/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'போக்குவரத்து அபராதம்' ரூ.5.6 லட்சம் இழந்த நபர்
/
'போக்குவரத்து அபராதம்' ரூ.5.6 லட்சம் இழந்த நபர்
ADDED : மார் 01, 2025 05:13 AM
பெங்களூரு: போக்குவரத்து அபராதம் செலுத்துவதற்கு செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறி, கிரெடிட் கார்டில் இருந்து 5.6 லட்சம் ரூபாய் அபகரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் நாளுக்கு நாள் சைபர் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. சைபர் கொள்ளையர்கள் பல விதங்களில் பணத்தை சுலபமாக கொள்ளை அடித்துச் சென்று விடுகின்றனர். போலீசார், எவ்வளவோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினாலும், சைபர் மோசடிகள் குறையவே இல்லை.
பெங்களூரு பேட்ராயனபுராவை சேர்ந்த நபருக்கு, கடந்த மாதம் 20ம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபரிடம் இருந்து வாட்ஸாப்பில் குறுந்தகவல் வந்துள்ளது. அதில் 'நீங்கள் வாகனத்தில் சென்றபோது போக்குவரத்து விதிகளை மீறி விட்டீர்கள். இதற்கான அபராத தொகையை, 'வாகன பரிவன்' எனும் செயலி மூலம் கட்டவும்' என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த செயலிக்கான லிங்கையும் கொடுத்துள்ளனர். மேலும், இதில் சரியான வாகன பதிவெண்ணையும் குறிப்பிட்டு இருந்தனர். இதை பார்த்த அவர், 'போக்குவரத்து போலீசார் தான் குறுந்தகவல் அனுப்பி உள்ளனர்' என நம்பி உள்ளார்.
இதனால், அந்த லிங்கின் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் அவரது கிரெடிட் கார்டில் இருந்து 5.6 லட்சம் ரூபாய் அபகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதையும் அறிந்து வருத்தத்தில் ஆழ்ந்தார். இது குறித்து கடந்த மாதம் 22ம் தேதி, பெங்களூரு மேற்கு சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணையில், அவர் பதிவு செய்த செயலி மூலமே கிரெடிட் கார்டில் இருந்து பணம் திருடப்பட்டு உள்ளது தெரிய வந்தது. போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.
போக்குவரத்து விதிமீறல்களின் அபராத தொகைக்கான ரசீதுகள் வாட்ஸாப் மூலம் அனுப்பப்படாது. இது போன்ற சம்பவங்களில் யாரும் ஏமாற வேண்டாம் என போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.