/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நெட்டை உண்டு... குட்டை உண்டு... ஓடு ராஜா...
/
நெட்டை உண்டு... குட்டை உண்டு... ஓடு ராஜா...
PUBLISHED ON : ஜூலை 25, 2018

தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களில் ராமநாதபுரம் தொன்று தொட்டு முதலிடம் வகிக்கிறது. கண்ணுக்கு எட்டிய துாரம் வரை கருவேல மரங்கள் வளர்ந்து மிரட்டுகிறது.
காற்றுடன் கலந்திருக்கும் ஈரப்பதத்தையும் கருவேல மரங்கள் விட்டு வைப்பதில்லை. முடிந்தளவு உறிஞ்சிக்குடித்து மென் மேலும் வளர்ச்சியடைகிறது.
வானம் பார்த்த பூமியான ராமநாதபுரத்தில் விவசாயிகள் படும்பாடு தான் பரிதாபம். கடல் வளம் மீனவர்களுக்கு கை கொடுக்கிறது. எனினும் உவர்ப்பு நிலமான இம்மண்ணை பொன் விளையும் பூமியாக மாற்றும் திட்டத்தை தமிழக முதல்வராக இருந்த பக்தவச்சலம் கொண்டு வந்தார்.
இம்மாவட்டத்தில் வறட்சியை தாக்குப்பிடித்து வளரும் தென்னையை நாற்றுகளாக அதிகளவு உற்பத்தி செய்து மாநிலம் முழுவதும் பயிரிட நடவடிக்கை எடுத்தார். இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் வேளாண்மைத்துறையின் தென்னை நாற்று பண்ணை 60 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது. இதை 1961 பிப்ரவரி 3ல் பக்தவச்சலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சகலகலா வல்லவன்
கோவை, பொள்ளாச்சி, மதுரை சோழவந்தான், திண்டுக்கல் அய்யம்பாளையம், கன்னியாகுமரி பகுதி தென்னைகள் இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விளைகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்றுகளை ராமநாதபுரம் போன்ற வறட்சி மாவட்டங்களில் வளர்க்க இயலாது.
ஆனால் ராமநாதபுரத்தில் கடும் வறட்சியை தாக்குப்பிடித்து வளர்க்கப்படும் தென்னை நாற்றுகள் வறட்சி, குளிர்ச்சி என சகல சீதோஷணங்களையும் தாங்கி வளரும் 'சகலகலா வல்லவன்' என பெயரெடுத்துள்ளது.
இதன் காரணமாகவே ஆண்டு தோறும் தென்னங்கன்றுகள் உற்பத்தி அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்பண்ணையில் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.
மானிய விலை ரெடி
உச்சிப்புளி தென்னை நாற்று பண்ணைக்கு தேவையான நெத்துகளை 30 ஆண்டுக்கு மேல் வளர்ந்த தென்னை மரங்களில் இருந்து தேர்வு செய்யப்படுகிறது. இந்தாண்டு நெட்டை ரகத்தில் 15 ஆயிரம், குட்டை ரகத்தில் ஒன்பதாயிரம் நெத்துக்கள் தேர்வு செய்து நடவு செய்தனர். இவற்றை ஒரு மாதம் நிழல் காய்ச்சலில் வைக்கின்றனர்.
இரண்டு மாதம் பதனக்குழியில் வைக்கின்றனர். மூன்று மாதம் வயலில் நடவு செய்து வளர்க்கின்றனர் 120வது நாளில் இருந்து விற்பனை செய்கின்றனர். நெட்டை ரகம் 10 ஆயிரத்து 250, குட்டை ரகம் 6 ஆயிரத்து 300 என உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு உற்பத்தி விலையான நெட்டை 45 ரூபாய், குட்டை 65 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் விற்கப்படுகிறது.
தொடர்புக்கு 88387 97698.
- கா.சுப்பிரமணியன், மதுரை.

