பெங்களூரு மாநகராட்சிக்கு ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை! ரூ.1,700 கோடி பில் பாக்கியால் போராட முடிவு
பெங்களூரு மாநகராட்சிக்கு ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை! ரூ.1,700 கோடி பில் பாக்கியால் போராட முடிவு
ADDED : ஜூலை 06, 2024 06:13 AM
பெங்களூரு: பாக்கி வைத்துள்ள பில் தொகை, 1,700 கோடி ரூபாயை செலுத்தாவிட்டால், மேற்கொண்டுள்ள பணிகளை நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக, பெங்களூரு மாநகராட்சிக்கு ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூரு மாநகராட்சி பல ஆண்டுகளாக, பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறுகிறது. சாலை சீரமைப்பு, சாலை பள்ளங்களை மூடியது, ஒயிட் டாப்பிங், ஏரிகள், பூங்கா பராமரிப்பு, தெரு விளக்குகள், மின் கம்கங்கள் நிர்வகிப்பு உட்பட, பல்வேறு பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பில் தொகை பாக்கிவைத்துள்ளது.
தற்கொலை
நிதி நிறுவனங்கள், வங்கிகளில் கடன் பெற்று பணிகளை நடத்தி முடித்த ஒப்பந்ததாரர்கள், பில் தொகையை கேட்டு அலையாய் அலைகின்றனர்.பில் தொகை கிடைக்கவில்லை என்பதால், மனம் நொந்து ஒப்பந்ததாரர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்ட உதாரணங்களும் உள்ளன.
பணம் கிடைக்காது என்பதால், மாநகராட்சி பணிகள் தொடர்பான டெண்டர்களில் பங்கேற்க, ஒப்பந்ததாரர்கள் தயங்குகின்றனர். ஒப்பந்ததாரர் கிடைக்காமல், பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மாநகராட்சி சகவாசமே வேண்டாம் என, பலரும் கூறுகின்றனர். மாநகராட்சி டெண்டர் என்றாலே, தலை தெறிக்க ஓடுகின்றனர்.
ஒவ்வொரு முறையும், மாநில அரசிடம் நிதியுதவி பெற்று, ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி பில் தொகை வழங்கியது. தன் சொத்துகளை வெளிநாட்டு வங்கிகளில் அடமானம் வைத்து, கடன் வாங்கி ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கியது.
இப்போதும் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பில் பாக்கி உள்ளது. இந்த தொகையை அளிக்கும்படி, ஒப்பந்ததாரர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர்.
வாக்குறுதி திட்டங்களுக்கே, பெரும்பகுதி பணத்தை செலவிடும் அரசு, மாநகராட்சிக்கு நிதியுதவி வழங்கும் சூழ்நிலையில் இல்லை. ஆனால் தங்களுக்கு பில் பாக்கியை வழங்கும்படி ஒப்பந்ததாரர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். பில் பாக்கி வழங்காவிட்டால், அனைத்து பணிகளையும் நிறுத்துவதாக எச்சரித்துள்ளனர்.
ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கை:
ஏற்கனவே ஒப்பந்ததாரர்கள், ஒன்பது கோரிக்கைகளை பெங்களூரு மாநகராட்சியிடம் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மாதங்களாகியும் பதில் வரவில்லை. முதல்வர், துணை முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்திலும் கூட, எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினோம். தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், ஒப்பந்ததாரர்களை அலட்சியம் செய்கிறார்.
இரண்டு ஆண்டுகளாக, எங்களுக்கு 1,700 கோடி ரூபாய் பில் பாக்கி உள்ளது. பணம் இல்லாமல் எங்களால் பணிகளை நடத்த முடியவில்லை. எனவே ஜூலை 8ல், சாலை பணிகள், ஒயிட் டாப்பிங், ஏரி, மழைநீர் கால்வாய் சீரமைப்பு உட்பட, அனைத்து பணிகளையும் நிறுத்த முடிவு செய்துள்ளோம்.
தீர்வு காண வேண்டும்
மாநகராட்சி பொறியாளர்கள், லஞ்சம் கொடுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும், பில் தொகையை வழங்குகின்றனர். லஞ்சம் கொடுக்க மறுப்போருக்கு பில் தொகையை நிறுத்தி வைத்துள்ளனர்.
சில ஒப்பந்ததாரர்களுக்கு, 75 சதவீதம் தொகையை கொடுத்தனர். மிச்சமுள்ள 25 சதவீதம் பணம், லஞ்சம் கொடுத்தால்தான் பொறியாளர்கள் கொடுக்கின்றனர்.
நாங்கள் வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று, இயந்திரங்கள், உபகரணங்களை வாங்கி பணிகளை நடத்துகிறோம். ஆனால் அரசு பில் தொகையை கொடுக்காமல், எங்களை கடன் சுழலில் தள்ளுகிறது.
இந்த விஷயத்தில் முதல்வர், துணை முதல்வர் தலையிட்டு, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் பணிகளை நிறுத்தி, போராட்டத்தில் இறங்குவோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.