/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பசுமை இல்ல வாயுக்களை குறைக்கும் இனிப்பு சோளம்
/
பசுமை இல்ல வாயுக்களை குறைக்கும் இனிப்பு சோளம்
PUBLISHED ON : ஜன 01, 2025

எத்தனால் மற்றும் பயோடீசல் எடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இனிப்பு சோளத்தை விவசாயிகள் பயிரிட்டால் லாபமும் கிடைக்கும்.
இனிப்பு சோளத்தின் தண்டு பச்சை கரும்பு எனப்படுகிறது. இதன் மகசூல் எக்டேருக்கு 35 முதல் 40 டன் ஆகவும் எஸ்.எஸ்.வி. 84 ரகத்தில் தண்டின் சாறு விளைச்சல் 40 சதவீதம் மற்றும் எக்டேருக்கு 4510 லிட்டர் எத்தனால், தானிய மகசூல் 1300 முதல் 1800 கிலோ கிடைக்கும்.
மானாவாரிக்கு ஏற்ற பயிர்
தட்பவெப்பத்தை தாங்கி மானாவாரி பயிராக வளரக்கூடியது. சர்க்கரை தொழில் துறைக்கு இணக்கமான பயிர். சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. செடி 190 செ.மீ. முதல் 270 செ.மீ. உயரம் வளரக்கூடியது. இவற்றில் குளிர்பானங்கள் தயாரிக்கலாம்.
பருவம் மற்றும் வகைகள்
தமிழகத்தில் காரீப் (ஜூன், ஜூலை), ராபி (செப்., அக்.,), கோடை (மார்ச், ஏப்.,) காலத்தில் எஸ்.எஸ்.வி., 84, ஆர்.எஸ்.எஸ்.வி.,9 ரகங்களை பயிரிடலாம். சி.எஸ்.எச்.22 எஸ்.எஸ்., மற்றும் ஆர்.வி.ஐ.சி.எஸ்.எச்.,28 வீரிய ஒட்டு ரகங்களை ஜூலை - ஆகஸ்ட் மற்றும் நவம்பர் - ஜனவரியில் விதைக்கக்கூடாது.
விதைநேர்த்தி முறை
பூஞ்சைக்காளான் நோயை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு கேப்டான் அல்லது நிரம் 2 கிராம் கலந்து விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் விதைநேர்த்தி செய்யவேண்டும்.
ஒரு எக்டேருக்கு தேவையான விதைகளை மூன்று பாக்கெட் (600 கிராம்) அசோஸ்பைரில்லம், ஆறிய அரிசிக்கஞ்சியுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். தளிர் ஈ மற்றும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த 0.5 கிராம் பசையை 20 மில்லி தண்ணீரில் கரைக்க வேண்டும். இதனுடன் 4 மில்லி போசலோன் 35 இ.சி. சேர்த்து ஒரு கிலோ விதையுடன் கலந்து விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்த வேண்டும்.
பண்ணை நிலம் தயாரிப்பு
ஒரு எக்டேருக்கு 10 முதல் 12.5 கிலோ விதைகள் தேவை. 45 செ.மீ. இடைவெளியில் முகடுகளையும் பள்ளங்களையும் அமைக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 45 செ.மீ. மற்றும் செடிக்கு செடி 15 செ.மீ. இடைவெளி விட வேண்டும்.
விதைகளை 2 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். தளிர் ஈயால் சேதமடைந்த நாற்றுகளை அகற்ற வேண்டும். நாற்றாங்கால் பராமரித்தும் நடவு செய்யலாம்.
மண்பரிசோதனை அவசியம்
உரத்தேவையை மதிப்பிடுவதற்கு மண்பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. உரச்செலவை குறைப்பதுடன் உரத்தின் சரியான அளவை இடுவதற்கும் மண்பரிசோதனை அவசியம். பயிர் பருவத்திற்கு முன்பே பரிசோதனை செய்யவேண்டும். பொதுவாக எக்டேருக்கு 12.5 டன் தொழுஉரத்தை கடைசி உழவில் இடவேண்டும்.
120:40: 40 கிலோ வீதம் தழை, சாம்பல், நுண்ணுாட்டக்கலவை மற்றும் மணிச்சத்தை அடியுரமாக இட வேண்டும். விதைத்த 15 மற்றும் 30 வது நாளில் மீதி தழைச்சத்தை 25 சதவீதம் பயன்படுத்த வேண்டும்.
களை மேலாண்மை
எக்டேருக்கு அபராசின் 50டபிள்யூ.பி. 500 கிராம் களைக்கொல்லியை விதைத்த மூன்று நாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும். 40 முதல் 45 நாட்களுக்குள் கையால் ஒரு களை எடுக்கவேண்டும். குறைந்தளவாக 400 முதல் 450 மி.மீ., மழை போதும். பயிரின் சராசரி காலம் 100-110 நாட்கள்.
அறுவடை செய்யலாம்
முனைகளில் உள்ள இலைகளை அகற்றி விட்டு இனிப்பு சோளக்கதிர்களை தனியாக அறுவடை செய்யலாம். அதன் பின் தரைமட்டத்தில் தண்டை வெட்டி சாறுக்கு அனுப்பலாம். இனிப்பு சோள தண்டுகளை 10 முதல் 15 கரும்புகள் கொண்ட கட்டுகளாக கட்டி 48 மணி நேரத்திற்குள் ஆலைகளுக்கு அனுப்பலாம். சூரியஒளி நேரடியாக படாமல் இருக்க இலைகளால் மூடவேண்டும்.
விதைகளின் சேமிப்பு
விதைகளில் ஈரப்பதம் 10 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் வகையில் உலர்த்த வேண்டும். கரும்பு அரைக்கும் சர்க்கரை ஆலையிலேயே இதனை அரைக்கலாம். தற்போதுள்ள காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற பயிர் இது. வளிமண்டலத்திலுள்ள அதிகப்படியான கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சக்கூடிய தன்மையுடையது.
ஆலைக்கரும்பு அறுவடை செய்தபின் மறுதாம்பு பயிரில் ஊடுபயிராக இதனை நடவு செய்யலாம். மேலும் இனிப்பு சோளம் மூலம் உற்பத்தி செய்யப்படும் எத்தனால் பசுமை இல்ல வாயுக்களை 71 முதல் 72 சதவீதம் வரை குறைக்கிறது. மேலும் மின்உற்பத்தி, தீவனங்கள், குளிர்பானங்களுக்கும் பயன்படுகிறது.
ஒரு எக்டேருக்கு சராசரியாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவாகும். கதிர்கள் மற்றும் தண்டின் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை, ஹைதராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்திலும் விதைகள் கிடைக்கும்.
வாசுகி, துணை இயக்குநர்விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறை, மதுரை. 80722 45412