பெங்களூரு நகரில் பேனர்களை கட்டுப்படுத்த போலீஸ், மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை
பெங்களூரு நகரில் பேனர்களை கட்டுப்படுத்த போலீஸ், மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை
ADDED : ஆக 01, 2024 12:41 AM

பெங்களூரு : பெங்களூரு நகரில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை வாழ்த்தி பேனர்கள், கட் - அவுட்டுகள் வைக்கப்படுகின்றன. ஆனால் அந்த பேனர்கள், கட்- - அவுட்டுகளை அகற்றாமல் விட்டு விடுகின்றனர்.
சில நேரங்களில் பேனர்கள், கட் -- அவுட்டுகள் சரிந்து விழுந்து வாகனங்களில் செல்வோர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. பேனர்கள், கட் -- அவுட்டுகள் வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கர்நாடக அரசுக்கு, உயர் நீதிமன்றம் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநகராட்சி அனுமதி பெற்று சிலர் பேனர்கள் வைத்தாலும், பெரும்பாலானோர் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக பேனர்களை வைத்து வருகின்றனர்.
சட்ட விரோதமாக பேனர்கள் வைப்பதை தடுப்பது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், போலீஸ் கமிஷனர் தயானந்தா, மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பின், போலீஸ் கமிஷனர் தயானந்தா அளித்த பேட்டி:
பெங்களூரு நகரில் அங்கீகரிக்கப்படாத பேனர்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பேனர்களை அச்சடிக்கும் பிரின்டிங் நிறுவனங்களுக்கு சென்று, அனுமதியின்றி பேனர்கள் அடித்துக் கொடுக்க கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இரவு நேரத்தில் தான், பேனர்கள் வைக்கப்படுகின்றன. இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, பேனர்கள் வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பர். சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பது குறித்து 1533 சென்ற ஹெல்ப்லைன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சியின் வருவாய் துறை சிறப்பு கமிஷனர் முனீஷ் மவுத்கில் கூறுகையில், ''ஜூலை 1ம் தேதியிலிருந்து, அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதுவரை 8,500 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. 180 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
''மாநகராட்சியின் அதிகார வரம்பில் பேனர்கள் வைக்க, பிரிவு 158 ன் கீழ் அனுமதி கட்டாயம். அனுமதியின்றி பேனர் வைப்போர் மீது கட்டாயம் வழக்கு பதிவு செய்யப்படும்,'' என்றார்.
பெங்களூரு நகரில் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்படுவதை தடுப்பது தொடர்பாக, போலீஸ், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.