/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கூடி வாழ்ந்தே கோடி நன்மை பெறுவோம்
/
கூடி வாழ்ந்தே கோடி நன்மை பெறுவோம்
PUBLISHED ON : ஜூலை 09, 2025

திருமங்கலம் சிறுதானிய விவசாயிகளை இணைத்து 2021ல் வாகை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் தற்போது 750 விவசாயிகள் இணைந்துள்ளனர். நபார்டு வங்கி மூலம் நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்தப்படுகிறது.
மதுரை விவசாய கல்லுாரி வளாகத்தில் உள்ள நபார்டு வங்கியின் மாபிப் அமைப்பு எங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கிறது. நிறுவனம் தொடங்கிய புதிதில் மாட்டுத்தீவனம் தயாரித்து விற்பனை செய்தோம். அரிசி, கோதுமை மாவு, பிற மாவு வகைகள், மசாலா பொடிகள் அரைப்பதற்கான இயந்திரங்களை வாங்கியிருந்தோம். மேலும் எண்ணெய் தயாரிப்புக்கு இயந்திரங்கள் வாங்கியிருந்தோம். மாட்டுத்தீவனம், மாவு, மசாலா பொடிகள், எண்ணெய் வகைகளை குறைந்தபட்ச லாபம் வைத்து விற்பனைக்கு கொண்டு வந்தோம்.
மதுரை திருமங்கலம், சுற்றியுள்ள பகுதிகளில் மானாவாரி விவசாயம் தான். இங்கு குதிரைவாலி, வரகு, சாமை சிறுதானியங்கள் அதிகம் விளைகிறது. சிறுதானியங்களுக்கு என சுத்தம் செய்வது, அரைப்பது போன்ற கருவிகள் எங்களிடம் இல்லை.
75 சதவீத மானியத்தில் கருவிகள்
வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துறை சார்பில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் கீழ் ரூ.25 லட்சத்திற்கான கருவிகள் வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் சிறுதானியங்களை சுத்தம் செய்வது, உமி நீக்குவது, கல் நீக்குவது, கலர் சார்ட்டர் மெஷின் மூலம் பிற கலப்பட அரிசியை நீக்குவது, பேக்கிங் செய்வது போன்ற சிறுதானியங்களுக்கு என சுத்தம் செய்வது, அரைப்பது போன்ற 9 வகையான கருவிகள் வாங்குவதற்கு ரூ.25 லட்சம் கடன் பெற்றோம்.
அதில் 75 சதவீதம் தமிழக அரசின் மானியமாக கிடைத்தது. எங்களது கடன் மதிப்பு 25 சதவீதமாக குறைந்தது. இந்த கருவிகள் மூலம் நார்ச்சத்து அதிகமுள்ள பட்டை தீட்டாத சிறுதானிய அரிசி, பாலீஷ் செய்த குறைந்த நார்ச்சத்துள்ள சிறுதானியங்களை விற்பனை செய்கிறோம். மேலும் வாடகை கட்டணத்தில் ராகி, கம்பு, கோதுமை மாவு, சத்துமாவு அரைத்து கொடுக்கிறோம். இதற்கென தனியாக இயந்திரம் உள்ளது. மதிப்பு கூட்டிய பொருளாக குக்கீஸ் தயாரிக்கிறோம்.
லாபம் பகிர்கிறோம்
விற்பனைத் தொகையில் ரூ.100 லாபம் வந்தால் அந்த லாபத்தை பகிர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை விவசாயிகளுக்கு வழங்குவோம். அல்லது விவசாயிகளிடம் தெரிவித்து அந்த தொகையில் கூடுதல் இயந்திரங்கள் வாங்குவோம். நாங்கள் தயாரித்த பொருட்களை விற்பதற்காக மதுரை திருமங்கலம் உழவர் சந்தையில் ஒரு கடை அமைத்துள்ளோம். வாகைக்குளம் மில்லிலும் ஒரு கடை வைத்துள்ளோம்.
திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்களை இ - நாம் எனப்படும் மத்திய அரசின் தேசிய வேளாண் சந்தையிலும் விற்றுத் தருகிறோம். தேவைப்பட்டால் மற்ற விவசாயிகளின் விளைபொருட்களை நாங்களும் வாங்கி மதிப்புக் கூட்டி விற்பனை செய்கிறோம்.
விவசாயிகளுக்கு லாபம்
மேலும் வியாபாரிகள் நேரடியாக நிறுவனத்தில் இருந்து தேவையான விளைபொருட்களை வாங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். எங்களிடம் கொடுப்பதற்கும் வியாபாரிகளிடம் விளைபொருளை கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. வியாபாரிகளிடம் 50 கிலோ மூடை கொடுப்பதென்றால் கூடுதலாக ஒரு கிலோ வரை சேர்த்து கொடுக்க வேண்டும்.
எடைக்குறைப்பு பிரச்னையை சந்திக்க வேண்டும். விற்றதும் பணம் உடனடியாக கிடைக்காது. 30 முதல் 40 நாட்கள் வரை பணத்தை பிரித்து கொடுப்பார்கள். நாங்கள் எடுக்கும் போது மிகச்சரியான அளவில் எடையிடுவோம். அதற்குரிய பணத்தை உடனடியாக விவசாயியின் வங்கிக்கணக்கில் செலுத்தி விடுவோம்.
விவசாயிகளின் களத்திற்கு நேரடியாக சென்று விளைபொருட்களை அங்கேயே எடையிட்டு எங்களது வாகனத்தில் ஏற்றி செல்கிறோம். இதே விவசாயிகள் திருமங்கலம், மதுரைக்கு விளைபொருளை கொண்டு செல்வதென்றால் போக்குவரத்து செலவாக ரூ.3000 ஆகும். நாங்களே சாக்கும் கொண்டு வந்து பேக்கிங் பண்ணுவதால் விவசாயிகளுக்கு சாகுபடியைத் தவிர வேறு வேலையில்லை. ஒரு வாரத்திற்குள் எல்லா விவசாயிகளிடமும் இருந்து அறுவடை செய்து விடுவோம்.
இதனால் நேரமும் போக்குவரத்து செலவும் விவசாயிகளுக்கு மிச்சமாகிறது. மார்க்கெட் விலையுடன் ஒப்பிடும் போது கிலோவுக்கு ஒரு ரூபாய் வரை கூடுதலாக தருகிறோம். தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் கீழ் வேளாண் துறை மூலம் இரண்டாண்டுகளுக்கு முன்பு வாகைக்குளம் கிளஸ்டர் என்ற பெயரில் குதிரைவாலி பயிரிடும் 25 விவசாயிகளை ஒருங்கிணைத்து 25 எக்டேரில் சிறுதானிய சாகுபடி செய்கிறோம்.
அதற்காக உழுவதற்கான செலவு, இயற்கை உரம், விதைகளுக்கு மானியத்தை தமிழக அரசு வழங்குகிறது. இடைத்தரகர் இல்லாததால் விவசாயிகளுக்கு லாபம் முழுமையாக கிடைக்கிறது. ஓராண்டில் வரகு, சாமை, குதிரைவாலி என இதுவரை 25 டன் அளவுக்கு பெற்று விற்பனை செய்துள்ளோம் என்றார். இவர்களிடம் பேச: 63845 04376.
- எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை

