பா.ஜ.,வின் பாதயாத்திரை வழி மாற்றம்: அரசியலுக்காக ரெட்டி - ஸ்ரீராமுலு திட்டம்
பா.ஜ.,வின் பாதயாத்திரை வழி மாற்றம்: அரசியலுக்காக ரெட்டி - ஸ்ரீராமுலு திட்டம்
ADDED : ஆக 27, 2026 07:24 PM

பல்லாரி: அமைச்சர் நாகேந்திரா பதவி விலக கோரி, பா.ஜ., அறிவித்துள்ள பாதயாத்திரை பாதையின் வழி, திடீரென மாற்றப்பட்டுள்ளது.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், அமைச்சர் நாகேந்திரா பதவி விலக கோரி, வரும் 1ம் தேதி முதல், 10ம் தேதி வரை, பா.ஜ., சார்பில் பாதயாத்திரை நடக்கிறது.
ராய்ச்சூரின் குருகுண்டாவில் இருந்து லிங்கசுகூர், மஸ்கி, சிந்தனுார், சிருகுப்பா, தெக்கலகோட், சிண்டகேரி வழியாக பல்லாரி வரை, 170 கி.மீ., துாரம் பாதயாத்திரைக்காக பாதை வெ ளியிடப்பட்டு இருந்தது.
ஆனால், தற்போது பாதயாத்திரை செல்லும் பாதையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிருகுப்பாவில் இருந்து காரடகி, கங்காவதி, கம்பளி, சண்டூர் வழியாக பாதயாத்திரை நடக்கும் என்று, கங்காவதி எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி அறிவித்துள்ளார்.
பல்லாரி அரசியலில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜனார்த்தன ரெட்டி, பக்கத்து மாவட்டமான கொப்பாலிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்துள்ளார்.
அம்மாவட்டத்தில் உள்ள கங்காவதி தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக உள்ள அவர், அடுத்த தேர்தலில் பல்லாரி, கங்காவதியில் உள்ள தொகுதிகளில் கட்சியை வெற்றி பெற நினைக்கிறார்.
இதுபோல, ஜனார்த்தன ரெட்டியின் நெருங்கிய நண்பர் ஸ்ரீராமுலு, கம்பளி தொகுதி மீது கண் வைத்துள்ளார். இதனால் கங்காவதி, கம்பளி வழியாக பாதயாத்திரை வருவது போன்று, பயண வழியை மாற்றி, அரசியல் லாபம் பெற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
