PUBLISHED ON : செப் 12, 2018

இந்தியாவில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு மானாவாரி எனப்படும் மழையை நம்பி உள்ள சாகுபடி நிலங்களாக உள்ளன. இந்நிலத்தின் மேல் விழும் ஒவ்வொரு துளி மழை நீரும் கோடி ரூபாய்க்கு சமம். ஏனெனில் மண்ணில் உயிரியல் இயக்கம் ஏற்பட வழிவகுக்கும் மண்ணில் ஈரத்தை வேறு எந்த வழியிலும் தர இயலாது. மண்ணில் நீர்ப்பிடிப்பு திறன் குறைவாக உள்ளதால் பெய்த மழை நீரை சேமிக்காமல் விடுவதும் தானே பூமிக்கும் சென்று விடும் என்று நினைத்து விடக்கூடாது.
மானாவாரி நிலங்களில் சரிவுக்கு குறுக்கே சம மட்ட வாய்க்கால் அமைத்து சம உயர வரப்பு மூலம் தான் இது சாத்தியம். அங்கு நிலத்தை பகுதி பகுதியாக பிரித்து வேளாண் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
சரிவு அதிகமாக இருந்தால் நிச்சயம் மழைநீர் மண்ணையும் அடித்து சென்று வளத்தை வெகுவாக குறைத்திடும். அரை அடிமேல் பகுதி வளமான மண் உற்பத்தி ஆக 1,000 ஆண்டுகள் ஆகிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மண் மற்றும் நீரை பரிசோதனை செய்து ஆய்வு அடிப்படையில் தேவைப்படும் உரம் இட வேண்டும்.
மானாவாரி பகுதிகளில் பண்ணை குட்டைகள் அவசியம். கரைகள் உயர்த்திய தடுப்பணைகள், தாவர வரப்புக்கள் அமைக்க வேண்டும். மிகவும் எளிதில் நீர் வடிந்து ஓடத்தக்க சரிவான பகுதிகளில் ஓடுகின்ற நீரை தவழ்ந்து செல்லும்படி பார்த்து கொள்ள வேண்டும்.
இதற்கு சம மட்ட வரப்புகள் அமைத்து கருங்கல் மூலம் அமைப்புகள் தயாரித்து தண்ணீர் நிலத்தில் உட்புகும் நேரத்தை அதிகரிக்கலாம். ஆழச்சால் அகலப்பாத்தி அமைத்தல் அகலமான பாத்திகளில் இருபுறமும் பயிரிடலாம். பலவித மண் வகைக்கு ஏற்ற பயிர்கள், இதற்கு உதவுவதால் நீர் குறைவாகத் தேவைப்படும். வறட்சிக்குரிய தாவரங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
வட்டப்பாத்திகள் அமைத்தல், நீர் கொண்டு செல்லும் வாய்க்கால் கரைகளை வலுப்படுத்த வேண்டும். ஆழச்சால் அகலப்பாத்தி என்பது பெட் அகலம் 150 செ.மீ., இருக்க வேண்டும். ஒரு ஆழமான ஆழச்சால் ஒட்டிய பகுதி இதில் உள்ளதால் நல்ல நன்மை வரும். மானாவாரி பயிர்களுக்கு விதை நேர்த்தி பல பயிர் சாகுபடி, வரப்பு பயிர் சாகுபடி உத்திகள் உதவும். மானாவாரி பொன் விளையும் பூமி ஆக்க திட்டமிடல் அவசியம். தொடர்புக்கு 98420 07125.
- டாக்டர் பா.இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர் தேனி.

