ஐ.ஏ.எஸ்., ஞானேந்திரகுமார் ' சஸ்பெண்ட்' ஈ.டி.,யில் சிக்காமல் தப்ப வைத்த அதிகாரிகள்
ஐ.ஏ.எஸ்., ஞானேந்திரகுமார் ' சஸ்பெண்ட்' ஈ.டி.,யில் சிக்காமல் தப்ப வைத்த அதிகாரிகள்
ADDED : செப் 04, 2026 03:43 AM

பெங்களூரு: கால்நடை மருத்துவ அதிகாரி தேர்வு முறைகேடு வழக்கில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திர குமார் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.
கர்நாடகாவில் கால்நடை மருத்துவ அதிகாரி தேர்வு முறைகேடு பற்றி விசாரிக்கும் சி.ஐ.டி., போலீசார், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திர குமார் கங்குவார், பா.ஜ., பிரமுகர் பசவராஜ் கன்னாலே ஆகியோரை கைது செய்தனர். காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் ஞானேந்திர குமாரை, சி.ஐ.டி., கைது செய்ததன் பின்னணியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது கால்நடை மருத்துவ அதிகாரி தேர்வு முறைகேடு தொடர்பாக, கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாகுகர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதும், கே.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டாளராக இருந்த, தனது வீட்டில் தான் அடுத்த சோதனை என்று ஞானேந்திர குமாருக்கு தெரிந்தது.
அறைந்த காதலி இதனால் அவர் இரவோடு, இரவாக பெட்டி, படுக்கையுடன் டில்லிக்கு புறப்பட்டார். அரசுக்கு மின்னஞ்சலில் அனுப்பிய கடிதத்தில், 'தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. 15 நாட்கள் விடுமுறை வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். பிரதான மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். ஆனால் இன்னொரு மொபைல் போனை மட்டும் பயன்படுத்தினார்.
டில்லியில் இருந்து நொய்டா சென்ற ஞானேந்திர குமார், தனது காதலிக்கு போன் செய்து நொய்டாவில் உள்ள ஹோட்டலுக்கு வருமாறு கூறினார். அங்கு இருந்த போது, கர்நாடகாவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் இருந்து, ஞானேந்திர குமாருக்கு போன் வந்துள்ளது. 'உன்னை , அமலாக்கத்துறை தொடர்ந்து கண்காணிக்கிறது. நீ இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டனர். தப்பி சென்று விடு' என்று கூறியுள்ளனர்.
இதுபற்றி ஞானேந்திர குமார் தனது காதலியிடம் கூறியுள்ளார். கோபம் அடைந்த காதலி, ஞானேந்திர குமாரை கன்னத்தில் அறைந்து விட்டு அறையில் இருந்து வெளியேறியுள்ளார். பின், டில்லி சென்ற ஞானேந்திர குமார் அங்கு தங்கி உள்ளார்.
இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து சென்ற ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், ஞானேந்திர குமாரை சந்தித்து, 'ஒருவேளை அமலாக்கத்துறை உங்களை கைது செய்தால், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி எல்லாம் பதில் அளிக்க வேண்டும்' என்று பயிற்சி கொடுத்துள்ளார்.
பின், டில்லியில் இருந்து இலங்கைக்கு ஞானேந்திர குமார் சென்றுள்ளார்.
அங்கு இரண்டு நாட்கள் இருந்து விட்டு, கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து பெங்களூரு வந்து, ரிசார்ட் ஒன்றில் தங்கியுள்ளார். சில அரசியல் பிரமுகர்கள் அறிவுரையின்படி, சி.ஐ.டி., அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜரானார்.
இரண்டாவது சம்மன் கடந்த 30 ம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விட்டு வீட்டிற்கு, காரில் சென்றார். அப்போது ஞானேந்திர குமாரை தொடர்பு கொண்ட சிலர், 'வீட்டிற்கு செல்ல வேண்டாம். உங்களை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்து கொண்டு உள்ளனர்' என்று கூறி, அவரை மீண்டும் சி.ஐ.டி., அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
வி சாரணையின் போது சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறி, ஞானேந்திர குமாரை, சி.ஐ.டி., கைது செய்தது. அதாவது அமலாக்கத்துறையிடம், ஞானேந்திர குமார் சிக்கி விட கூடாது என்பதில், அரசியல் பிரமுகர்கள் உறுதியாக இருந்தது இதன்மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஊழலில் ஈடுபட்ட ஞானேந்திர குமார் மீது, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று வழக்குப்பதிவாகி உள்ளது. பசவராஜ் கன்னாலேயை சஞ்சய்நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று, சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தினர்.
அவரது மொபைல் போனை ஆய்வு செய்த போது, மத்திய, மாநிலத்தின் முக்கிய அரசியல்வாதிகள் 50 பேரின் பெயர்கள், அவரது அழைப்பு பட்டியலில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணைக்கு ஆஜராக சிவசங்கரப்பா சாகுகருக்கு, சி.ஐ.டி., 2 வது சம்மன் அனுப்பியுள்ளது.
இதற்கிடையே, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திர குமார் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.
