
த.வே.ப.க. நெல் ஏ.டி.டீ.49: இந்த புதிய நெல்ரகம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்தமாதம் வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பியல்புகள்: மத்திய சன்ன வெள்ளை அரிசி. 1000 மணிகளின் எடை 14 கிராம்; முழு அரிசி காணும் திறன் 71.3 சதம்; ஒட்டாத உதிரியான சுவையான சாதம். குலைநோய், துங்ரோ நோய், இலையுறை கருகல், இலையுறை அழுகல் நோய்க்கு செயற்கை நோய்க்காரணிகளின் தாக்கத்தில் மித எதிர்ப்புசக்தி; வயல்வெளி ஆய்வில் செம்புள்ளி நோய், இலை மடக்குப்புழுவிற்கு நடுத்தர தாங்கும் திறன்.
இந்த புதிய நெல் ரகத்தின் வயது 130-137 நாட்கள்; மகசூல் 5173 கிலோ/எக்டர். (பிட்டி 5204ஐவிட 10.5 சதம் கூடுதல் விளைச்சல்; அதிகபட்ச மகசூலாக எக்டருக்கு 10,250 கிலோ தானியம் கொடுக்கவல்லது. பருவம்: பின்சம்பா, தாளடி பட்டம்; உருவாக்கம்: சி.ஆர்.1009/ ஜீரக சம்பா ரகங்களின் இனச்சேர்க்கை; பயிரிட உகந்த மாவட்டங்கள்: தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங் களில் பயிரிட ஏற்றது. மேலும் விபரங்களுக்கு: இயக்குனர், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம், ஆடுதுறை, போன்: 0435-247 2108.
த.வே.ப.க.வீரிய ஒட்டு நெல் கோ.4: - இந்த புதிய வீரிய ஒட்டு நெல் எக்டருக்கு 7348 கிலோ மகசூல் கொடுக்கக்கூடியது. இது 27பி11ஐவிட 14 சதம் கூடுதல் மகசூலாகும். அதிகபட்ச மகசூலாக எக்டருக்கு 11250 கிலோ தானியம் கொடுக்கவல்லது. இதன் வயது 130-135 நாட்கள். உருவாக்கம்: கோ.எம்.எஸ்.23ஏ/சிபி174 ஆர் ஆகியவற்றை பெற்றோராகக் கொண்ட வீரிய ஒட்டு ரகமாகும். சாகுபடி செய்ய உகந்த பருவம்: பின்சம்பா, தாளடி. பயிரிட உகந்த மாவட்டங்கள்: தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் பயிரிட ஏற்றது.
சிறப்பியல்புகள்: மத்தியகால மத்திய சன்ன அரிசி கொண்ட வீரிய ஒட்டு; மிதமான அமைலோஸ் மாவுப்பொருள், ஒட்டாத உதிரியான சுவையான சாதம்; குலைநோய், பழுப்பு புள்ளி நோய் ஆகியவற்றிற்கு எதிர்ப்புத்திறனும் பச்சை தத்துப்பூச்சி, வெண்முதுகு தத்துப்பூச்சி, இலையுறை அழுகல், இலையுறை கருகல், துங்ரோ ஆகிய நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது. மேலும் விபரங்களுக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், நெல்துறை பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003.
போன்: 0422-247 4967.
அனுபவ விவசாயியின் கைவண்ணத்தில் உருவான விவசாயக்கருவிகள் வாய்க்கால் எடுக்கும் கருவி, இரட்டை வரிசை கோனோவீடர், அகலம் குறைந்த கேஜ்வீல் ஆகியவை விலை குறைவாகவும், அதிக பலனும் கொடுக்கக் கூடியவை.
இக்கருவிகளில் நுட்பமான மாற்றங்களைச் செய்து அதன் செயல்பாடுகளை மேம்படுத்தி, கூடுதல் பயன்பாட்டிற்கு உட்படுத்தி இருப்பவர் வேளாண்மைச் செம்மல் விருது பெற்றுள்ள விவசாயி துரைசாமி, கரூர் மாவட்டம், குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். தொடர்புக்கு: 99653 45400.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

