PUBLISHED ON : செப் 28, 2011

* தானிய அடை மிக்ஸ்: தெரிந்தெடுக்கப்பட்ட அளவுகளில் சிறு தானியம், பயறு வகைகளின் கலவை - அதிகமான ஊட்டச்சத்து, 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். நன்மைகள்: அதிகமான சிறுதானியங்களைப் பயன்படுத்துதல், உடனே கலந்து சாப்பிடக்கூடிய ஒரு உன்னதமான பொருள். அனைத்து வயதினருக்கும் ஏற்றது. செலவு - ஒரு கிலோ ரூ.55.88.
மேலும் விபரங்களுக்கு: முதன்மையர், மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை-625 104.போன்: 0452-242 3433.
* தானியங்கி புதர் நீக்கும் கருவி: குறைந்த விசைத்திறன் போதுமானது. புற்கள், களைகளை மண் அமைப்பு மாறாமல் வெட்ட ஏற்றது. அடிமரத்திலும் களை எடுக்க இயலும். கரடு முரடான இடங்களிலும் பயன்படுத்தலாம்; பார்த்தீனிய களைச்செடிகளை களைய வல்லது. புல்வெளி மற்றும் மைதானங்களைப் பராமரிக்க ஏற்றது. பவர் டில்லருடன் புழுதி ஓட்ட பயன்படக்கூடியது.
குதிரைத்திறன்: டீசலால் இயங்கக்கூடிய, நீரால் குளிரூட்டப்படும் 13 எச்.பி. பவர் டில்லர், எரிபொருள் தேவை - 2 லிட்டர்/மணி; வெட்டும் தட்டுக்களின் எண்ணிக்கை-16. புதர் வெட்ட ஆகும் செலவு - ரூ.1800/எக்டர். உபயோகத்திறன் - 0.10எக்டர்/மணி (2 ஏக்கர்/நாள்); விலை ரூ.7000/-. மேலும் விபரங்களுக்கு: 'முதன்மையர், வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுலூர்-621 712. போன்: 0431-254 1218.
* பனை மரம் ஏறும் கருவி: மரம் ஏறத் தெரியாதவர்களும் எளிதில் பயன்படுத்தலாம். மேலும் கீழும் நகரும் வசதி கொண்டது. மேல், கீழ் சட்டங்களின் உதவியுடன் நல்ல பிடிமானத்துடன் மரம் ஏற, இறங்க வசதியானது. அலுமினிய ஏணியின் உதவியுடன் மரத்தில் 3மீ உயரம் வரை ஏறி, பின் மடக்கு பலகையின் மேல் அமைந்த ஏறும் கருவியில் வசதியாக அமர்ந்து கருவியை இயக்கலாம். இதன் எடை - 17 கிலோ. விலை ரூ.6000/-
மேலும் விபரங்களுக்கு: 'பேராசிரியர் மற்றும் தலைவர், பண்ணைக்கருவித்துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003,
போன்: 0422-661 1257.
* கரும்புச்சாறில்இருந்து சர்க்கரைப் பாகை பதப்படுத்துதல்:
பிழிந்துஎடுக்கப்பட்ட கரும்புச்சாற்றை அதிக நேரம் அறை வெப்ப நிலையில் சேமிக்க முடியாததால் கரும்புப்பாகாக மாற்றி சேமித்து வைக்கலாம். நன்மைகள்: கரும்புப்பாகு சிறந்த இயற்கை குணங்களுடன் விளங்குவதோடு அல்லாமல் ரசாயன சேர்க்கைஇன்றி விளங்குவது சிறப்பம்சமாகும். சர்க்கரை, பிற இயற்கை இனிப்புகளுக்கு பதிலாக கரும்புச்சாறின் பாகு பயன்படுத்தலாம். மிகையூட்டப்பட்ட பாரம்பரிய அடுமனை, இனிப்பு வகை உணவுப் பொருட்களை கரும்புச் சாறு பாகிலிருந்து தயாரிக்கலாம். கரும்புச்சாறு பாகை தரமான பெட் கலன்கள், கண்ணாடிக் குடுவைகள், அதிக அழுத்தமுள்ள பாலிதீன் பைகளில் அடைத்து 6 மாதங்கள் வரை சேமிக்கலாம்.
பொருளாதாரம்: கண்ணாடி பாட்டில் (200 மிலி) - ரூ.9.11 (கரும்பு பாகு); ரூ.12.61 (சர்க்கரை பாகு) வரவு செலவு விகிதம் - 1.73.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

