PUBLISHED ON : ஏப் 09, 2014

இன்று தமிழ்நாட்டில் தென்னை மகசூல் குறைந்து வருகிறது. விவசாயிகள் தென்னை மரங்களை சரிவர பராமரிப்பதில்லை. பலர் சரிவர உரம் போடாமல், மரங்களை பழுது பார்க்காமல், நீர் மேலாண்மை பற்றி அறியாமல் உள்ளனர். இதுவே மகசூல் குறைவுக்குக் காரணம்.
நீர்ப்பாசனம், சரியான தருணத்தில் ஏன் தேவை?
* தென்னை மட்டைகள், குலைகள் திடகாத்திரமாக இருக்க...
* இரசாயன மாற்றங்கள் நடந்திட
* வெப்பத்தை சமநிலையில் வைத்திட
* ஒளிச்சேர்க்கை நடைபெற
* தேவையான பயிர் உணவுகளை மண்ணில் இருந்து கரைந்த நிலையில் கிரகிக்க மழை இல்லாத காலங்களில் நீர்ப்பாசனம் தேவை.
நீரின் அவசியமும், வேரின் அமைப்பும்: வேரின் அமைப்புக்களை நன்கு தெரிந்து கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும். மர 90% வேர்கள் 2 மீட்டர் ஆர வட்ட பரப்பளவிற்குள் அதாவது 12.5 ச.மீ. உள்ளேயே காணப்படும். 15 மீ ஆழம் வரை 4000 முதல் 7000 வேர்கள் சம மட்டத்தில் அமைந்திருக்கும். தென்னை நட்ட முதல் வருடம் ஒருநாள் விட்டு ஒருநாள் 10 லி தண்ணீரும், மூன்று வயது வரை வாரம் இருமுறை 40லி தண்ணீரும், பின் வாரம் 60லி தண்ணீரும் பாய்ச்ச வேண்டும். 2 மீட்டர் ஆர வட்டப்பகுதிக்கு மட்டும் நீர் பாய்ச்ச வேண்டும்.
வட்டப்பாத்தி முறை, பானைவழி நீர்ப்பாசனம், சொட்டுநீர்ப்பாசனம் ஆகிய முறைகளில் நீர்ப்பாசனம் செய்யலாம். சொட்டு நீர் குழாயின் மூலம் உரம் செலுத்தப்படுவதால், இம்முறை சிறப்பானது. மணற்பாங்கான நிலத்திற்கு வண்டல், குறைத்து பொருக்கு மரத்திற்கு 200 கிலோ இடலாம். பசுந்தாள் உரம், நார்க் கழிவுகள், மக்கிய எரு இட்டால் நீர்ப்பிடிப்பு அதிகரிக்கும். மண்ணின் ஈரப்பதத்தை பராமரிக்க வேண்டும்.
மழைக்கால தொடக்கத்தில் தோப்புகளை உழவு செய்ய வேண்டும். நல்ல வடிகால் வசதி தென்னைக்கு அவசியம். காரணம் வடிகால் இல்லாவிடில் தண்ணீர் தேங்கி விடும். நீரும் உரமும் சரிவர விஞ்ஞான முறைப்படி வழங்காவிடில் மகசூல் குறைந்து விடும்.
கீழ்க்கண்ட வலைத்தளங்கள் மூலம் தென்னை நீர் மேலாண்மை பற்றி தெளிவாக அறியலாம்.
www.cdb.org., www.tnau.ac.in., www.icar.nic.in.
- எம்.ஞானசேகர்,
விவசாய ஆலோசகர்: 93807 55629

