PUBLISHED ON : மார் 02, 2011

மரப்பயிர்களில்களை எடுக்க ஒரு இயந்திரம்: 150 குதிரைத்திறன் கொண்ட டிராக்டரில் பின்புறம் உள்ள ரப்பர் டயர் சக்கரங்களுக்கு பதிலாக இதற்கென வடிவமைக்கப் பட்ட இரண்டு இரும்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கென ஆகும் செலவு ரூ.17,000/-. சுழற் கலப்பையை டிராக்டருடன் இணைக்கப்பட்டு அகன்ற வரிசைப் பயிர்களில் களை எடுக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தால் மணிக்கு அரை ஏக்கர் என்ற அளவில் களை எடுக்கலாம். இதற்காக ஆகும் செலவு எக்டருக்கு ரூ.2000/-. இதற்கு டிராக்டரை இயக்க ஒருவரும், மரங்களைச் சுற்றி களை எடுக்க இரு வேலை யாட்களும் போதுமானது. ஆட்களைக் கொண்டு களை எடுக்க எக்டர் ஒன்றுக்கு ரூ.5000/- செலவாகிறது. அகன்ற வரிசைப் பயிர்கள் இரு பக்கங்களிலும் வரிசைகளில் நடப்படும் போது இந்த இயந்திரம் இரு திசைகளிலும் களை எடுக்க பெரிதும் பயன்படும்.
டிராக்டர் சுழற் கலப்பையால்களை எடுக்கும் போதுகளைச் செடிகள் நன்கு தூளாக்கப்பட்டு மண்ணுடன் கலந்துவிடுகின்றன. இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது தைலமரத்தில் தற்போதைய மரம் நடும் முறையில் உள்ள வரிசைக்கு வரிசை 3 மீட்டர் என்ற இடைவெளிக்கு பதிலாக 2 மீட்டர் இடை வெளியே போதுமானது. இவ்வாறு மரப்பயிர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதன் மூலம் எக்டர் ஒன்றுக்கு ரூ.22,500/- அதிக வருமானம் ஈட்டமுடியும். (தகவல்: அ.தாஜுதீன், பூ.மாசிலாமணி, சி.திவாகர் துரைராஜ், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.பல்கலைக்கழகம், குமுளூர்-621 712. திருச்சி. 0431-320 2300)
ஏலக்காய் அலசும் இயந்திரம்: ஏலக்காயின் தரத்தை நிர்ணயிக்கும் முக்கியமான காரணி அதன் கிளிப்பச்சை நிறமாகும். இதற்கு உரிய பருவத்தில் அறுவடை செய்வது, காய் அலசுவது, அதன் ஈரப்பதத்தை குறைக்க ஏல விவசாயிகளின் மொழியில் சொல்வதானால் ஸ்டோரில் போட்டு உலர்த்துவது.
இடுக்கி மாவட்டத்தில் புளிய மலையில் வீட்டில் வசிப்பவரின் தொழில்நுட்ப புத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஏலக்காய் அலசும் இயந்திரம். இந்த இயந்திரம் சுமார் 100 கிலோ கொள்திறன் கொண்டது. சிலிண்டர் வடிவில் உள்ளது. 90 செ.மீ. நீளமும் 60 செ.மீ. விட்டமும் கொண்டது. 15 எச்.பி. திறனுள்ள மின்சார மோட்டாரால் இயங்கும், அலச வேண்டிய காயை உள்ளே போடவும். அலசி முடிந்தவுடன் வெளியே எடுக்கவும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நிமிடத்தில் 45 முறை சுழலும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கள் உடைபடாமல் பாதுகாக்கப்படுகிறது. தேவையான தண்ணீரை மட்டும் நிரப்பி காயை அலசும் வேலை 30 நொடிகளில் நிறைவு பெறுகிறது. இதோ மிகச்சுத்தமாக அலசப்பட்ட ஏலக்காய் சேகரிக்கப் படுகிறது. இதற்கெல்லாம் மொத்தத்தில் 25 லிட்டர் தண்ணீர் போதுமாகிறது. ஒரு நாளில் சுமார் 8 முதல் 10 டன் ஏலக்காயை அலசி எடுக்க முடிகிறது. இதனை இயக்க ஒரு ஆள் போதுமானது. ஏலக்காயை பதப்படுத்த - அலசுதல் உட்பட ஒரு கிலோவுக்கு ரூ.7/- ஆவதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் விலை ரூ.30,000/-. பதப்படுத்தும் நிலையங்களை வைத்து செயல்படுபவர்களுக்கு இந்த எந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு தனி மனிதர் கொண்டுவரும் காயையும் தனிப்பட்ட முறையில் சிக்கனமான முறையில் அலசித்தர இயலும். (தகவல்: ஜான்ஜோ வர்க்கீஸ், மனோஜ் ஷம்மன், கே.எம்.குருவில்லா, ஜே.தாமஸ், இந்திய ஏலக்காய் ஆராய்ச்சி நிலையம், ஸ்பைசஸ் போர்டு, மயிலாடும்பாறை)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
