/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஏழு அடி உயரம் வளரும் 'திருச்சி 3' நெல் ரகம் - மதுரை விவசாய தம்பதி சாதனை
/
ஏழு அடி உயரம் வளரும் 'திருச்சி 3' நெல் ரகம் - மதுரை விவசாய தம்பதி சாதனை
ஏழு அடி உயரம் வளரும் 'திருச்சி 3' நெல் ரகம் - மதுரை விவசாய தம்பதி சாதனை
ஏழு அடி உயரம் வளரும் 'திருச்சி 3' நெல் ரகம் - மதுரை விவசாய தம்பதி சாதனை
PUBLISHED ON : ஜன 02, 2019

மதுரை மாவட்டம் அண்டமான் முன்னோடி விவசாயி சோலைமலை.
இவர், கோவை வேளாண் பல்கலை ஆண்டு தோறும் கண்டுபிடிக்கும் புது ரக நெல் விதைகளை பயிரிட்டும், இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தியும், அதிக மகசூல் பெற்று சாதனை படைப்பதை இலக்காக கொண்டுள்ளார்.
2013 ல் 'சிதம்பரம் 1009' (சி.ஆர்.1009) ரக நெல்லை பயிரிட்டு அதிக மகசூல் பெற்று சாதனை படைத்ததற்காக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் 5 லட்சம் ரூபாய், அதே ஆண்டு தேசிய அளவில் சாதனை விவசாயியாக தேர்வு செய்யப்பட்டு அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் ஒரு லட்சம் ரூபாய் பரிசுகள் பெற்றார்.
இவரது மனைவி சத்துணவு அமைப்பாளர் மீனாட்சி. இவர் ஓய்வு நேரத்தில் கணவருடன் விவசாய பணிகளை மேற்கொள்கிறார். தம்பதியினர் இணைந்து தங்களின் இரண்டு ஏக்கரில் 'திருச்சி 3' என்ற புதிய ரக நெல் பயிரிட்டுள்ளனர்.
'திருச்சி 3' நெல் ரகம்
சோலைமலை, மீனாட்சி கூறியதாவது: மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் இயங்கும் வேளாண் அறிவியல் நிலைய திட்ட அலுவலர் செல்வி ரமேஷ், அலுவலர் செல்வராணி வழங்கிய 'திருச்சி 3' ரக நெல் விதையை ஏக்கருக்கு 15 வீதம் முதல்முறையாக இரண்டு ஏக்கரில் பயிரிட்டுள்ளோம். நெல் ரகங்களிலேயே 'திருச்சி 3' 6 முதல் 7 அடி உயரம் வளரும். பார்ப்பதற்கு கரும்பு பயிர் போல் தெரியும். உயர் ரகம். 135 நாளில் அடர்த்தியான கதிர்களில் பால் முற்றி வயல் முழுவதும் நறுமணம் வீசும். இதுவே அறுவடைக்கு ஏற்ற பருவம். எனினும், இது சாதம் சமைக்க இயலாது. பொரி, அவல், மாவு தயாரிக்க மட்டுமே பயன்படும். மற்ற ரக நெல் ஏக்கருக்கு அதிகபட்சம் 30 (100 கிலோ ஒரு மூடை) முதல் 35 மூடை வரை மட்டுமே கிடைக்கும். 'திருச்சி 3' ரகம் 50 முதல் 60 மூடை வரை கிடைக்கும், என எதிர்பார்க்கிறோம்.
'காய்ச்சல்' 'பாய்ச்சல்'
இயற்கை முறையில் விளைவிக்க வேண்டும் என்பதற்காக நாற்று நடவுக்கு முன் நிலத்தில் 'சணப்பை' விளைவித்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழுதோம். இதனால் மண்ணில் நுண்ணுாட்ட சத்துக்கள், மண் புழுக்கள் அதிகம் உருவாகும்.
நாற்று நடவுக்கு பின் ஏக்கருக்கு 500 கிராம் டி.ஏ.பி., 500 கிராம் யூரியா மற்றும் பயிர் வளர்ச்சி 50வது நாளில் ஏக்கருக்கு 50 கிலோ பொட்டாஷ், 25 கிலோ யூரியா இடப்பட்டது. வைகை அணை நீர் கிடைப்பதால் 'காய்ச்சலும், பாய்ச்சலும்' தொழில்நுட்பத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறோம். பயிரிடப்பட்டு 100 நாட்கள் கடந்து விட்டது.
தை மாதத்திற்கு பின் அறுவடை. நல்ல மகசூல் கிடைக்கும், என எதிர்பார்க்கிறோம். இணை இயக்குனர் குமாரவடிவேல், மேற்கு உதவி இயக்குனர், வேளாண் அலுவலர்கள் அவ்வப்போது வயலை பார்வையிட்டு ஆலோசனை வழங்கி உதவினர், என்றார். தொடர்புக்கு 93441 31977.
- கா.சுப்பிரமணியன்,
மதுரை.

