தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/கரும்பு சாகுபடியும் ஊடுபயிரும்

கரும்பு சாகுபடியும் ஊடுபயிரும்

கரும்பு சாகுபடியும் ஊடுபயிரும்


PUBLISHED ON : ஜன 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக சர்க்கரை உற்பத்தியில் 60 சதவீதம் கரும்பில் இருந்தும் 35 சதவீதம் சர்க்கரை கிழங்கில் இருந்தும் கிடைக்கிறது. இந்தியா, கியூபா, பிரேசில், மெக்சிகோ, பாகிஸ்தான், சீனா ஆகியவை கரும்பு உற்பத்தி செய்யும் நாடுகள். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கரும்பு சாகுபடியாகிறது.

கரும்புக்கான பட்டம்

கரும்பு சாகுபடி செய்வதற்கு டிசம்பர் முதல் மே மாதம் உகந்த பருவம்.

கோ சி 25, கோ 86032 ரகங்கள் விளைச்சலுக்கு ஏற்றது. செம்மண், வண்டல் மண், களிமண், மணற்பாங்கான மண்ணிலும் சாகுபடி செய்யலாம். மண்ணின் கார அமிலத்தன்மை 5 முதல் 8.5 வரையிலும், உப்பின் அளவு 2.0 டெசிமலுக்குள் இருந்தால் கரும்பு நன்கு வளரும்.

விதைக்கரணை தேர்வு

6 முதல் 7 மாத வயதுடைய நோய் இல்லாத தரமான நாற்றாங்காலில் இருந்து கரணைகளை நட வேண்டும். வயல்களில் கரணை அழுகல் நோய் வருவதை தடுக்க 100 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் கார்பன்டசிம், ஒரு கிலோ யூரியாவை கரைத்து ஒரு ஏக்கருக்கு தேவையான கரணைகளை 20 நிமிடம் ஊற வைத்து நடவு செய்ய வேண்டும்.

பார் அமைத்தல்

பாரின் ஆழம் ஓரடி இருக்குமாறு பார் கலப்பையால் ஆழப் பார் அமைத்து கரும்பு நடவு செய்ய வேண்டும். சிறிய வயல்கள், வாய்க்கால் மூலம் பாசனம் செய்யும் வயல்களுக்கு பார் இடைவெளி நான்கரை அடி இருக்க வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம், இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் வயல்கள் எனில் பார் இடைவெளி ஐந்தரை முதல் ஆறரை அடியும், களர் அல்லது உவர் நிலமாக இருந்தால் மூன்றடி இடைவெளியும் இருக்க வேண்டும்.

இயற்கை உரங்கள்

மிதவெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்படுவதால் மண்ணில் உள்ள அங்கக கரிமச்சத்துக்கள் விரைவில் மட்கி உரமாகிறது. அதிக மகசூல் பெற அங்கக கரிமச்சத்தின் அளவு மண்ணில் ஒரு சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்யவில்லை எனில் ஏக்கருக்கு 6 டன் தொழு உரம் வீதம் கடைசி உழவிற்கு முன் இட்டு உழவேண்டும். தொழு உரம் குறைவாக இருந்தால் வயலில் இடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன், 2 டன் தொழு உரத்துடன் 4 மூடை சூப்பர் பாஸ்பேட் உரத்தை கலந்து ஊட்டமேற்றிய தொழுஉரமாக மாற்றி, பிறகு கரும்பு நடவின் போது நீரோடையில் இடுவது சிறந்தது.

விதைத்தேவை எவ்வளவு

பாரின் இடைவெளிக்கு ஏற்ப நான்கரை அடி இருந்தால் ஏக்கருக்கு இருபரு கரணையாக 22 ஆயிரம் தேவைப்படும். 2 வரிசை நடவாக ஐந்தரை அடி இடைவெளி இருந்தால் 24ஆயிரம், 2 வரிசை நடவாக ஆறரை அடி இருந்தால் 20ஆயிரம், மூன்றடி இடைவெளி எனில் 30 ஆயிரம் கரணைகள் ஏக்கருக்குத் தேவைப்படும்.

அடியுரம் அவசியம்

கரணை நடவிற்கு முன் அடியுரமாக ஏக்கருக்கு 4 மூடை சூப்பர் பாஸ்பேட் உரத்தை நீரோடையில் இட வேண்டும். கடைசி உழவில் தொழு எரு இடவில்லை எனில் மண்புழு உரம் அல்லது கோழி எரு ஏதேனும் ஒன்றை நீரோடையில் இடவேண்டும். மண்மாதிரி ஆய்வு அல்லது முந்தைய பயிர்களில் சல்பர் குறைபாடு இருந்தால் நடவின் போது ஏக்கருக்கு 100 கிலோ ஜிப்சத்தை கரணைக்கு அருகில் இடவேண்டும்.

3 அல்லது நான்கரை அடி இடைவெளியில் பார் இருந்தால் நீரோடையில் கரணையை ஒன்றரை கரணைகளாக ஒரு மீட்டர் நீளத்தில் 7 இருபரு கரணையாக நடவேண்டும். ஐந்தரை முதல் ஆறரை அடி இடைவெளி இருந்தால் நீரோடையின் இருபுறத்திலும் இரு வரிசைக்கு இடைவெளி முக்கால் அடி இருக்குமாறு கரணையை நட வேண்டும். நட்டவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

மழைக்காலத்திலும் தண்ணீர் தேங்கும் நிலத்திலும் கரணைகளை பாரின் சரிவில் நட்டால் அழுகல் நோய் குறைந்து முளைப்புத்திறன் அதிகரிக்கும். வயலில் கரையான் இருந்தால் குளோரி பைரிபாஸ் அல்லது இமிடாகுளோபிரிங் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வீதம் கலந்து கரணைகளை ஊற வைத்த பின் நடவேண்டும்.

ஊடுபயிர் நடவு

கரும்பு நடவு செய்தவுடன் பாரின் இடைவெளியில் பசுந்தாள் உரப்பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்தால் மண்ணின் அங்கக கரிமச்சத்து அதிகரிக்கிறது. களைகள் கட்டுப்படுத்தப்பட்டு இளங்குருத்துப் புழு தாக்குதலும் குறைகிறது. மேலும் பயறு வகை பயிர்கள் அல்லது காய்கறிப் பயிர்களை ஊடுபயிர் செய்தால் கூடுதல் லாபம் பெறலாம்.

களை நிர்வாகம்

களை அதிகமாக இருந்தால் பயிர் வரிசையில் ஒரு வரி களையெடுக்க வேண்டும். விதைத்த 30வது, 60, 90வது நாட்களில் மண்வெட்டியால் வரப்புகளில் களை எடுக்க வேண்டும். நடவு செய்த 3ம் நாளில் அட்ரசின் 2 கிலோ தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். ஒட்டுண்ணிக் களை இருந்தால் எக்டேருக்கு 500 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ அளவு 24-டி சோடியம் உப்பு கலந்து தெளிக்கவேண்டும். சோயா மொச்சை, உளுந்து, மணிலா ஊடுபயிர் சாகுபடி செய்தால், களைகள் முளைக்கும் முன்பாக ஒரு எக்டேருக்கு ஒன்றே கால் கிலோ அளவு கயோபென்கார்ப் தெளிக்க வேண்டும்.

மேலுரம் இடவேண்டும்

பாசன வசதியுள்ள இடங்களில் ஒரு எக்டேருக்கான 275 கிலோ தழைச்சத்து, 112.5 கிலோ சாம்பல் சத்துகளையும் கிணற்றுப் பாசனம் எனில் 225 கிலோ தழைச்சத்து, 112.5 கிலோ சாம்பல் சத்துகளை மூன்று சம பாகங்களாகப் பிரித்து கரும்பு நடவு செய்த 30வது, 60, 90ம் நாளில் இடவேண்டும்.

வேப்பம் புண்ணாக்கு கலந்த யூரியாவை (தழைச்சத்து) பயன்படுத்தினால் ஒரு எக்டேருக்கு 75 கிலோ அளவு தழைச்சத்தை மிச்சப்படுத்தலாம். எனவே ஒரு எக்டேருக்கு 67.5 கிலோ யூரியாவுடன் 27.5 கிலோ வேப்பம் புண்ணாக்கினை கலந்து நடவு செய்த 30, 60, 90ம் நாட்களில் இட வேண்டும்.

பாசன இடைவெளி

கரும்பில் நடவு முதல் 36 நாட்கள் வரையான முளைப்புப் பருவத்தில் மணல் நிலமாக இருந்தால் 2 நாட்களுக்கு ஒருமுறையும் களிமண் நிலமாக இருந்தால் 3 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். 36 முதல் 100 நாட்கள் வரையான கிளைப்புப் பருவம், 101 முதல் 270 நாட்கள் வரையான வளர்ச்சிப்பருவத்தில் மணல்நிலத்திற்கு 8 நாட்களுக்கு ஒருமுறை, களிமண் நிலத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை நீர்பாய்ச்ச வேண்டும். முதிர்ச்சி பருவத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை, களிமண்ணில் 14 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன் நீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.

- மகேஸ்வரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு - அருண்ராஜ், தொழில்நுட்ப வல்லுநர் (மண்ணியல் துறை),சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், தேனி 96776 61410

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us