'பெங்களூரு தர்ஷினி' குறித்து ரீல்ஸ் வீடியோ புதுமையாக மாற்ற பி.எம்.டி.சி., யோசனை
'பெங்களூரு தர்ஷினி' குறித்து ரீல்ஸ் வீடியோ புதுமையாக மாற்ற பி.எம்.டி.சி., யோசனை
ADDED : ஜூலை 08, 2024 06:28 AM

பெங்களூரு: 'பெங்களூரு தர்ஷினி' சுற்றுலா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, பி.எம்.டி.சி., யோசித்து வருகிறது.
மைசூரில் உள்ள சுற்றுலா தலங்களை, பயணியர் சுற்றி பார்ப்பதற்கு வசதியாக, கே.எஸ்.ஆர்.டி.சி., சார்பில், 'மைசூரு தர்ஷினி' என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இது, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் சுற்றுலா பயணியர் அழைத்து செல்லப்பட்டு, பல்வேறு இடங்களை சுற்றிப் பார்க்கும் திட்டமாகும்.
2015ல் துவக்கம்
இதுபோல் பெங்களூரில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்ப்பதற்கு வசதியாக, 2015 ல் 'பெங்களூரு தர்ஷினி' சுற்றுலா திட்டத்தை பி.எம்.டி.சி., ஆரம்பித்தது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்சில் சுற்றுலா பயணியர் அழைத்து செல்லப்படுவர்.
ராஜாஜி நகர் இஸ்கான் கோவில், விதான் சவுதா, திப்பு சுல்தான் அரண்மனை, கவி கங்காதேஸ்வரா கோவில், புல் டெம்பிள், தொட்ட கணபதி கோவில், கர்நாடக சில்க் எம்போரியம், எம்.ஜி., ரோடு, ஹலசூரு ஏரி, கப்பன் பார்க்.
விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகம், வெங்கடப்பா ஆர்ட் கேலரி, அரசு அருங்காட்சியகம், கர்நாடகா சித்ரகலா பரிஷத் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு மீண்டும் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் சுற்றுலா பயணியர் விடப்படுவர்.
இந்த சுற்றுலா தொகுப்பிற்கு பெரியவர்களுக்கு 400 ரூபாயும், குழந்தைகளுக்கு 300 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் நல்ல வரவேற்பு இருந்தது. நாட்கள் செல்ல செல்ல வரவேற்பு குறைய ஆரம்பித்தது.
கொரோனா நேரத்தில் பெங்களூரு தர்ஷினி திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பின் 2021ல் திட்டம் மீண்டும் துவங்கப்பட்டாலும், சுற்றுலா பயணிரிடம் பெரிய வரவேற்பு ஏற்படவில்லை.
பெங்களூரு தர்ஷினி பயணத்திற்காக தினமும் சிறப்பு பஸ்கள் தயாராக இருக்கும். ஆனால் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும். வார இறுதி நாட்களில் மட்டும் ஓரளவு கூட்டம் வருகிறது.
இது குறித்து பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குனர் ராமச்சந்திரன் கூறியதாவது:
பெங்களூரில் சுற்றுலா தலங்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் பெங்களூரு தர்ஷினி திட்டம் பற்றி மக்களுக்கு சரியான புரிதல் இல்லை. இந்த திட்டம் பற்றி மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்று யோசித்து வருகிறோம். 'ரீல்ஸ் வீடியோ'க்கள் உருவாக்கி அதை சமூக வலைதளங்களில் பகிரும் திட்டமும் எங்களிடம் உள்ளது.
தீவிர யோசனை
வேற என்ன செய்யலாம் என்று ஆலோசித்து, இந்தத் திட்டத்தை முன்னெடுத்து செல்வோம். புதிய சுற்றுலா தலங்களையும், பெங்களூரு தர்ஷினி திட்டத்தில் சேர்ப்பது குறித்தும் ஆலோசிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றுலா பயணியரை அழைத்து செல்லும் பெங்களூரு தர்ஷினி பஸ். கோப்பு படம்.