பெங்களூரு நகருக்கு 2வது விமான நிலையம் அமைச்சர் எம்.பி.பாட்டீல் முக்கிய ஆலோசனை
பெங்களூரு நகருக்கு 2வது விமான நிலையம் அமைச்சர் எம்.பி.பாட்டீல் முக்கிய ஆலோசனை
ADDED : ஜூன் 21, 2024 05:47 AM

பெங்களூரு: பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பெங்களூரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு எச்.ஏ.எல்., பகுதியில் உள்நாட்டு பயணியர் விமான நிலையம் இயங்கி வந்தது. பயணியர் எண்ணிக்கை அதிகமானதால், புறநகர் பகுதியில் உள்ள தேவனஹள்ளிக்கு மாற்றப்பட்டது. வி.வி.ஐ.பி., ராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே எச்.ஏ.எல்., விமான நிலையம் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது, தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெவ்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. நாளுக்கு நாள் பயணியர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மற்றொரு விமான நிலையம் பெங்களூருக்கு தேவை என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து, கர்நாடக கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், விதான் சவுதாவில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு துறை செயலர் மஞ்சுளா, கர்நாடக தொழிற்சாலைகள் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குனர் சதீஷ், செயல் நிர்வாக இயக்குனர் பிரகாஷ் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், எம்.பி.பாட்டீல் பேசியதாவது:
டில்லி, மும்பை நகரங்களுக்கு அடுத்து, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் தான், அதிக கூட்ட நெரிசல் மிக்க விமான நிலையமாக உள்ளது. கடந்தாண்டு மட்டுமே, 3.75 கோடி பயணியர், பெங்களூரு விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர்.
மேலும், 4 லட்சம் டன் சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இரண்டாவது பயணியர் விமான நிலையம் தேவைப்படுகிறது. இது குறித்து, ஆய்வறிக்கை சமர்பிக்க வேண்டும்.
தேவனஹள்ளி விமான நிலையம் அமைக்கும் போது, 25 ஆண்டுகள் வரை, அதாவது 2033 வரை, 150 கி.மீ., இடைவெளியில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க கூடாது என்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் போட்டு, 9 ஆண்டுகள் முடிந்துள்ளது.
எனவே, இப்போது முதலே மற்றொரு விமான நிலையம் அமைக்க திட்டமிட்டு செயல்பட வேண்டும். பெங்களூரின் மக்கள் தொகை ஒரு கோடியை தாண்டி உள்ளது. இங்கு, சர்வதேச நிறுவனங்கள் செயல்படுகின்றன.
பெங்களூரை சுற்றி உள்ள நகரங்கள் மட்டுமின்றி, ஆந்திராவின் சில மாவட்டங்களும் கெம்பேகவுடா விமான நிலையத்தை நம்பி உள்ளன. புதிய விமான நிலையத்துக்கு, நிலம் கையகப்படுத்துதல், நிவாரண நிதி வழங்குதல் போன்ற பணிகளுக்கு நீண்ட காலம் தேவை. தொழில் வளர்ச்சியும் பெருகும்.
இவ்வாறு அவர் பேசினார்.