ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திர குமார் கைது!: கால்நடை மருத்துவர் தேர்வு முறைகேட்டில் அதிரடி
ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திர குமார் கைது!: கால்நடை மருத்துவர் தேர்வு முறைகேட்டில் அதிரடி
ADDED : ஆக 30, 2026 11:27 PM

கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக இருந்த 400 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கு, கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரியில் தேர்வு நடத்தியது.
இந்த தேர்வில் பங்கேற்ற தேர்வர்களை இடைத்தரகர்கள் அணுகி, வேலை பெற்றுத்தர, 70 லட்சம் முதல், 80 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டுள்ளனர்.
இதற்காக முன்பணமாக, 40 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இரு தேர்வர்களிடம் பணம் பெற்று கொண்டு, ஓ.எம்.ஆர்., எனும் விடைத்தாள்களை திருத்தி முறைகேடு செய்ததாக, அப்போதைய தேர்வாணைய கட்டுப்பாட்டாளராக இருந்த ஞானேந்திர குமார் கங்குவார் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, சி.ஐ.டி., விசாரணை நடத்தி வருகிறது.
அமலாக்கத்துறை இது தொடர்பாக, சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் பற்றி, அமலாக்கத் துறையும் விசாரிக்கிறது.
இது தொடர்பாக, கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாகுகர் உள்ளிட்டோர், சி.ஐ.டி., விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையில், கடந்த 22ம் தேதி ஞானேந்திர குமார் வீட்டிற்கு அமலாக்க துறை அதிகாரிகள் சென்றபோது, அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அங்கிருந்த காவலாளி, 'என்னிடம் சாவி இல்லை' என்று கூறினார்.
இதையடுத்து, 'டூப்ளிகேட்' சாவி செய்யும் நபரை வரவழைத்து, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவரை சாட்சியாக வைத்து, அவர் முன் கதவை திறந்தனர். இதை வீடியோவும் எடுத்து கொண்டனர்.
பின், வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர். சோதனை இரவு வரை நீடித்தது.
மாயம் 'தந்தைக்கு உடல் நிலை சரியில்லை' என்று கூறி, 15 நாட்கள் விடுப்பில் சென்ற ஞானேந்திரகுமார் மாயமானார்.
அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. விசாரணைக்கு ஆஜராகும்படி, அவரது வீட்டில் அமலாக்கத்துறை, சி.ஐ.டி., போலீசார் 'சம்மன்' ஒட்டி சென்றனர்.
இந்நிலையில், கடந்த 28ம் தேதி சி.ஐ.டி., விசாரணைக்கு ஞானேந்திரகுமார் ஆஜரானார். பல்வேறு கேள்விகளுக்கு, 'தெரியாது' என்றே பெரும்பாலும் பதிலளித்தார். முதல் நாள் அவரிடம், மூன்று மணி நேரம் விசாரணை நடத்திய பின், மறுநாள் ஆஜராகும்படி கூறி அனுப்பி வைத்தனர்.
மீண்டும், நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜரான போதும், நள்ளிரவு வரை கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு, தெரியாது என்றே கூறியுள்ளார்.
கைது விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாலும், அவர் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதன் அடிப்படையிலும், நேற்று அவரை சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரை, கோரமங்களாவில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, இன்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
