PUBLISHED ON : மே 29, 2013
பொதுவாக கோடை காலங்களில் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைந்தும், உடல் அயற்சி மிகுதியாகவும் இருக்கும். ஆகையால் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் கோடை காலத்தில் கால்நடைகளின் உற்பத்தி குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்.
1. பசுக்களுக்கு மேய்ச்சல் நேரத்தை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலுமாக மாற்றிக்கொண்டால் வெப்பத் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
2. கோடைகாலத்தில் பசும்புல் நிறைய அளிக்க வேண்டும். தற்போது வீரிய ரக ஒட்டுப்புல்லான கோ-3, தீவனச்சோளம், வேலி மசால் மற்றும் அகத்தி ஆகிய பசுந்தீவனம் அளித்தால் வெயில் அயற்சியை தடுத்தும் பால் உற்பத்தியையும் சினைப்பசுக்களின் சினைக்காலத்தில் கன்றின் வளர்ச்சியையும் மேம்படுத்தலாம்.
3. காலை மற்றும் மாலையில் இரு வேளைகள் பசுக்களை குளிப்பாட்டலாம். அவ்வாறு செய்தால் உடல் வெப்பம் தணிந்து பசுக்களில் பால் உற்பத்தி குறையாமல் செய்யலாம்.
4. கால்நடைகளின் கொட்டகையின் மேற்புரத்தில் சாக்குத் துணிகளை ஈரப்படுத்தி பரவவிடுதல் அல்லது தென்னை கீற்று, பனை ஓலை முதலியன மேல் தண்ணீர் காலை, மாலை தெளித்துவிடுதல் மிகவும் அவசியம்.
5. கால்நடைகளுக்கு சுத்தமான குடிநீர் நிறைய கொடுத்தல் அவசியம். அவை குடிக்கும் நீரில் சத்து மாத்திரை அல்லது வைட்டமின் கலவை முதலியன கலந்து கொடுத்தால் வெயில் அயற்சி குறையும்.
6. கோடை காலத்தில் கறவை மாடுகளுக்கு மடிநோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் கொட்டகையின் தரை மற்றும் மாட்டின் மடி, பின்பகுதிகளை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் (1%) கொண்டு தினமும் கழுவிவிடுதல் வேண்டும்.
7. வீட்டில் வளர்க்கப்படும் மாடுகள் மற்றும் ஆடுகளை வெயிலில் கட்டாமல் நிழல் தரும் மரங்கள் அல்லது கொட்டகையில் பகல் பொழுதில் வைத்திருப்பது நலம்.
8. அடர் தீவனம் கலவை கண்டிப்பாக கோடை காலத்தில் கால்நடைகளுக்கு கொடுப்பது அதனுடைய உற்பத்தி திறனை பாதிக்காமல் இருக்கும். கறவை மாடுகளுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு 400 கிராம் அடர் தீவனம் என்ற அளவிலும் சினை பசுக்களுக்கு 1.5 கிலோ அடர் தீவனம் என்ற அளவிலும் அளிக்க வேண்டும்.
9. கோடை காலங்களில் பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏற்படுவதால் மூன்று மாதங்களுக்கு முன் ''ஊறுகாய் புல்'' தயாரித்து வைத்துக்கொண்டால் வெயில் காலத்தில் அளிக்க ஏதுவாகும். பொதுவாக கோ-3 புல் என்ற பசும்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி நமது தேவைக்கேற்ப குழி வெட்டி அதில் இப்புற்களை போட்டு 2:1 என்ற சதவீதத்தில் வெல்லம் மற்றும் உப்பு கரைசல் தெளித்து காற்று புகாமல் மூடிவிட வேண்டும். 
பின் 70 நாட்கள் கழித்து இப்புல்லை உபயோகித்தால் மிகுந்த சத்துடனும், பசுந்தீவனம் கெடாமலும் கோடைக்காலத்தில் புல் தட்டுப்பாடு இல்லாமலும் இருக்கும்.
கு.சுகுமார் மற்றும் பு.பூவராஜன்
நாமக்கல்-637 002.

