சிறையில் மொபைல் போன் மீட்பு பிரஜ்வலுக்கு டி.ஜி.பி., எச்சரிக்கை?
சிறையில் மொபைல் போன் மீட்பு பிரஜ்வலுக்கு டி.ஜி.பி., எச்சரிக்கை?
ADDED : ஆக 18, 2026 02:47 AM

பெங்களூரு: சிறையில் மொபைல் போன் பயன்படுத்தி, அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய முன்னாள் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவை, டி.ஜி.பி., அலோக் குமார் கண்டித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சில நாட்களுக்கு முன், சி.சி.பி., போலீசார், திடீர் சோதனை நடத்தினர். அப்போது பாலியல் பலாத்கார வழக்கில், தண்டனை அனுபவிக்கும் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவிடம் மொபைல் போன் மற்றும் பென்டிரைவ் கண்டுபிடிக்கப்பட்டன.
இவர் சிறையில் மொபைல் போனில் பேசும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. இது, சிறை உயர் அதிகாரிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமார், கடுப்படைந்துள்ளார். சிறைக்கு சென்ற அவர், பிரஜ்வல் ரேவண்ணாவை கண்டித்துள்ளார்.
'உங்களால் துறையின் மரியாதை பாழாகி விட்டது. என் தொழில் வாழ்க்கையில், எப்போதும் இந்த அளவுக்கு நான் வருந்தியது இல்லை. உங்களால் நான் தலை குனியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனியாவது ஒழுங்காக இருங்கள். சிறை விதிமுறைகளை பின்பற்றுங்கள்' என அறிவுறுத்தினா ர்.
அப்போது பிரஜ்வல் ரேவண்ணா, 'இல்லை சார்... நான் எதுவும் செய்யவில்லை' என மழுப்பியுள்ளார். மேலும் எரிச்சல் அடைந்த டி.ஜி.பி., அலோக்குமார், 'எனக்கு அனைத்தும் தெரியும். உங்கள் நாடகத்தை நிறுத்துங் கள்.
உங்களுக்கு மொபைல் போன் கொடுத்தது யார் என்பதை, நீங்கள் கூறாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். மீண்டும் இது போன்று நடந்து கொண்டால், நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்' என எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
