/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மேல்சபையில் மசோதாக்கள் அங்கீகாரம்
/
மேல்சபையில் மசோதாக்கள் அங்கீகாரம்
ADDED : மார் 12, 2025 11:52 PM
பெங்களூரு: சட்டசபையில் அங்கீகாரம் பெற்ற, பல்வேறு மசோதாக்கள், மேல்சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, அங்கீகாரம் பெற்றன.
கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட, கர்நாடக மித மிஞ்சிய வட்டி விதிப்பதை தடை செய்யும் திருத்த மசோதா - 2025, கர்நாடக விவசாய கூட்டுறவு மார்க்கெட் விவகாரம் திருத்த மசோதா - 2025, கர்நாடக சிறு கடன் மற்றும் பலவந்தமாக வசூலிப்பதை கட்டுப்படுத்தும் திருத்த மசோதா - 2025, கர்நாடக லேவாதேவிதாரர்கள் திருத்த மசோதா - 2025 மசோதாக்கள் ஆகியவை அங்கீகாரம் பெற்றிருந்தன.
இந்த மசோதாக்களை, நேற்று மேல்சபையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா தாக்கல் செய்தார். அவர் பேசியதாவது:
கடனை பலவந்தமாக கடனை வசூலிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில், தண்டனை, அபராதம் விதிக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மக்களுக்கு உதவும் வகையில் கொண்டு வரப்பட்டதாகும். இதனால் அரசுக்கு எந்தவிதமான சுமையும் ஏற்படாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க செய்யும் அம்சங்கள் மசோதாவில் உள்ளன.
தனியார் நபர்கள் அளிக்கும் கடனால், மக்கள் கடன்காரர்கள் ஆவதை தடுக்கும் நோக்கில், அளவுக்கு அதிகமான வட்டி விதிப்பதை தவிர்த்து, மக்களை பாதுகாத்து அவர்கள் பொருளாதார பலத்துடன் வாழ வழி செய்யும் நோக்கில், மித மிஞ்சிய வட்டி விதிப்பதை கட்டுப்படுத்தும் மசோதா கொண்டு வரப்பட்டது.
ஆர்.பி.ஐ., விதிமுறைப்படி, வட்டி விதிக்க வேண்டும். அப்பாவிகளை அடக்கி ஆளக்கூடாது. இதை மனதில் கொண்டு, மசோதா வகுக்கப்பட்டது. மசோதாக்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சபை உறுப்பினர்கள் கேசவ பிரசாத், சரவணா, பூஜார், நவீன், ரவி, புட்டண்ணய்யா, பிரதாப் சிம்ஹ நாயக், ரவிகுமார், சுதாமதாஸ், மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி மசோதா குறித்து பேசினர்.
அதன்பின் இந்த மசோதாக்களை சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி அங்கீகரிப்பட்டதாக அறிவித்தார்.