
நிலச்சம்பங்கியில் துல்லிய பண்ணைய தொழில்நுட்பம்: இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் வீரிய ஒட்டு இரகமான 'ப்ரஜ்வாஸ்'ஐ 60X45 செ.மீ. இடைவெளியில் பயிரிட்டார் அனுபவ விவசாயி ப.கதிர்வேல் (தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பால்வாடி கிராமம்).
கிழங்கு நேர்த்தி: சூடோமோனாஸ் ப்ளோரஸ்சன்ஸ் 10 கிராம் / லிட்டர் என்ற அளவில் தயாரித்த கரைசலில் நனைத்து நடவு செய்யப்பட்டது. சொட்டுநீர்ப்பாசன முறையில் தினமும் பாய்ச்சப்பட்டது. வெயில் காலங்களில் பூக்கள் அளவில் சிறியதாவதைத் தவிர்க்க தெளிப்பு நீர்ப்பாசனம் செய்யப்பட்டது. நீர்வழி உரப்பாசனமாக ஏக்கருக்கு மணிச்சத்து 60 கிலோ அடியுரமாக இடப்பட்டது. தழை, மணி, சாம்பல்சத்து 80:20:80 கிலோ, நீரில் கரையும் உரங்களாக (19:19:19 / 12:61:0 / 13:0:45) சொட்டுநீர்ப்பாசன அமைப்பு வழியாக 5 நாட்களுக்கு ஒருமுறை அளிக்கப்பட்டது.
வேப்பம்புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ அளவில் இடப்பட்டது. மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த தயோமீத்தாக்ஸிம் 0.5 கிராம் / லிட்டர் (அ) இமிடாகுளோர்பிரிட் 0.5 மிலி / லிட்டர் என்ற அளவில் பயன்படுத்தப்பட்டது.
மொட்டுத்துளைப்பான் பாதிப்பைத் தவிர்க்க இண்டோ சோகார்ப் 0.7 மிலி /லிட்டர் அல்லது ப்ளுபென்டமைட் 0.5 மிலி / லிட்டர் பயன்படுத்தப்பட்டது. இலைப்புள்ளியைக் கட்டுப்படுத்த புரோபி கோனசோல் 1.5 மிலி / லிட்டர் அல்லது மாங்கோசெப் 2.5 கிராம் / லிட்டர் என்ற அளவில் பயன்படுத்தப்பட்டது.
கிழங்கு அழுகலைக் கட்டுப்படுத்த 'காப்பர் ஆக்ஸிகுளோரைடு' 20 கிராம் / லிட்டர் என்ற அளவில் பயன்படுத்தப்பட்டது.
விளைச்சல் : கிலோ / ஏக்கர் / மாதம் 740
டன் / ஏக்கர் / வருடம் 8.8
செலவு - ஏக்கருக்கு ரூ.68,000
வருமானம் ஏக்கருக்கு ரூ. 3,52,000
வரவு செலவு குறியீடு- 5.0
நானோ பயோ துகள் தொழில்நுட்பம்: இந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் நானோ பயோ துகள்களுக்கு உயிர் உண்டு. அவை மண்ணில் உள்ள கரிமப் பொருட்களை நானோ பயோ துகள்களாக மாற்றும் திறம் வாய்ந்தவை. மாட்டுச்சாணம், கோழி எரு, ஆட்டு எரு, இலை வகைகள் மற்றும் தாவரக் கழிவுகள் ஆகியவை இந்த நானோ பயோ துகள்கள் மண்ணில் வளரச் செய்வதற்கு இன்றியமையாதவையாகக் கருதப்படுகிறது.
நானோ பயோ துகள்கள் நிலத்தில் பரவி பயிர்கள் நன்றாக வளர வேண்டிய மாற்றத்தை உண்டாக்குகிறது. காரம், அமிலம் மற்றும் உப்பு சத்துக்கள் நிறைந்திருக்கும். மண்ணை ஓர் உயர் விளைச்சல் தரும் மண்ணாக மாற்றுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் விபரங்களுக்கு புரபசர் ராஜசேகரன், செல்: 93809 54559.
கால்நடைகளுக்கு தீவன அட்டை: பொதுமக்களுக்கு ரேஷன்கார்டு வழங்கி நுகர்பொருள் வழங்குவதைப் போன்று கால்நடை வளர்ப்பவர்களுக்கு தீவன அட்டை தயாராகி வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டத்திலுள்ள கால்நடைத்துறை இணை இயக்குனர் அலுவலகம் மூலம் பணி துரிதமாக நடந்து வருகிறது. கால்நடை வளர்ப்பவர்களின் பட்டியலைக் கொண்டு மானிய விலையில் மாட்டுத்தீவனம் வழங்குவதற்கான அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ குணம் கொண்ட கருங்கோழி: இந்திய மண்ணில் காணப்படும் 20க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி இனங்களில் 'கடக்நாத்' எனும் கருங்கோழி இனம் ஒரு தரமான நாட்டுக்கோழி வகையாகும். இதன் தசைகள் சாம்பல் நிறமுடையது. சாதாரணமாக சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் காணப்படுகிறது. கொழுப்பு 1.9 - 2.6 சதம் கொலஸ்டிரால் 59-60 மி.கி. / 100 கிலோ இறைச்சிக்கு, புரதம் 21-24 சதம், Omega 6 (ஒமேகா 6) - 410-600 / 100 கிராம் குறைவான கொழுப்பு, அதிக புரதம் உள்ள இந்த கருங்கோழிகளை நம் வீட்டின் புறக்கடையிலே 10-20 வளர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு 'RUDRAS BREEDERS SHANTI' 40/9, Bata Rao Street, Edayampath, Jolarpetai, வேலூர் மாவட்டம் - 635 851.
போன்: 94895 16625.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

