/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கூன் வண்டு
/
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கூன் வண்டு
PUBLISHED ON : நவ 21, 2012

பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்:
தமிழகத்தில்சர்க்கரை வள்ளிக் கிழங்கு பயிரிடப்படும் அனைத்து இடங்களிலும் இவ்வண்டு காணப்படுகிறது. இது சர்க்கரை வள்ளிக் கிழங்கை வயலிலும் சேமிப்புக் கிடங்குகளிலும் தாக்கக்கூடிய ஒருமுக்கியமான பூச்சிபீடை. வண்டுகளின் புழுக்கள் கிழங்குகளைத் துளைத்து, உட்திசுக்களை உண்டு சேதம் விளைவிக்கும். தாக்கப்பட்ட கிழங்குகளிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீசுவதால் அவை உண்பதற்கோ, சமையல் செய்வதற்கோ பயனற்றவைகளாகிவிடும். புழுக்கள் கொடிகளையும் துளைத்து சேதம் விளைவிக்கக் கூடியவை. வண்டுகள் இலைகளையும் கொடிகளையும் கிழங்குகளையும் துளைத்து சேதம் விளைவிக்கக்கூடியவை.பூச்சியின் வாழ்க்கை சரிதம்:
பெண் வண்டு கொடிகளிலும் கிழங்குகளிலும் சிறு குழிகளை உண்டாக்கி அவற்றிலுள்ள சிறிய வெண்மைநிற பளபளப்பான முட்டைகளை தனித்தனியாக இடும். ஒரு வண்டு சுமார் 200 முட்டைகள் வரை இடக்கூடும். முட்டைகளிலிருந்து 3-5 நாட்களில் வெளிவரும் இளம்புழுக்கள், கொடியை அல்லது கிழங்கைத் துளைத்து உட்சென்று, உட்திசுக்களை உண்டு, 25-30 நாட்களில் முழு வளர்ச்சி அடையும். புழுக்கள் வெண்மை நிறத்திலும் கால்களற்றும், பழுப்பு நிறத்தலையுடனும் தென்படும். வளர்ந்த புழுக்கள் கொடியினுள் அல்லது கிழங்கினுள் கூண்டுப்புழுக்களாக மாறி, 7-10 நாட்களில் வண்டுகளாக வெளிவரும். வண்டுகள் மெல்லியனவாகவும் எறும்புபோல் உடலைக் கொண்டும் பளபளப்பான கருமை நிறத்திலும், சிவப்பு நிற மார்புப் பகுதியையும், கால்களையும் கொண்டு காணப்படும். வாய்ப்பகுதி மூக்கு போல் நீண்டும், கீழ்நோக்கி வளைந்தும் தென்படும்.பூச்சிக்கட்டுப்பாடு:
வண்டுகளால் தாக்கப்படாத கொடிகளை நடவுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். தாக்கப்பட்ட கொடிகளையும் கிழங்குகளையும் அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும். சேமிப்புக் கிடங்குகளில் கிழங்குகளைப் பரப்பிவைத்து, அதன் மேல் சுமார் 2.5 செ.மீ. உயரத்திற்கு மணலைப் பரப்பி மூடி வைப்பதன் மூலம் பூச்சி தாக்காமல் பாதுகாக்கலாம். பயிர் இரண்டு மாத கால வயதிருக்கும்போது கார்பரில் 0.1 சத கலவையை 3 வாரத்திற்கு ஒரு முறை மேலும் இரண்டு தடவை தெளிக்க வேண்டும்.
முனைவர் ரா.கோபாலகிருஷ்ணன்,
ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர்,
முனைவர் கோ.பி.வனிதா,
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையம், மதுரை.