PUBLISHED ON : மார் 14, 2012

மல்லிகையில் ரகங்கள்: இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் 24,000 எக்டர் நிலப்பரப்பில் ஜாஸ்மினம் இன மலர்கள் மட்டுமே 8000 எக்டர் நிலப்பரப்பில் பயிரிடப்படுகின்றன. வணிக ரீதியாக 3 வகையான மல்லிகை சிற்றினங்கள் பயிரிடப் படுகின்றன. அவை குண்டுமல்லி, ஜாதிமல்லி மற்றும் முல்லை வகைகளாகும்.
1. குண்டுமல்லி: ஜாஸ்மினம் சம்பக் (போல்டு இருவாச்சி, ஊசிமல்லி); போல்டு - இரட்டை மொகரா, ஒற்றை மொகரா, ராமநாதபுரம் குண்டுமல்லி. இருவாச்சி - கஸ்தூரி மல்லி, சோயா, மதண்டன், லாங் பிளவர் ராமபாணம், மதுரியா. ஊசிமல்லி - சூஜிமல்லி
'சிங்கப்பூரில் மணக்கும் மதுரை குண்டுமல்லி' என்ற பிரபலமான வழக்கு சொல்லுக்கேற்ப தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் போன்ற கிழக்கிந்திய நாடுகளுக்கு குண்டுமல்லி ஏற்றுமதி பிரபலம் அடைந்து வருகிறது. சிறிய அளவில் மல்லிகை மலர்கள் சிலோன், மலேசியா, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
2. பிச்சிப்பூ அல்லது ஜாதிமல்லி: (ஜாஸ்மினம் கிளாண்டிபுளோரம்) - பெங்களூரு, லக்னோ, திம்பாபுரம், கோயம் புத்தூர் ஒயிட், டிரிப்ளாய்டு மற்றும் தென்காசி வகைகள் இந்தியா வைத் தாயகமாகக் கொண்ட பிச்சிப்பூ ஸ்வே னிஸ்டனிலா, கேண்டகோனியன் மல்லி என்று பல பெயர்களால் சிறப்பித்து கூறப்படுகிறது. கோ.1, கோ.2 ஆகியவை உயர்விளைச்சல் ரகங்களாகும். எக்டருக்கு ஆண்டுக்கு 10,000 - 11,510 கிலோ மகசூல்.
3. முல்லை: (ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்) - மலர்கள் மற்ற ஜாஸ்மின் இன மலர்களைவிடவும் திரண்ட மலர் மொட்டு மற்றும் காம்புகளைக் கொண்டுஇருக்கும்.
பாரிமுல்லை - இது தேர்வு மூலம் உருவாக்கப் பட்டது. இலை கொப்பு ளங்களை உண்டாக்கும் சிலந்திப்பூச்சி மற்றும் இலைகள் சிறு கொத்தாக தோன்றும் நோய்க்கு (பில்லோடி) எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் எக்டருக்கு 7800 கிலோ மகசூல் கொடுக்கவல்லது.
கோ.1, கோ.2 - உயர் விளைச்சல் ரகங்கள் எக்டருக்கு 8800 - 11,200 கிலோ மகசூல் கொடுக்கக்கூடியவை.
பிச்சிப்பூ பெரும்பாலும் கவர்ச்சியான இளம் சிவப்புநிற காம்புகளைக் கொண்டிருப்பதாலும் மற்ற ஜாஸ்மின் இன மலர்களைவிட அதிக வாசனை பெற்று விளங்குவதாலும் மலர்களிலிருந்து வாசனை மெழுகு மற்றும் வாசனை எண்ணெய் தயாரிக்கப்பட்டு நறுமண பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. பிச்சியிலிருந்து (0.25 முதல் 0.31 சதவீதம்) கிடைக்கும் வாசனை மெழுகு, முல்லையைவிட (0.31 முதல் 0.34 சதவீதம்) குறைவாக இருப்பினும் சிறந்த மறுமணத்தாலும் மற்ற சிறப்பு குணங்களாலும் அது உலகச்சந்தையில் முல்லை வாசனை மெழுகைவிட நல்ல விலைபெறுகின்றது. ஜாதிமல்லி வாசனை மெழுகு உலகச்சந்தையில் கிலோ ஒன்றுக்கு சுமார் ரூ.35,000 விலையும், மெழுகை சுத்தப்படுத்தி பிரித்தெடுக்கப்படும் வாசனை எண்ணெய் கிலோ ரூ.1.5 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது.
முல்லை மலர்கள் உதிரிப்பூக்களாகவும் தொடுக்கப்பட்ட சரங்கள் மற்றும் வேணிகளாக பெண்களின் கூந்தலில் அணிவதற்கு பெருமளவில் பயன்படுகிறது. மேலும் திருவிழாக் காலங்களில் மலர் அலங்காரம் செய்வதற்கும் இம்மலர்கள் பெருமளவில் பயன்படுகின்றன.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

