PUBLISHED ON : மே 22, 2024
'பயிர்களை பொறுத்தவரை ஒட்டுண்ணிகளை சார்ந்து வாழ்வதே விவசாயிகளின் இயற்கை சாகுபடிக்கும் மகசூலுக்கும் கைகொடுக்கும்' என்கிறார் மதுரை வேளாண் துறை மத்திய திட்ட துணை இயக்குநர் அமுதன்.
பயிர்களை தாக்கும் பூச்சிகளை நன்மை செய்யும் ஒட்டுண்ணிகள் மூலம் கட்டுப்படுத்துவது குறித்து அவர் கூறியதாவது:
ஒவ்வொரு முறை பயிர் அறுவடை முடிந்தபின் மண் பரிசோதனை செய்வது மிகவும் நல்லது. நெல், கம்பு, சோளம் என என்ன பயிர் விதைக்கிறோமோ அதற்கேற்ற சத்துகளை அவை மண்ணில் இருந்து உறிஞ்சி அறுவடையாகிறது. ஒவ்வொரு பயிரும் மண்ணில் எடுத்துக் கொள்ளும் சத்துகளும் வேறுபடும். குறைந்தபட்சம் ஆண்டுதோறும் மண் பரிசோதனை செய்தால் குறைந்தபட்ச உர மேலாண்மை செய்வதுடன் பூச்சிகளை கட்டுப்படுத்தவும் செய்யலாம்.
மண் பரிசோதனை செய்த பின் எந்த பயிருக்கு எந்த உரம் தேவை என பட்டியலிட்டு அதற்கேற்ற உர நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தேவையற்ற கூடுதல் உரச்செலவை தவிர்க்க முடியும். சில வகை உரங்கள் அதிகமாக இடுவதன் மூலம் பயிரில் பச்சையம் அதிகரித்து பூச்சிகளை வாவென்று அழைத்து சேதத்தை அதிகப்படுத்துகிறது.
பயிரில் ஒன்றிரண்டு பூச்சிகளைப் பார்த்தவுடன் கண்ணை மூடிக்கொண்டு ரசாயன பூச்சிமருந்து தெளிக்கக்கூடாது. இதனால் பூச்சிகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அவற்றின் தாக்குதலும் பயிரில் அதிகரிக்கும். பூச்சிக்கொல்லி மருந்து என்பது கடைசித்தீர்வாக இருக்க வேண்டுமே தவிர முதல் முயற்சியாக மாறக்கூடாது.
ஒட்டுண்ணிகள் அவசியம்
மண்ணில் இயற்கையான பாக்டீரியாக்கள், நன்மை செய்யும் பூச்சிகள் வாழ்கின்றன. அதிக உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் போது அவை இறந்து தீமை செய்யும் பாக்டீரியா, பூச்சிகள் பெருகிவிடும். பூச்சிக் கட்டுப்பாட்டில் ஒட்டுண்ணிகள் மிகப்பெரிய பங்காற்றுகின்றன.
டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம், கைலோனிஸ், பிரஸிலையென்சிஸ் ஒட்டுண்ணிகளை பயிருக்கேற்ற வகையில் பயன்படுத்த வேண்டும். இந்த ஒட்டுண்ணிகள் டெஸ்ட் டியூபில் வளர்த்து பஞ்சால் மூடப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனைக்கு வழங்கப்படும். இவற்றை நேரடியாக வயலில் விடும் போது தீமை செய்யும் பூச்சிகளை தாக்கி அழிக்கும்.
டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம்
நெல்லில் தண்டு துளைப்பான் தாக்குதல் இருந்தால் ஒரு எக்டேருக்கு 5 சி.சி., அளவு டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் ஒட்டுண்ணியை நாற்று நட்ட 30வது, 37 நாட்களில் விட வேண்டும். கரும்பில் நுனி குருத்துப்புழு தாக்குதலுக்கு ஒரு எக்டேருக்கு 2.5 சி.சி. ஒட்டுண்ணியை கரணை நட்ட 60 வது நாளில் இருந்து 10 நாட்கள் இடைவெளியில் 6 முறை விட வேண்டும்.
டிரைக்கோகிரம்மா கைலோனிஸ்
மக்காச்சோளத்தில் தண்டு துளைப்பான் தாக்குதலுக்கு ஒரு எக்டேருக்கு 4 சி.சி. டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒட்டுண்ணியை நட்ட 45 ம் நாளில் இருந்து 10 நாட்கள் இடைவெளியில் 6 முறை விட வேண்டும்.
கத்தரியில் காய்ப்புழு, குருத்துப்புழு தாக்குதலுக்கு 2.5 சி.சி. எடுத்து காய்ப்பிடிக்கும் பருவத்தில் இருந்து 7 நாட்கள் இடைவெளியில் 6 முறை விட வேண்டும்.
வெண்டையில் பச்சை காய்ப்புழு தாக்குதலுக்கு பூக்கும் பருவத்தில் இருந்து 7 நாட்கள் இடைவெளியில் 6 முறை 2.5 சி.சி. ஒட்டுண்ணி விடவேண்டும். அவரை, மொச்சை பச்சை காய்ப்புழுவிற்கு நட்ட 45ம் நாளில் இருந்து 7 நாட்கள் இடைவெளியில் 6 முறை 5 சி.சி. ஒட்டுண்ணி விட வேண்டும். பருத்தியில் பச்சை காய்ப்புழு தாக்குதலுக்கு நட்ட 45ம் நாள் முதல் 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை 6.25 சி.சி. விட வேண்டும்.
டிரைக்கோகிரம்மா பிரஸிலையென்சிஸ்
தக்காளியில் காய்ப்புழு இருந்தால் ஒரு எக்டேருக்கு 5 சி.சி டிரைக்கோகிரம்மா பிரஸிலையென்சிஸ் ஒட்டுண்ணியை நட்ட 45ம் நாள் முதல் 7 நாட்கள் இடைவெளியில் 6 முறை விட வேண்டும். பப்பாளியில் மாவுப்பூச்சி தென்பட்டவுடன் 100 எண்ணிக்கையில் 'அசிரோபேகஸ் பப்பாயே' ஒட்டுண்ணியை விடவேண்டும். தென்னையில் கருந்தலைப்புழு தாக்குதலை ஏற்படுத்தும். ஜனவரி முதல் 'பிரக்கான் பிரிவிகார்னிஸ்' ஒட்டுண்ணியை மரத்திற்கு 50 என்ற எண்ணிக்கையில் விட வேண்டும்.
இந்த ஒட்டுண்ணிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண் துறையின் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் வாங்கலாம். மதுரை மேலுார் விநாயகபுரம் நீர்மேலாண்மை பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள ஆய்வகத்தில் விவசாயிகள் வாங்கலாம் என்றார்.
- எம்.எம்.ஜெயலட்சுமி, மதுரை