PUBLISHED ON : மே 15, 2024

இயற்கை பண்ணையம் என்பது ரசாயனம் கலக்காத, கால்நடைகள் அடிப்படையில் செயல்படக்கூடியது. சுற்றுச்சூழல் சார்ந்து பயிர், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஒருங்கிணைப்பின் மூலம் செயல்படுவதே இயற்கை பண்ணையம்.
இயற்கை வேளாண்மையின் தேவை
ரசாயன உரங்கள், பூச்சிமருந்துகளால் இயற்கையான உணவுச்சங்கிலி நஞ்சாக்கப்பட்டு அதிகளவில் சேமிக்கப்படுகிறது. இதனால் புற்றுநோய், காலநிலை மாறுபாடு, மண்ணின் வளம் குன்றுதல், சில உயிரினங்கள் முற்றிலுமாக அழிதல், ரசாயன பூச்சி மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மை, சிறுபான்மை பூச்சிகள் பெரும்பான்மை பூச்சிகளாக மாறுதல், சாகுபடி செலவு அதிகரித்தல் மற்றும் விவசாயிகளின் தற்கொலை போன்ற பாதகங்கள் ஏற்படுகிறது. எனவே இயற்கை வேளாண்மையே இன்றைய தேவை.
இயற்கை பண்ணையத்தின் கூறுகளாக இயற்கை உரம், பூச்சிவிரட்டிகளை சொல்லலாம். விதைக்கும் முன் விதைக்கு ஊட்டம் அளிக்கும் கலவை பீஜாமிர்தம். நாட்டு மாட்டு கோமியம், சாணம், கண்ணாம்பு கலவையுடன் ஊறவைத்தால் பீஜாமிர்தம் கிடைக்கும். மண் வளம் மேம்படுத்த நாட்டு மாட்டு கோமியம், சாணம், பயறு மாவு வகைகள், வெல்லம் கலந்த கலவை மூலம் ஜீவாமிர்தம் தயாரிக்கலாம். மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைக்கவும் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் இலை தழைகள், பயிர்க் கழிவுகளை கொண்டு மூடாக்கு இடுதல் அவசியம். மண்ணின் ஈரப்பதம், காற்றோட்டம், நீர் சேமிப்பு திறனை அதிகப்படுத்த மக்கிய தாவர மண், மண்புழுக்களை ஊக்குவிக்க வேண்டும். பூச்சி, நோய், களைகளை கட்டுப்படுத்த இயற்கை பூச்சி விரட்டிகள், உபகரணங்கள் பயன்படுத்த வேண்டும்.
மண்ணில் நுண்ணுயிர்களின் அளவு, செயல்பாடு இரண்டும் மண் ஆரோக்கியம், பயிரின் ஆரோக்கியத்திற்கும் அதன் மூலம் மனிதர்கள், கால்நடைகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. பண்ணையத்தில் பல பயிர் சாகுபடி அதாவது ஆண்டுக்கு எட்டு பயிர்கள் சாகுபடி செய்யப்பட வேண்டும். கூடுதல் எண்ணிக்கையிலான பல பயிர்கள் மூலம் கூடுதல் பயன்களைப் பெறலாம். மண்ணைக் குறைவான அளவிலும் குறைவான எண்ணிக்கையிலும் உழவேண்டும். கால்நடைகள் வளர்ப்பு அவசியம்.
மண்ணின் மக்கும் தன்மையும் அளவையும், பயன்பாட்டையும் நுண்ணுயிர்கள் தீர்மானிப்பதால் கூடுதல் நுண்ணுயிர்களின் செயல்பாடு இருக்க வேண்டும். கால்நடை சாணம், கழிவுகளை நுண்ணுயிர்கள் நொதித்தல் செயல்பாட்டின் மூலம் உயிர் ஊக்கிகள் செயல்பட வைக்க வேண்டும். மண்ணில் பல்வேறுபட்ட மற்றும் கூடுதலான பயிர்க்கழிவுகளை மறுசுழற்சியின் மூலம் மண்ணில் இட வேண்டும். பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்த கலவையை நிலத்திலேயே தயாரித்து பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
பீஜாமிர்தம் தயாரிப்பு முறை
20 லிட்டர் தண்ணீரில் சாணம் 5 கிலோ, பசுவின் கோமியம் 5 லிட்டர், சுண்ணாம்பு 50 கிராம், நிலத்தின் மண் ஒரு கைப்பிடி அளவு எடுத்து முதல் நாள் மாலை 6:00 மணிக்கு ஒரு பாத்திரத்தில் கலந்து வைக்கவேண்டும். மறுநாள் காலை 6:00 மணி வரை ஊற விட்டால் பீஜாமிர்தம் தயார். இதை விதைகளின் மேல் தெளிக்கலாம். விதை நேர்த்தி செய்ய வேண்டிய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் வேர்களை கரைசலில் நனையவிட்டு நடவு செய்யலாம். இதன் மூலம் வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்களின் தாக்குதல் தடுக்கப்படும். எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
கன ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை
பசுஞ்சாணம் 100 கிலோ, வெல்லம் 2 கிலோ, பயறுமாவு 2 கிலோ எடுத்து ஒன்றாக கலக்க வேண்டும். உப்புமா பதம் வருவதற்கு தேவையான அளவு நாட்டு மாட்டு சிறுநீரை கலந்து உருட்டி நிழலில் காயவைக்க வேண்டும். தேவைப்படும் போது உதிர்த்துப் பயன்படுத்தலாம்.
பயிருக்கு தேவையான ஈரப்பதத்தை நீராவியாக (வாபாசா முறை) அளிக்க வேண்டும். இதற்கு மாலைநேர நீர் பாய்ச்சுதல் முக்கியமானது.
- பானுபிரகாஷ்
வேளாண் உதவி இயக்குநர்
நயினார்கோவில்
94430 90564