/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
'தெளிப்பு நீர்ப்பாசனம்' நெல் சாகுபடி அமோகம்
/
'தெளிப்பு நீர்ப்பாசனம்' நெல் சாகுபடி அமோகம்
PUBLISHED ON : ஜன 17, 2018

நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூலை பெற விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது நுண்ணீர்ப்பாசன முறை. இதில் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்துாவான் ஆகிய மூன்று முறைகள் நடைமுறையில் உள்ளன. ஐந்து ஏக்கர் வரை உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு அரசு 100 சதவீதம் மானியத்தில், இந்த நுண்ணீர் பாசன வசதி செய்து தருகிறது. விவசாயிகளுக்கு செலவு மிச்சம். ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் திட்டம் செயல்படுகிறது.
வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில், நுண்ணீர் பாசன திட்டங்களை விவசாயிகள் ஆர்வமுடன் செயல்படுத்துகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், வாலாந்தரவை அருகே கீரிப்பூர்வலசை கிராமத்தில் விவசாயி செல்லையன் இரண்டரை ஏக்கரில் நிலக்கடலை சாகுபடிக்காக 100 சதவீதம் மானியத்தில் தெளிப்புநீர் பாசனம் அமைத்துள்ளார்.
அவர் கூறியதாவது: தெளிப்பு நீர்ப்பாசனம் அமைத்த பிறகு அதிக வருவாய் ஈட்டுகிறேன். முன்பு இரண்டரை ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்தால் ஏக்கருக்கு 80 கிலோ கிடைப்பதே அரிது. தெளிப்பு நீர்ப்பாசனத்தை செயல்படுத்திய பிறகு கடந்த அறுவடையின் போது, ஏக்கருக்கு 300 கிலோ கிடைத்துள்ளது.
அதாவது மூன்றரை மடங்கு அதிக விளைச்சல் கிடைத்தது.
நல்ல லாபமும் வந்தது. தற்போது, பருவ மழை காலம் என்பதால், இந்த இடத்தில் நிலக்கடலை சாகுபடி செய்ய முடியவில்லை. இதனால், 110 நாட்களில் அறுவடையாகும் 'கோ 51' நெல் விதைப்பு செய்திருந்தேன். தற்போது மழை பொய்த்துப் போன நிலையில், தெளிப்பு நீர்ப்பாசனம் கைகொடுக்கிறது. தெளிப்பு நீர்ப்பாசன முறையில், நெற்பயிருக்கு நீர்பாய்ச்சி வருகிறேன். இதனால், அதிக லாபம் கிடைக்காவிட்டாலும், நஷ்டம் நிச்சயம் ஏற்படாது, என்ற நம்பிக்கை உள்ளது, என்றார். தொடர்புக்கு 99944 56085.
- சு.பழனிச்சாமி, ராமநாதபுரம்.

