தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்


PUBLISHED ON : நவ 23, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 23, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்டுக்கு எண்பது முட்டையிடும் நாட்டுக்குருகு: நாட்டுக்கோழி இனங்களில் ஐந்து ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்ததில் பல அரிய தகவல்கள் கிடைத்ததாக தெரிவிக்கிறார் டாக்டர் சந்திரசேகரன், பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை ஊட்டச்சத்துத்துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி, நாமக்கல். தாத்தையங்கார் பேட்டை பகுதியில் 'குருகு' என்ற நாட்டுக்கோழி இனம் வளர்க்கப்படுகிறது. இதைக் 'குறுவ', 'குறுவை', 'குருவன்' என்ற பல பெயர்களில் அழைக்கிறார்கள். ஆண்டுக்கு அதிகபட்சம் 80 முட்டைகள் வரை இடும். ஆனால் நாட்டு ரகத்தைச் சேர்ந்த மற்ற கோழிகள் 40 முட்டை வரைதான் இடும். குருகுக் கோழிகளுக்கு தாய்ப்பாசம் அதிகம். எனவே குஞ்சுகளை பொன்போல பாதுகாக்கும். உதாரணமாக ஒருமுறை 10 முட்டைகள் அடைகாக்கிறது என்றால் அதில் 8 குஞ்சுகளை வளர்த்து ஆளாக்கிவிடும். இதனால்தான் அந்தப் பகுதி விவசாயிகள் குருகு இனத்தை விரும்பி வளர்க்கிறார்கள். தாத்தையங்கார் பேட்டையின் அருகே உள்ள பவித்திரம் பகுதியில் நடக்கும் சந்தையில் இந்த இனக்கோழி விற்பனைக்கு கிடைக்கும். இந்தச் சந்தை திங்கட்கிழமைதோறும் நடைபெறுகிறது.



தேனீக்கள்: இந்தியாவில் மலைத்தேனீ, இந்தியத்தேனீ, கொம்புத்தேனீ, கொசுத்தேனீ, இத்தாலியத்தேனீ என்று 5 வகைகள் உள்ளன. இதில் இந்தியத்தேனீ, இத்தாலியத்தேனீ, கொசுத்தேனீ மட்டுமே மனிதர்களால் பராமரித்து வளர்க்கப் படக்கூடியவை. தேனீ குடும்பம் ஒன்றிற்கு ஒரு ராணி தேனீயும், நூற்றுக்கணக்கான தேனீ குடும்பம் ஒன்றிற்கு ஆயிரக்கணக்கான வேலைக்காரத் தேனீக்களும் இருக்கும். ராணீத்தேனீதான் கூட்டுத் தலைவி. 3 ஆண்டுகள் வரை வாழும். முட்டையிடுவது மட்டும்தான் இதன் வேலை. இனப்பெருக்கம் செய்வது மட்டும்தான் ஆண் தேனீக்களுக்கு முக்கிய வேலை. இதன் வாழ்நாள் 2 மாதங்கள். வேலைக்காரத் தேனீக்களும் 2 மாதங்கள் மட்டும்தான் வாழும். தேன் சேகரித்து வருதல், கூட்டைப் பராமரித்தல், இளம் தேனீக்களுக்கு உணவு ஊட்டுதல் ஆகிய வேலைகளைச் செய்வது வேலைக்காரத் தேனீக்கள்தான். உணவைச் சேகரிப்பதற்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.



வெள்ளாடு வளர்ப்பு: பண்ணைகளில் 'தலைசேரி', 'சேலம் கருப்பு' ரக வெள்ளாடுகள் லாபம் கொடுக்கக் கூடியவை. தலைச்சேரி ஆடு கேரள மாநிலத்தில் உள்ள தலைச்சேரி பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. ஆடுகள் தேவைப்படுவோர் கேரள விவசாயிகளிடம் நேரடியாக வாங்க முடியும். தமிழகத்தில் உள்ள கால்நடைபல்கலைக் கழகப் பண்ணைகள் சிலவற்றிலும் கிடைக்கும். ஆனால் அதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். சேலம் கருப்பு ரகத்தை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளர்க்க முடியும். சேலம் மாவட்டத்தில் மேச்சேரி, கொளத்தூர், மேட்டூர், வெப்பூர் ஆகிய ஊர்களில் இந்த ஆடுகள் விலைக்கு கிடைக்கும். கிலோ 200 ரூபாய் என்ற கணக்கில் எடை வைத்து ஆடுகளின் விலைநிர்ணயிக்கப் படுகிறது. அதாவது 30 கிலோ எடை கொண்ட ஓர் ஆடு ஆயிரம் ரூபாய் விலைக்கு கிடைக்கும். 20 ஆடுகள் கொண்ட பண்ணையைத் தொடங்க 1,50,000 ரூபாய் வரை முதலீடு தேவைப்படும். முறையாக வளர்த்தால் இந்த முதலீட்டை 3 ஆண்டுகளில் எடுத்துவிடலாம். ஆட்டுத்தீவனத்தை விலைக்கு வாங்கினால் கட்டுப்படி ஆகாது. எனவே சூபா புல், கிளைரிசிடியா, அகத்தி, கல்யாண முருங்கை, வேம்பு என குறைந்தபட்சம் 5 தீவன மரங்கள் இருக்க வேண்டும். விதம் விதமான இலை, தழைகளைத் தின்றால்தான் ஆடுகளுக்கு வயிறு நிறையும். இந்த மரங்கள் வளர்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும். எனவே பண்ணை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தீவனப் புற்களை வளர்க்க ஆரம்பிக்க வேண்டும். வங்கிக்கடன் கேட்டுச் சென்றால் ஆட்டுப்பண்ணை தொடங்குவதற்கான திட்ட அறிக்கை கேட்பார்கள். எனவே அருகிலுள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை அணுகினால் திட்ட அறிக்கையைப் பெறமுடியும். கால்நடை ஆராய்ச்சி நிலையங்களில் நடத்தப்படும் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சியில் கலந்துகொண்டால் அங்கே கிடைக்கும் தகவல்கள் மற்றும் சான்றிதழ் ஆகியவை கடன்பெறுவதற்கு உதவியாக இருப்பதோடு வெற்றிகரமாக ஆட்டுப்பண்ணை வைப்பதற்கு உதவியாக இருக்கும். (தகவல்: துரைசாமி, பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம், சேலம்).

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us