PUBLISHED ON : ஜன 11, 2012

விவசாயத்திற்கான தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக எங்கே நீர்ப்பாசனம் மற்றும் வறட்சிப் பிரதேச பயிர்கள் ஒருங்கே பராமரிக்கப் படுகின்றனவோ, அங்கே நீரின் அவசியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பெரும்பாலான நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்ப்பாசன பயிர்களான நெல் மற்றும் கரும்பு போன்றவை, சோளம் மற்றும் கம்புபோன்ற வறட்சிப் பிரதேச பயிர்களோடு சேர்ந்தே விளைவிக்கப்படுகின்றன. குறிப்பாக அதிக அளவு தண்ணீர் தேவைப்படும் பயிர்களில் இந்த வழிமுறைகளை கடைபிடிப்பது மிக மிக அவசியம். கரும்பு போன்ற அதிகஅளவு தண்ணீர் தேவைப்படும் பயிர்களில் சேமிக்கப்படும் நீரானது அதே பகுதியிலுள்ள மற்ற வறண்ட நிலப்பயிர்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடியதாக இருக்கும்.
இன்று, இந்தியாவானது கரும்பு சாகுபடி நிலப்பரப்பிலும் (41 லட்சம் எக்டேர்) உற்பத்தியிலும் (2007ல் 35.5 கோடி டன்) பிரேசில் நாட்டிற்கு அடுத்து இரண்டாவது நிலையில் உள்ளது. இந்தியாவில் இன்று சர்க்கரை உற்பத்தி என்பது 30,000 கோடி மதிப்புள்ள 3.5 கோடி விவசாயிகள் சம்பந்தப்பட்ட, ஜவுளித்துறைக்கு அடுத்து இருக்கும் ஒரு மாபெரும் தொழில் துறையாக உள்ளது. சர்க்கரை தவிர தீவனம், காகிதம் மற்றும் முக்கியமாக எத்தனால் உற்பத்திக்கும் கரும்பு ஆதாரமாக உள்ளது.
செம்மை கரும்பு சாகுபடி (எஸ்எஸ்ஐ): எஸ்எஸ்ஐ எனப்படும் 'செம்மை கரும்பு சாகுபடி' முறையானது குறைந்த அளவு விதை நாற்றுகள் மற்றும் குறைந்த அளவு தண்ணீரை உபயோகித்து சரியான அளவு ஊட்டச்சத்து மற்றும் பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற வழிவகை செய்யும் ஒரு பயிற்சி முறையாகும்.
இதன் முக்கிய கோட்பாடுகள்:
1. ஒரு விதைப்பரு சீவல்களில் இருந்து நாற்றங்கால் அமைத்தல்
2. இனம் (25-35 நாட்கள் வயதான) நாற்றுக்களை எடுத்து நடவு செய்தல்
3. நடவின்போது வரிசைக்கு வரிசை குறைந்தது 5 அடி இடைவெளியும் நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியும் பராமரித்தல்
4. நீர்ப்பாசனத்தின்போது தேவையான அளவு ஈரப்பதம் மட்டும் நிலவுமாறு நீர் பாய்ச்சுதல்
5. இயற்கையிலான உரங்கள், பயிர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகளுக்கு போதிய அளவு முக்கியத்துவம் அளித்தல்.
6. ஊடுபயிர் பராமரித்து மண்வளம் மற்றும் மகசூல் அதிகரிக்க ஆவன செய்தல்.
இத்தகைய முறையினால் தண்ணீர் உபயோகிப்பு திறன் கூடுகிறது. சரியான அளவிலான உரங்களை உபயோகிப்பதன் மூலம் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. காற்று மற்றும் சூரியஒளி அதிக அளவு பயிர்களுக்கு கிடைப்பதால் கரும்பில் சர்க்கரை கட்டுமானம் அதிகரிக்கிறது. மொத்த சாகுபடி செலவு விவசாயிகளுக்கு குறைவதோடு ஊடுபயிர் மூலம் இரட்டை வருமானம் பெறலாம் என்பது நிதர்சனமான உண்மையாகும். செம்மை சாகுபடி முறையானது அதிகளவிலான விதைக்கரணைகள், நீர் மற்றும் குறுகிய இடைவெளியுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்ற, தற்போது கடைபிடித்து வரும் கரும்பு சாகுபடி முறைக்கு ஒரு மாற்று முறை ஆகும்.
-கோ.பி.வனிதா மற்றும் நா.சோ.வெங்கட்ராமன்,
வேளாண் அறிவியல் நிலையம்,
வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மதுரை-625 104.

