற்கான அங்கீகரிக்கப்பட்ட இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் களைப் பெற்று விளைபொருட்களை சென்னை, கோவை, மும்பை பெங்களூரு போன்ற பெரிய நகரங்களுக்கு விற்பனை செய்து 60 சதவீதம் வரை அதிக வருமானம் பெறலாம்.
மண்ணின் அமிலத்தன்மையைக் குறைக்க ஒவ்வொரு ஆண்டும் எக்டருக்கு 2.5 டன்கள் டாலமைட், இயற்கை உரங்களையும் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். தேயிலைத் தோட்டங்களில் மாற்றுப் பயிராக சில்வர் ஓக் மரங்களுடன் ஆலிவ், பிளம்ப்ஸ், பேரி, பீச் போன்ற அதிக வருமானம் தரும் பழமரங்களை நடவு செய்யலாம். காப்பி தோட்டங்களில் அதிக வருமானம் தரக்கூடிய வெண்ணைப் பழ மரங்களின் ஒட்டுக்கன்றுகளை நிழல் தருவதற்காக நடவு செய்து அதிக இலாபம் ஈட்டலாம். தேயிலைத் தோட்டங்களில் பயிரிடப்படும் தேயிலை அங்கீகரிக்கப்பட்ட வேளாண்மை சான்றிதழ் பெற்று மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களான சில்வர்டிப் தேயிலை, கிரீன் தேயிலை, வெள்ளைத் தேயிலை போன்ற உயர் ரகத் தேயிலைகளைச் சர்வதேச நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தேயிலை வருமானத்தை இரட்டிப்பாக்கலாம்.
தண்ணீர் பற்றாக்குறை உள்ள மேட்டு நிலங்களில் வாசனைப் பயிர்களான ரோஸ்மேரி, தைலம், ஜெரோனியம், அரிப்பைத் தடுக்கும் எலுமிச்சை புல் சிட்ரோனெல்லா புல், வெட்டிவேர் போன்ற பயிர்களைச் பயிர் செய்து அதிக இலாபம் பெறலாம். மேலும் அயல்நாடு காய்கறிகளை அதிக அளவில் பயிர் செய்து நேரடியாக விற்பனை செய்து இலாபம் ஈட்டலாம். (தகவல்: முனைவர் கு.இராமசாமி, துணைவேந்தர், த.வே.ப. கழகம், கோயம்புத்தூர் -641 003)
இஞ்சி: குழிகளில் சேமித்து வைத்துள்ள விதைக்கிழங்குகளை 20 நாட்களில் ஒருமுறை களை களைத்து வதங்கிய மற்றும் நோய் தாக்கிய கிழங்குகளை அகற்றிவிட வேண்டும்.
மஞ்சள் அறுவடை: தாமதமாக நட்ட தோட்டங்களில் மஞ்சளை அறுவடை செய்யவும், முன்பாகவே அடையாளவிட்ட செடிகளைத் தனியாக அறுவடை செய்து பின்னர் அவற்றை விதை மஞ்சளுக்காக உபயோகபடுத்தலாம். மற்ற செடிகளையும் முதிர்ச்சியின் அறிகுறியைப் பொறுத்து அறுவடை செய்யலாம்.
விதை மஞ்சள் சேமிப்பு: முன்பாகவே அறுவடை செய்த தோட்டங்களில் குழிகளில் சேமித்து வைத்துள்ள விதைக் கிழங்குகளை 20 நாட்களுக்கு ஒருமுறை கண்காணித்து வதங்கிய மற்றும் நோய் தாக்கிய கிழங்குகளை அகற்றிவிட வேண்டும்.
அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பம்: அறுவடை செய்த மஞ்சளை விரலி மற்றும் கிழங்கு (குண்டு) எனத் தனித்தனியாக பிரித்து மஞ்சளைப் பதப்படுத்த வேண்டும். வேகவைத்த பின் மஞ்சளை சுத்தமான உலர்களம் அல்லது தார்ப்பாய் மீது பரப்பி 10-15 நாட்கள் வரை உலர்த்த வேண்டும். மெருகேற்றும் இயந்திரத்தின் மூலம் உலர வைத்த மஞ்சளை மெருகேற்ற வேண்டும்.
- டாக்டர். கு.சௌந்தரபாண்டியன்.

