/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மண்ணுக்கு தேவை மட்கிய தொழுஉரம் மனமிருந்தால் நிலத்தில் தயாரிக்கலாம்
/
மண்ணுக்கு தேவை மட்கிய தொழுஉரம் மனமிருந்தால் நிலத்தில் தயாரிக்கலாம்
மண்ணுக்கு தேவை மட்கிய தொழுஉரம் மனமிருந்தால் நிலத்தில் தயாரிக்கலாம்
மண்ணுக்கு தேவை மட்கிய தொழுஉரம் மனமிருந்தால் நிலத்தில் தயாரிக்கலாம்
PUBLISHED ON : ஜூன் 26, 2024
மண்வளத்தை பாதுகாத்து நீடித்த நிலையான உற்பத்தியை பெற மண்ணில் அதிகளவு அங்கக சத்துக்களை இடவேண்டும். அனைத்து வகையான பயிர் சாகுபடிக்கு ஒரு ஏக்கர் நிலத்தில் 5 டன் மட்கிய தொழுஉரம் இடவேண்டும்.
கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்ததால் விவசாயிகளுக்கு போதுமான தொழுஉரம் கிடைப்பதில்லை. எளிய முறையில் உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்தி குறைந்த செலவில் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கலாம்.
ஒரு ஏக்கருக்கு தேவையான ஒரு டன் ஊட்டமேற்றிய மட்கிய தொழு உரத்தை பயிர் சாகுபடி துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன் நிலத்திலேயே தயாரிக்கலாம். ஒரு டன் மட்கிய குப்பை அல்லது தொழு உரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மண்ணில் வாழும் வேர் முடிச்சு பாக்டீரியாவான பேசில்லஸ் சப்டிலிஸ் ஒரு கிலோ, உயிர் பூஞ்சாணக் கொல்லிகளான டிரைக்கோடெர்மா விரிடி, வெர்டிசீலியம் லகானி, மெட்டாரைசியம் அனிசோபிலியே, பெவேரியா பேசியானா ஆகியவற்றை தலா ஒரு கிலோ எடுத்துக் கொள்ள வேண்டும்.
உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா தலா ஒரு கிலோ எடுத்து அனைத்தையும் கலந்து நிழலான இடத்தில் படுக்கை போல அமைக்க வேண்டும். 20 முதல் 30 நாட்கள் தண்ணீர் தெளித்து வைத்திருந்தால் போதும். இந்த ஊட்டமேற்றிய தொழு உரத்தை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் அங்கக சத்தின் அளவை அதிகப்படுத்தி மண் வளத்தை மேம்படுத்தலாம். பயிர்களுக்கு தேவையான நீர்ச்சத்து தொடர்ந்து கிடைக்கிறது. மண்ணில் உள்ள பேரூட்ட சத்துகள், நுண்ணுாட்ட சத்துகள் பயிர்களுக்கு எளிதில் கிடைக்க செய்கிறது.
பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகமாகி மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் பெருகி பிற சத்துகள் பயிர்களுக்கு கிடைக்கச் செய்கிறது. பல வகையான உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை தொழு உரத்துடன் கலந்து இடுவதன் மூலம் பூச்சி, நோய்கள் பயிரை தாக்குவதை குறைக்கலாம். இதன் மூலம் இயற்கை முறையில் பயிர் பாதுகாப்பை மேற்கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் நஞ்சில்லா உணவை தயாரிக்கவும் முடியும்.
- கமலா லட்சுமிதுணை இயக்குநர்விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலையம், மதுரை